Politics

தீபாவளி நாளில் கொடூரம்... காவல் அதிகாரி படுகொலை! : த.வெ.க ஆட்சியில் தினம் தினம் திக்! திக்!

தீபாவளி அன்று, தேனியில் நிகழ்ந்த துயரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனி போலீஸ் டி.எஸ்.பி அலுவலத்தில் எழுத்தர் ஆக பணிபுரிந்து வந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் (Special Sub-Inspector of Police - SSI) செந்தில் குமார் (வயது 56). அவர், தீபாவளி அன்று, நவம்பர் 8 -ஆம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பும் போது படுகொலை செய்யப்பட்டார்.

தேனி சமதர்மபுரம் அருகே இரவு 10:30 மணிக்கு பொது மக்களுக்கு இடையூறாக சாலையை மறித்துப் பட்டாசு வெடித்து, சமூக வலைதளங்களில் ‘’ரீல்ஸ்’’ (Reels) பதிவிடுவதற்காகச் சிலர் சாகசங்களில் ஈடுபட்டனர்.

அந்த வழியே வந்த போது, போலீஸ் அதிகாரி செந்தில்குமார், ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை கண்டித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு நடந்தவற்றை தனது செல்போனில் விடியோ எடுத்தார். அப்போது, அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட, அந்தக் கும்பல் அவரைக் கொடூரமாக அடித்து உதைத்தது.

உடல் அசைவற்று தரையில் விழுந்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே, ஸ்பெஷல் சப்- இன்ஸ்பெக்டர் உயிர் மூச்சி நின்று போனது. அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்று சொன்ன பிறகும் செந்தில் குமாரை சராமாரியாக கொடூரமாக தாக்கி அடித்தே கொலை செய்தனர்.

காவல் துறையில் வேலைபார்த்த ஒரு அதிகாரிக்கே இந்த நிலையா? என்று அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். காவல் துறையை பற்றி எந்த அச்சமும் பயமும் இல்லாமல், போலீஸ் அதிகாரியையே அடித்துக் கொன்றது தேனி காவல் துறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீருடையில் இல்லாத போதும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போதை ஆசாமிகளைத் தட்டிக் கேட்ட ஒரு காவல் அதிகாரிக்கே வீதியில் பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரன சாமானிய மக்களின் நிலை என்ன? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: தீபாவளி நாளில் கொலைச் சம்பவங்கள்.. துக்க நாளான பண்டிகை நாள்!