Politics
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
போதைப் பொருள் வைத்திருப்பது யார் என்று சொல்கிறான் அந்த மாணவன். இதைத் தெரிந்துகொண்ட போதைப் பொருள் கும்பல் அந்த மாணவனையே கொடூரமாக அடித்தே கொல்கிறது. 'இது மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல்' என்று சட்டமன்றத்திலேயே மறைக்கிறார் அமைச்சர். இது கொடூரமான ஆட்சி என்பதற்குக் கோவையே சாட்சியாக அமைந்துள்ளது.
போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் போவதாகச் சொன்னார் முதலமைச்சர் விஜய். அவர் செல்பி எடுப்பதற்கும் ரீல்ஸ் போடுவதற்கும்தான் அரசு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 'போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநிலக் கல்லூரியில் நடத்தியது த.வெ.க. அரசு. அதில் போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்' என்ற விழிப்புணர்வுப் பரப்புரையைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு நடவடிக்கையை காணொலி மூலமாகப் பார்வையிட்டார். போதைப் பொருளை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கினார். மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டார்கள். போதைப் பொருட்களை முழுமையாக ஒழித்து விட்டதைப் போல த.வெ.க. அரசு மார் தட்டிக் கொண்டது.
அந்த நிகழ்ச்சிக்கு ஒரு காவல் துறை அதிகாரி தனது குழந்தையை போலீஸ் உடை அணிந்து அழைத்து வந்திருந்தார். அந்தக் குழந்தையை முதலமைச்சர் விஜய் தூக்கிக் கொஞ்சினார். அதுதான் மீடியாக்களில் பெரிதாக வர வழைக்கப்பட்டது. நிகழ்ச்சியையே அந்த ரீல்ஸ் எடுக்கத் தான் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் ரியல் காட்சிகள் என்ன?
போதைக் கும்பலில் இருப்பவர்கள் பெயரைச் சொன்ன காரணத்துக்காக உடனிருக்கும் மாணவர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளான் ஒரு மாணவன்.
கோவை - பொள்ளாச்சி சாலை பிரிமியர் மில் அருகே இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதன், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் சரமாரியாகத் தாக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விடுதியில் நடந்த போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை நிர்வாகத்திடம் அமுதன் கூறியதால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மாணவனைக் கடத்திக் கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் அடித்தும் கொலை செய்துள்ளது அந்தக் கும்பல். போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் அமுதன் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக அமுதனின் பெற்றோர் சொல்லி இருக்கிறார்கள். மாணவர் அமுதன் உயிரிழப்புக்கான காரணத்தை மூடி மறைக்க முயற்சி நடைபெறுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அமுதனின் தந்தை கென்னடி, அரசுப்பள்ளித் தலைமையாசிரியராக உள்ளார். “சில நாட்களுக்கு முன்பு, விடுதியில் சமையல் பணி செய்யும் பணியாளர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதை எனது மகனும், அவனுடைய நண்பனும் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதுபற்றி என் மகனை கல்லூரியில் விசாரித்துள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்திய தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், என் மகனை விடுதியை விட்டு வெளியேற்றினர். கால அவகாசம் கேட்டதற்குத் தரவில்லை. கல்லூரியில் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களைப் பற்றி என் மகனிடம் தகவல் கேட்டு எழுதி வாங்கியுள்ளனர். அதை அந்த மாணவர்களிடம் அவர்கள் சொன்னதால்தான் கோபத்தில் என் மகனை 20 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர்” என்று அமுதனின் தந்தை கென்னடி சொல்கிறார்.
அமுதனின் தாயார் சுமதி,"என் மகன் மருந்து குடித்து விட்டான். தற்கொலை செய்து கொண்டான் என்று தகவல் சொல்லித்தான் எங்களை வரவழைத்தார்கள். இங்கே வந்து பார்த்தபோதுதான், என் மகனை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது”என்று கூறி கதறியழுதார்.
அமுதனின் உறவினர் பாலகுரு,"போதைப்பொருள் பற்றி அமுதன் தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட பகையில்தான் அவனைக் கொலை
செய்துள்ளனர்”என்கிறார். போதை மருந்துக் கலாச்சாரம் எந்தளவுக்குப் போயிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.
கோவை கொலைச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு காவல்துறையைக் கையில் வைத்து இருக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிக்காமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்லி இருக்கிறார். 'கோஷ்டி மோதல் தான் காரணம்' என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். அப்படியானால் கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோர் பொய் சொல்கிறார்களா?
'உங்கள் பையன் தற்கொலை செய்துகொண்டான்' என்று சொல்லித் தான் அந்தப் பெற்றோரை வரவைத்துள்ளது நிர்வாகம். ஆனால் மாணவன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளான். இந்தப் பொய்க்கு பின்னால் இருக்கும் பொய்ச்சதிகள் என்ன? அடுத்த பெரிய பொய்யை அமைச்சரே ஏன் சொல்ல வேண்டும்? போதை நடமாட்டத்தை மறைத்து, ஒரு கொலையையும் மறைப்பதுதான் விஜய் கொடுக்கும் மாற்றமா?
கோவையில், போதைப்பொருள் விற்பனைக் கும்பலால் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொறுப் பேற்க மறுக்கும் த.வெ.க. ஆட்சி அந்த கொலையையே மறைப்பது படுமோசமானது.
கல்லூரியில் புழங்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தைத் தடுக்க முயன்ற மாணவனின் உயிரைக் காப்பாற்றத் தவறியுள்ளார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதற்கு கோவை மாணவனின் கொலைச் சம்பவமே சாட்சி. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கிறார் முதலமைச்சர் விஜய்?
தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.
போதை சக்திகளின் கொலையை தூயசக்தியே மறைக்கும் திருட்டு ஆட்டம்!
Also Read
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!
-
எல்லோருக்கும் சாரி.. : ஆன்லைன் லோன் ஆப் - 24 வயது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
-
“தமிழும் தெரியவில்லை ; பொது நாகரிகமும் தெரியவில்லை” : மரியவில்சன் பேச்சுக்கு முரசொலி கடும் தாக்கு!
-
தொகுதி மறுவரையறை மசோதா : “ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரக்கூடும்...” - பேரவையில் உதயநிதியின் முழு பேச்சு!
-
தொகுதி மறுவரையறை : இதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு - பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?