Politics
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
திரையில் கதைநாயகனாக வருபவர், தரையிலும் நாயகராக இருப்பார் என்ற வாக்காளர்களின் கண்மூடித்தனமாக எண்ண ஓட்டம், தற்போது தமிழ்நாட்டைப் பதம் பார்த்திருக்கிறது.
“மாற்றத்தை உருவாக்கிக் காட்டுவோம், இலவசங்களை தவிர்ப்போம், சட்டம் - ஒழுங்கைக் காப்போம்” என்ற வெற்றுப் பேச்சுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம், காலத்தால் கரைந்துள்ளது.
“இலவசத்தை ஏற்க வேண்டாம்” என்றும், “இலவசங்கள் நமக்கு எதற்கு?” என்றும் திரையிலும், மேடையிலும் பேசியக் கூட்டம், தேர்தலுக்கு முன்பு வாக்குறுதிகளாக பல இலவசங்களை அறிவித்தது.
பெரியாரை கொள்கைத் தலைவர் என்று பேச்சிற்கு பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்று பாசிசத்தை எதிர்த்து குரல் எழுப்பாமல் குனிந்து நிற்கும் தரம்கெட்டவர்களாக வெளிப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் என அடையாளப்பட்டு வந்த தமிழ்நாட்டில், “இப்போது இரண்டிற்கு இடையில்தான் போட்டியே... ஒன்று மின்வெட்டு! மற்றொன்று அரிவாள் வெட்டு!” என்பதான தலைகீழான நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் கண்டு ஒன்றிய ஆட்சியாளர்களும், பிற மாநிலங்களின் அதிகார வகுப்பினரும் தள்ளி நின்ற காலம் சென்று; தற்போது தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், மொழி உரிமையையும், அதிகார உரிமையையும் தாரைவார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டிற்கு தேடி வந்த முதலீடுகள் எல்லாம், அண்டை மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன.
சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறப்பு; அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து; தடையில்லா மின்சாரம்; அளவான விலைவாசி; சீரான சட்டம் - ஒழுங்கு; வெளிப்படைத்தன்மை; கேள்விகளுக்கு உரிய பதில்; சட்டமன்றத்தில் காக்கப்பட்டு வந்த மரபு; தனியார்மயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கைகள்; சமரசமற்ற மாநில உரிமைகள்; தமிழரின் பண்பாட்டை எடுத்துரைக்கும் தொல்லியல் செயல்பாடுகள்; எளியவர்களுக்கு உதவும் நிதிநிலை அறிக்கை; உழவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை என நீண்டு கொண்டிருக்கும் பட்டியலில் உள்ள சிறப்புகள், தற்போது மாற்றமடைந்து மழுங்கிச் சென்று வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதற்கு, தமிழ்நாடு அரசிடமே போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட த.வெ.க ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட, மக்கள் சாலைகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆதாரங்களற்ற அவதூறுகளால் சட்டமன்றமும், அதிகார மன்றமும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதை மக்கள் தோலுரித்தாலும், அதனை ஏற்க மனமற்றவர்களான வார விடுமுறை எடுக்கும் ஆட்சியாளர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.
இவ்வாறு ஒரு கட்டுரையில் அடக்க இயலாத அட்டூழியங்களை கைவசம் வைத்திருக்கும் த.வெ.க.வின் குதிரை பேரத்தால் தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன.
அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரக் காரணம் என்ன?
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ‘த.வெ.க.வின் குதிரை பேரம்’; பல வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ‘த.வெ.க.விற்கு எதிராக பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற பிறகு, பதவி மற்றும் பணத்தாசையில் கட்சி மாறி, மக்களை காவுவாங்க தயங்காத இரு அ.தி.மு.க.வினரின் நம்பிக்கைத் துரோகம்.’
இதே வரிகள், மீதம் காலியாக இருக்கும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொருந்தும்.
‘தொகுதிக்காக நன்மை செய்வார்கள்’ என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களை 4 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத தொகுதியைச் சேர்ந்தவர்களாக்கிய பெருமை, இந்த அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து, தாங்கள் வெற்றிபெற்ற அதே தொகுதிகளில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரைச் சேரும்.
இப்படியான நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்ய முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சென்ற மரகதம் மற்றும் சத்தியபாமா ஆகியோரை எதிர்த்து மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
“மக்கள் குறித்து கவலைப்படாமல், வென்ற பிறகு தொகுதிக்கு வராமல் கட்சி மாறி சென்ற நீங்கள், தற்போது மட்டும் ஏன் வருகிறீர்கள்?” என்ற கேள்வியை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
இச்சூழலிலும், வழக்கம்போல் எதையும் பொருட்படுத்தாமல், மக்களைக் குறித்து சிந்திக்காமல் ரீல்ஸ் செய்யத் தேவையானவற்றை மட்டும் செய்து வருகிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்.
இவரது ஆட்சியில் விலைவாசியிலும், குற்றங்களிலும்தான் வளர்ச்சியைக் காண முடிகிறதே தவிர, வேறெதிலும் இல்லை.
வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை ஈட்டுகிறோம் என தெரிவித்து ஒரு வாரம் லண்டன் சுற்றுலா சென்ற முதலமைச்சர் விஜய், இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு வந்தததை மக்களும் காணத்தவறவில்லை.
அடிக்கிற காற்றில் பறக்கும் காகிதம் விரைவில் கீழே விழும் என்ற சொற்றொடரை தற்போது, தமிழ்நாடே எடுத்துரைக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
-
விளம்பர வெறியால் கருகும் சம்பா பயிர்கள்.. விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய்.. - உதயநிதி விளாசல்!