Politics
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏ-க்கள் இல்லை. எனவே அமமுக எம்.எல்.ஏ-வான காமராஜை குதிரை பேரம் மூலம் பேசி ஆதரவை பெற்றது. தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சியை பிடித்தார்.
ஆனால் எந்த ஒரு குதிரை பேரமும் அரங்கேறவில்லை என்று தவெக-வினர் கூறி வரும் நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் அதிமுக-வில் இருந்து விலகி விஜய் கட்சியில் தொடர்ந்து இணைந்து வருவது, விஜய் குதிரை பேர அரசியலில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இதனிடையே சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் சுமார் 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் அன்றே அ.தி.மு.க எம்.எல்.ஏக்களான பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகிய4 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
அதன்பிறகு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் செ.ராஜு, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், மற்றும் என்.ஆர்.சிவபதி உள்ளிட்டோரும், ஒரு சில முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் த.வெ.க.வில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய, அவரது பின்னாலேயே அண்மையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்தார்.
இதனிடையே திமுக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வில், வைகோவின் மதிமுக கட்சி இணைந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தனது கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், தானே வந்து பிரச்சாரம் செய்வதாக விஜய் பேசியதாக வைகோவே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது மேலும் சர்ச்சையானது.
இதன்மூலம் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டது அப்பட்டமான உண்மை என்று தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும், விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்துள்ளது மேலும் தவெக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
முக்கியமாக தவெக-வில் இணைந்த அத்துணை முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதும், ஊழல் வழக்குகள் உள்ளது. குறிப்பாக சி.விஜயபாஸ்கர் மீது குட்கா முறைகேடு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அவர் லஞ்சம் பெற்றதாகவும், வழக்கும் உள்ளது.
ஊழலுக்கு எதிராக வீர வசனம் பேசி வரும் விஜய், தனது கட்சியில் ஊழலில் ஊறிப்போன அதிமுகவினரை, அதுவும் பல்வேறு ஊழல் வழக்குகளில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களை தனது கட்சியில் இணைத்துள்ளது, தவெக-வுக்கு வாக்களித்த மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!