Politics

“டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்க!” : மனிதக் கழிவு வீசப்பட்ட விவகாரத்தில் உத்தரவு!

அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளி ஆசிரியர் அறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதி ரீதியாக இரு பிரிவாக ஆசிரியர்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறையில், நவம்பர் 10-ஆம் தேதி மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவரான நீதிபதி எம்.வி.முரளிதரன் மற்றும் உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜெயங்கொண்டம் துணைக் கண்காணிப்பாளர் அறிக்கையாக அளிக்கவும் உத்தரவிட்டனர்.

Also Read: பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தக் கூடாது! - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!