Sports

தோனி பேட்களை மாற்றி விளையாடுவது ஏன்? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தோனியின் நண்பர்!

இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக ஜொலித்தவர் தோனி. தோனி எப்போதெல்லாம் நன்றாக விளையாடவில்லையோ அப்போதெல்லாம் அவரது ஒய்வு குறித்து கருத்துகள் வலம் வரும். தனது ஆட்டத்தின் மூலம் அவற்றுக்கு தோனி பதிலளிப்பார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது முதலே, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் வழக்கமான ஆட்டம் வெளிப்பட தவறிய நிலையில் தோனியின் ஒய்வு குறித்து கருத்துகள் மீண்டும் வலம் வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டியே, சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.

தோனியின் ஒய்வு குறித்து பல்வேறு கருத்துகள் ஊடகங்களிலும், சமூக வலைத‌ளங்களிலும் வலம் வந்த நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரும், மேலாளருமான அருண் பாண்டே கூறிய செய்தி தோனி ரசிகர்களை கலங்கடித்துள்ளது.

சமீப காலமாக பேட்டிங் செய்யும்போது இன்னிங்ஸ்களின் நடுவே தோனி பேட்களை மாற்றி விளையாடுவதே, அவர் விரைவில் ஓய்வு பெறவுள்ளதற்கான ஒரு விதமான அறிகுறிதான் என்று அருண் பாண்டே கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ''தோனி மிகவும் பரந்த உள்ளம் கொண்டவர். போட்டிகளின் போது வெவ்வேறு நிறுவனங்களின் ‘லோகோ’ பதித்த பேட்டுகளை கொண்டு விளையாடுவதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு நிலைகளை கடந்து வந்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்ககவே அவர் அடிக்கடி பேட்டினை மாற்றி விளையாடுகிறார்.

பேட் பயன்படுத்தும் விளம்பரத்திற்காக தோனி எந்தவிதமான ஊதியத்தையும் வாங்கவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி காலத்தில் உள்ள தோனி தான் விரும்பி விளையாடிய பேட்களுக்கும்,அதன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்தான் தற்போது பேட்களை மாற்றி விளையாடுகிறார்'' என்று அருண் பாண்டே கூறியுள்ளார். இந்தச் செய்தியறிந்து தோனி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.