Politics

“கடந்த ஆண்டு 82.78% இருந்த தண்ணீர் இருப்பு... இன்று வெறும் 36.28% தான்!” : டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!

த.வெ.க ஆட்சியில் உரிய நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்காதது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தட்டிக்கழித்தது என பல்வேறு காரணங்களால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனைக் கண்டித்து, தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்ததாவது,

“தமிழ்நாட்டில் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 82.78% இருந்த நீர்த்தேக்கங்களின் இருப்பு, இன்று வெறும் 36.28%!

90 நீர்த்தேக்கங்களில் 39-ல் கால்வாசிக்கும் குறைவான தண்ணீரே உள்ளது!

டெல்டாவின் உயிர்நாடியான மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 82.876 டி.எம்.சி இருந்த நீர், தற்போது வெறும் 25.811 டி.எம்.சி மட்டுமே இருக்கிறது. கிட்டத்தட்ட 69% சரிந்துள்ளது!

காவிரி டெல்டாவில் சம்பா, தாளடி பயிர்கள் என்ன ஆகும்? சென்னையின் கோடைக்கால குடிநீர் நிலை என்ன?

மழையை மட்டுமே நம்பி வாழும் நிலைக்கு இன்று நமது விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தவறிய ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் கர்நாடகத்தில் உள்ள அவர்களின் கூட்டணி நண்பர்களிடம் சரியான நேரத்தில் போராடி காவிரி நீரைப் பெற்றிருக்க வேண்டும் அல்லவா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளபடி த.வெ.க அரசு உடனடியாக உரிய நிவாரணத்தை வழங்குவதோடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான அவசர நீர்மேலாண்மைத் திட்டத்தையும் வெளியிட வேண்டும்!”

Also Read: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு... கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!