Politics

ஒரே நாளில் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளா..? ஆசிரியர்களை சோதிக்கும் த.வெ.க அரசு!

ஆசிரியர்களின் பணிச்சுமையைப் புரிந்து கொள்ள வேண்டிய அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணையிலேயே அவர்களை திணறடிப்பதா? என்று த.வெ.க அரசுக்கு ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், 2009 (RTE Act) தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, இந்தச் சட்டம் வருவதற்கு முன்னர் இருந்தே, அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், இந்த சட்டம் வந்த பிறகும் அதற்கு முன்னரும் தனியார் சுய நிதிப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுடைய பணியைத் தொடரவும் பதவி உயர்வுக்கான தகுதியைப் பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில்தான் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வுக்கு அக்டோபர் 27 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 19 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் http://www.trb.tn.gov.in விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் TNTET Paper-I என்ற முதல் தாள் தேர்வையும், பட்டதாரி ஆசிரியர்கள் TNTET Paper-II என்ற இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இந்த இரண்டு தேர்வினை எழுதும் தகுதியைப் பெற்றுள்ள ஆசிரியர்கள், இந்த இரண்டுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இவர்கள், டிசம்பர் 20 ஆம் தேதி தேர்வு எழுத வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாள் மாலையிலும் இரண்டாம் தாள் காலையிலும் எழுத வேண்டும் (TNTET Paper-I, 20-12-2026 Afternoon, TNTET Paper-II , 20-12-2026 Forenoon).

இங்கேதான் ஆசிரியர்களின் நியாயமான கேள்வி எழுகிறது. இரண்டு தாள்களையும் எழுத விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு இரண்டு தேர்வு மையங்களும் வெவ்வேறு இடங்களில் ஒதுக்கப்பட்டு இருந்தால் எப்படி தேர்வெழுத முடியும்? ஒரே மையத்தில் தேர்வு மையம் ஒதுக்கி இருந்தாலும் மதியம் சாப்பிட்டு விட்டு, சிறு ரிவிஷன் கூட இல்லாமல் பதட்டத்தோடுதான் பரிட்சை எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற உடல் உபாதை உள்ள வயது முதிர்ந்த ஆசிரியர்கள் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுதுவது என்பது இயலாத காரியம் என்றுச் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் இயந்திரங்கள் அல்ல. அவர்களுக்கும் உடல் சோர்வு உண்டு. மன அழுத்தம் உண்டு. குடும்பப் பொறுப்புகள் உண்டு. இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஒரே நாளில் இரண்டுத் தேர்வுகளை நடத்துவது ஆசிரியர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தாதா?

தேர்வு நடத்துவது என்பது வெறும் கேள்வித்தாளை வழங்கி விடைத்தாளைப் பெறுவது மட்டுமல்ல; தேர்வர்களின் நலன், பயண வசதி, போதிய இடைவெளி, தேர்வு மையங்களின் அமைப்பு ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆசிரியர்கள் மதிக்க வேண்டிய சூழல் இருக்கலாம். அத்தகைய தேர்வை எழுதுவதற்கான வாய்ப்பை எளிமையாகவும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும் த.வெ.க அரசு ஏற்படுத்த வேண்டாமா? அறிவுக்கண் திறக்கும் ஆசிரியர்களைத் தேர்வு என்ற பெயரில் அலைக்கழிக்கூடாது.

ஆசிரியர்களின் பணிச்சுமையைப் புரிந்து கொள்ள வேண்டிய அரசு, தேர்வு அட்டவணையிலேயே அவர்களை திணறடிப்பதா..? என்று த.வெ.க அரசுக்கு ஆசிரியர்களிடையே கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. இரண்டுத் தேர்வுகளையும் வெவ்வேறு நாட்களில் நடத்த வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க வேண்டும்.

Also Read: “கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கமிஷன்.. தவெக அரசின் தாரக மந்திரம்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி கண்டனம்!