Politics

“தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார்.. வாழ்க மறைமலையடிகள் புகழ்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!

கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் இன்று (ஜூலை 18) மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,

“வாழ்த்தாத நாளில்லை வையகம்

மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்

வாழ்த்தாத நாளில்லை வையகம்!

பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை

வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!

“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.

“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்! என புகழாரம் சூட்டியுள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை தாமதமின்றி திறந்துவிட வலியுறுத்துவோம்!” : தி.மு.க சார்பில் தீர்மானம்!