
“ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைந்த ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை உடனடியாக பா.ஜ.க. வரவேற்றுள்ளதால், த.வெ.க. அரசு யாருக்குச் சார்பானது என்பது தெள்ளத் தெளிவாகிறது” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு,
மாநில உறவுகள்பற்றி அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கென ‘திராவிட மாடல்’ அரசின் மானமிகு மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவரும், சிறந்த பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இணைந்த மூவர் குழு. முதற்கட்ட பரிந்துரை – ஆய்வுகளை காலதாமதப்படுத்தாமல், தி.மு.க. ஆட்சியின்போதே அளித்துவிட்டனர்.
புதிதாக வந்த அரசும், முதலமைச்சரும் அந்த அறிக்கையைப் புரட்டிக்கூடப் பார்த்திருப்பார்களா என்பது நமது அய்யம்.
நாம் முழுவதும் படித்து, அதன் மீது ஆய்வரங்கத்தினை நடத்த முடிவு செய்திருந்தோம். அருமையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான அரிய ஆவணம் அந்த முதற்கட்ட அறிக்கை.
ஏற்கெனவே, முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்தபோது, ஒன்றிய- மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் மாநில சுயாட்சி குறித்து ஆராய 1969 செப்டம்பர் 22 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதியரசர் டாக்டர் பி. வி. ராஜமன்னார் தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜமன்னார் குழு அமைத்தார்.
அதன் உறுப்பினர்களாக மேனாள் தலைமை நீதியரசர் ஜஸ்டிஸ் பி. சந்திரா (ரெட்டி), பிரபல கல்வியாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் சர். ஏ. லட்சுமணசாமி (முதலியார்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

‘மாநில சுயாட்சி உரிமைகள் பெருக்கம் ஏன் தேவை?’ என்பதை விளக்கும் நீதியரசர் ராஜமன்னார் குழு 1971 ஆம் ஆண்டு தனது வரலாற்றுப் புகழ்பெற்ற அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தது.
அந்த அறிக்கையில்,
ஒன்றிய அரசிடம் மட்டுமே அதிகாரங்கள் குவிந்திருப்பதைத் தடுத்து, உண்மையான கூட்டாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு, வெளியுறவு, பன்னாட்டு வர்த்தகம் மற்றும் நாணயம் போன்ற முக்கியத் துறைகள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருக்க வேண்டும் என்றும்,
மாநில அரசுகளைத் தன்னிச்சையாகக் கலைக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 மற்றும் 365 ஆகிய பிரிவுகளை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,
மாநிலங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களை மாநிலங்களே திரட்டிக் கொள்ளும் வகையில், நிதிப் பங்கீடு மாற்றி அமைக்கப்பட வேண்டும்; தற்காலிகமாக இருக்கும் நிதி ஆணையத்தை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றவேண்டும் என்றும்,
கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் மின்சாரம் போன்ற உள்ளூர் மக்களுக்கு நெருக்கமான துறைகளில் மாநில அரசுகள் தடையின்றிச் செயல்பட, ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள பல முக்கிய அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
‘மாநில சுயாட்சி தீர்மானம்!
இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், ‘‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’’ என்ற முழக்கத்துடன், 1974 ஏப்ரல் 16 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மாநில சுயாட்சி தீர்மானம்' நிறைவேற்றப்பட்டது.
அந்த அடிக்கட்டுமானத்திற்கு மேல்தளம்தான் தற்போது கலைக்கப்பட்ட மூவர் குழு; அறிக்கை, பரிந்துரைகள்.
‘மாற்றம்’ என்று கூறி, வந்தவர்கள் இதனைக் கலைத்து, மாநில சட்டக் குழுவே (State Law Commission) பார்த்துக் கொள்ளும் என்று கூறியதைக் கேட்டு, சட்ட நிபுணர்கள் சிரிப்பார்கள்!
ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி, மாநிலங்களே இருக்கக் கூடாது.
கூட்டாட்சிக்குப் பதில், ஒற்றை ஆட்சியே இருக்கவேண்டும் (Not Federal Government but only Unitary Government) என்ற கொள்கை நிலைப்பாட்டை மறைமுகமாக ஆதரிப்பது அல்லாமல், வேறு என்ன?
தமிழ்நாட்டை டில்லிக்குக் கப்பம் கட்டும் சிற்றரசாக ஆக்குவதற்கு ஒன்றிய அரசுக்குக் ‘சரணம்’ பாடுவதல்லாமல், வேறு என்ன?
ஆணையம் கலைக்கப்பட்டதை உடனடியாக, பா.ஜ.க. வரவேற்றுள்ளதே, இது யாருக்குச் சார்பானது என்பதை எடுத்துக் காட்டுகிறதே!
இதை எதிர்பார்த்தே, மானமிகு பேராசிரியர் நாகநாதன் அவர்கள், புதிய ஆட்சி வந்ததும், தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டார்; அவர் சுயமரியாதை வீரர் ஆயிற்றே!
மாற்றம், மாற்றம் என்பது இதுதானோ? இது தடுமாற்றம் அல்லவா! உரிமை முழக்கக் குரல் இனி மெல்ல மெல்ல கேட்கா நிலைதான் ஏற்படும். தி.மு.க.வின் சாதனைகள், பெருமைகள் இப்போது விளங்குகிறது! நிழலின் அருமை, வெயிலில்தான் தெரியும்!






