Sports

IPL 2019 : ஐதராபாத்தை வீழ்த்தி மீண்டும் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு வந்த சென்னை அணி! 

ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதியது. ஹைதராபாத் அணியில் வில்லியம்சனுக்கு பதிலாக ஷகிப் அல்-ஹசன் களமிறங்கினார்.சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஹர்பஜன்சிங் சேர்க்கப்பட்டார்.இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி களமிறங்கியது. ஹர்பஜன் பந்துதுவீச்சில் பேர்ஸ்டோ டக் அவுட்டாகி சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தில் ஈடுப்பட்டார்.

வார்னர் மற்றும் பாண்டே ரன் குவிப்பில் அசத்தினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் வார்னர் 57 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். அடுத்த வந்த விஜய் ஷங்கர் 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. மனிஷ் பாண்டே 83 ரன்களுடனும், யூசுப் பதான் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 176 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் அடியெடுத்து வைத்தனர். முதல் ஓவரை வாட்சன் மெய்டனாக்கினார்.பிளிஸ்சிஸ் 1 ரன்னில் ரன்-அவுட் ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு வந்த சுரேஷ் ரெய்னா, சந்தீப் ஷர்மா வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடித்தார். ஆனால் ரஷித்கானின் பந்து வீச்சில் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார் ரெய்னா.

மறுமுனையில் ஷேன் வாட்சன் அமர்க்களப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய வாட்சன் சதத்தை 4 ரன்னில் நழுவ விட்டார். வாட்சன் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா வீசினார். இதில் கேதர் ஜாதவ் ஒரு சிக்சர் அடிக்க முதல் 3 பந்தில் 8 ரன் வந்தது. 4-வது பந்தில் அம்பத்தி ராயுடு (21 ரன்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் 5-வது பந்தில் ஜாதவ் ஒரு ரன் எடுத்து சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11-வது லீக்கில் விளையாடி 8-வது வெற்றியை பெற்ற சென்னை அணி இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், ஏறக்குறைய பிளே-ஆப் வாய்ப்பையும் உறுதி செய்தது. அத்துடன் ஐதராபாத்திடம் முந்தைய லீக்கில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.