Politics

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்.. உருவபொம்மையை எரித்து திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் என்பவர், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்த விவகாரத்தில் விசாரணையே செய்யாமல், தவெக எம்.எல்.ஏ-வுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு தவெக அமைச்சர்கள் வரிந்து கட்டி வந்தனர். முக்கியமாக அமைச்சர் ராஜ்மோகன் “புகார் வரவில்லை, வந்தால் நடவடிக்கை எடுப்போம்” என திமிராக பேசிய காணொளி தமிழ்நாடு முழுவதும் மக்களை பெரும் கொதிப்படையச் செய்தது.

அமைச்சர் நிர்மல் குமாரோ, “சமூக ஊடகங்களில் வந்த செய்தியெல்லாம் வைத்துக்கொண்டு பேச வேண்டாம். ஆதாரம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதமே ஆட்சியர் புகாரளித்து உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 4 மாதமாக இந்தப் புகாரை கிடப்பில் போட்டு, நடவடிக்கை எடுக்காமல், மெத்தனப்போக்குடன் நடந்துள்ளது தவெக அரசு என்பது வெட்ட் வெளிச்சமாகி விட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு தான் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமைதிகாத்த தவெக அரசு, நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை கோரியும், அவர் பதவி விலகக் கோரியும் அவரது உருவ பொம்மையை எரித்து கள்ளக்குறிச்சி திமுக மகளிர் அணியினர் கொட்டும் மழையிலும் இன்று (நவ.25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரளான பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தவெக அரசுக்கு எதிராகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Also Read: ஆட்சியர் விவகாரத்தில் 116 நாட்களாக முதலமைச்சர் விஜய் தூங்கிக்கொண்டிருந்தாரா?: உதயநிதி ஸ்டாலின் சாடல்!