Politics

மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் இ.பரந்தாமன் போட்டியிடுகின்றார்.

கடந்த வாரம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மதுராந்தகத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம்!

தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் உங்கள் தொகுதி இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான அவசியம் என்ன என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்நேரம் எல்லா தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், உங்களுக்கு உண்மையாக இருப்பார் என்று நினைத்து நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் என்ன செய்திருக்கிறார்? மீண்டும் உங்களிடமே வாக்கு கேட்டு வந்து நிற்கிறார். அவரது இந்தச் செயலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? கொள்கை நேர்மை இருக்கிறதா? ஒரு துளியாவது உங்கள் நலன் இருக்கிறதா?

வாக்களித்த உங்களது தன்மானத்தை விலைபேசி, ஆளுங்கட்சியின் குதிரைபேரத்துக்குப் துணைபோனவர்களுக்கு நீங்கள் என்ன பதிலடி தரப்போகிறீர்கள்? வாக்குகளுக்காக உங்களை மீண்டும் ஏமாற்ற அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளையும் பொய்களையும் நம்பப் போகிறீர்களா?

உங்கள் தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளராகப் போட்டியிடுபவர், பெட்டி வாங்கிவிட்டு உங்களிடம் நடிப்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்? ஆளுங்கட்சியில் சேர்ந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நடிக்கிறார்கள். அதுவா உண்மை? ஆளும்கட்சியாக இருந்தால்தான் நல்லது செய்யமுடியும் என்றால், எல்லா ஆட்சியிலும் எதிர்க்கட்சிகளில் இருக்கும் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சிக்குச் சென்றிருக்க வேண்டுமே! எதிர்க்கட்சி உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி என்பதற்காக எந்த ஓர் அரசும் அந்தத் தொகுதியைப் புறக்கணிக்க முடியாது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது என்று நினைத்து ஏமாற்றப் பார்க்கிறார்களா?

அடுத்து, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்க முயன்றதாக இல்லாத ஒரு கதையைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். உண்மையில், தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சியையே ஒழிப்பதற்கு ஆளுங்கட்சி வேட்பாளர் செய்த துரோகத்தின் விளைவுதான் இந்த இடைத்தேர்தல்.

இங்கு பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை யாராவது, “நாங்கள் வாக்குறுதி அளித்த மகளிருக்கான 2,500 ரூபாயைக் கொடுத்துவிட்டோம்; ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை உங்களுக்கு வழங்கிவிட்டோம் பாருங்கள்” என்று சொல்லி வாக்குக் கேட்டார்களா? இல்லையே! ஏனென்றால், த.வெ.க. ஆட்சி என்பது மக்களாகிய உங்களுக்கு நன்மை செய்வதற்காக அமைந்த ஆட்சி அல்ல; மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக அமைந்துள்ள ஆட்சி. தமிழ்நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறார்கள்.

விலைவாசியைக் கட்டுப்படுத்தச் சொன்னால், முதலமைச்சர் ஜோசியரின் ஆலோசனையைக் கேட்டு 1,200 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்டுவார். விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் போராடினால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் லண்டனுக்குச் சென்று கார் பந்தயம் பார்ப்பார். கொத்துக் கொத்தாகக் கொலைகள் நடந்தால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் “சிங்கப்பெண் படை” என்று ரீல்ஸ் வெளியிடுவார். இப்போதைக்கு அவர்களது கவனம் முழுவதும், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக எப்படி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் என்பதில்தான் இருக்கிறது.

எனவே, நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பிரச்சாரத்திற்கு வந்த ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் எப்படி விரட்டினீர்களோ, அதேபோன்று அக்டோபர் 6-ஆம் தேதி உங்கள் வாக்குகளால் அவர்களுக்குத் தோல்வியைக் கொடுத்து விரட்டியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் ரீல்ஸ் போட்டும், பொய்யான கதைகளைச் செய்திகளாக்கியும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் த.வெ.க.வுக்கு, மக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் ஏமாற்றத்தைத் தர வேண்டும். ஆளுங்கட்சியின் ஆணவத்துக்கும் அதன் வேட்பாளரின் துரோகத்துக்கும் நீங்கள் சரியான பாடம் புகட்டினால்தான், மீண்டும் நமது தமிழ்நாட்டில் எங்கேயும் இதுபோன்ற அநியாயம் நடைபெறாது.

உங்களுக்காகவும், இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மிக முக்கியமாக உங்களுக்கு உண்மையாக இருந்து மக்கள் பணியாற்றவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும், மக்களின் குரலாக, உண்மைக்கான பாதுகாவலனாக ஊடகங்களில் ஒலிக்கும் வழக்கறிஞர் இ. பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கு முன்பு, உங்களது மின்கட்டணத்தையும் மளிகைக் கடை பில்லையும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கிளம்புங்கள்! தன்மானமுள்ள தாராபுரம் மக்களே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்! என தெரிவித்துள்ளார்.

Also Read: திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. சிந்தித்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!