Politics
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிமச் சுரங்கம் அமைக்க IREL நிறுவனத்திற்கு அளித்த கால நீட்டிப்பு கண்டனத்திற்குரியது. ஓராண்டு கால நீட்டிப்பு உத்தரவை உடனே ரத்து செய்க என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு IREL ஆலைக்கு 1 ஆண்டு கால அவகாசத்தை நீடித்து கொடுத்துள்ள த.வெ.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ் மிடாலம் A, மேல்மிடலாம் B, இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் A,B மற்றும் கொல்லங்கோடு A,B,C வருவாய் கிராமங்களுக்குக்குட்பட்ட பகுதியில் 1144.618 ஹெக்டேர் நிலங்களில் அணுக்கனிமச் சுரங்கம் அமைத்து இல்மனேட் சிர்கான் புளுடோனியம் மோனோசைட் தோரியம் போன்ற கனிமங்களை பிரித்தெடுப்பதற்கு இந்திய அரிய மணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) தமிழ்நாடு அரசு மூலம் அனைத்து தடையில்லா சான்றுகளையும் பெற்று ஆலை தொடங்குவதற்கு IREL நிறுவனத்திற்கு 10.6.2026 வரை 5 ஆண்டு காலம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில்- இது தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசிற்கு பல முறை கடிதம் மூலம் தடையில்லா சான்றுகள் வழங்கி ஆலைக்கான அனுமதி வழங்கிட அழுத்தம் கொடுத்தது.
இத்திட்டம் அமைந்தால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும். நிலத்தடி நீர் பாதிப்புள்ளாகும்.
கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமங்களை அழிவிற்குள்ளாக்கும். விவசாய நிலங்களில் கடல் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பிற்குள்ளாகும். எனவே இத்திட்டத்தை கை விட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
எங்கள் கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது போராடிய மக்களின் பிரதிநிதிகளை 24.03.2025 அன்று அழைத்துப் பேசி “மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. இத்திட்டத்தை கைவிட கேட்டு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். சுற்று சூழல் அனுமதி மாநில அரசு வழங்காது. வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுடன் இந்த அரசு துணையாக நிற்கும்” என வாக்குறுதி வழங்கினார்கள்.
அந்த அடிப்படையில் கடந்த ஐந்தாண்டு காலமாக IREL-க்கு எந்த வித அனுமதியும் திராவிட மாடல் அரசு வழங்கவில்லை. ஒன்றிய அரசு இதில் மக்கள் கருத்து கேட்பு நடத்த வேண்டியதில்லை என ஒரு திருத்தத்தை கொண்டு வந்து மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்த போதிலும் - எங்கள் கழகத் தலைவர் முதலமைச்சராக இருந்த வரை எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியவில்லை. எந்த அனுமதியும் வழங்கவுமில்லை.
ஏற்கனவே ஒன்றிய அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு கால கால அவகாசம் 10.06.2026 அன்று முடிவடைகிற நிலையில் - IREL நிறுவனத்திற்கு மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் நீடித்து வழங்க வேண்டுமென கோரியதனை ஏற்று, ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு அடி பணிந்து தற்போதைய த.வெ.க. அரசு 10.06.2026 முதல் மேலும் ஒரு ஆண்டு காலம் கால அவகாசத்தை நீட்டித்து கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்து-த.வெ.க. அரசு வழங்கியுள்ள இந்த கால அவகாசம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அரசின் இந்த உத்தரவு அந்த பகுதி மக்கள் குறிப்பாக மீனவர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கால நீடிப்பு ஆணையை இந்த அரசு வழங்காமல் இருந்திருந்தால் இந்த திட்டமே கைவிடப்பட்டிருக்கும். இந்த அரசின் மக்கள் விரோத செயலால் IREL நிறுவனம் ஒன்றிய அரசின் மூலம் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்து தடையில்லா சான்று மற்றும் அனுமதிகளையும் பெற்று ஆலையை தொடங்கிவிடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2024 நவம்பரில் நடந்த த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் “இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது” என IREL நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தற்போது ஒன்றிய அரசிற்கு அடி பணிந்து மக்கள் விரோத ஆணையை வழங்கி உள்ளதை இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பா.ஜ.க. அரசுக்கும்- தவெக அரசுக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
5 ஆண்டுகாலம் தி.மு.க. அரசு அனுமதி வழங்காத இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி வழங்கி மாவட்டத்தையே அழிக்க துணிந்து விட்டது த.வெ.க. அரசு.
எனவே IREL நிறுவனத்திற்கு தற்போது வழங்கியுள்ள கால அவகாச நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்து உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் இப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு தவெக அரசின் மக்கள் விரோத செயலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன்.
Also Read
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!