Politics
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்த நிலையில், திமுகவினர் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் மதிமுக சென்றதில் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இப்படியான சூழலில் மதிமுகவை திமுகவினர் யாரும் வசைபாடவில்லை.
எனினும் "திருமண நிகழ்வு ஒன்றில் சந்தித்த ஸ்டாலின், தன் பக்கம் முகத்தை கூட திருப்பவில்லை" என்று அப்பட்டமான பொய்யை கூறினார். ஆனால் அந்த நிகழ்வில் வைகோவிடம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வைகோவுக்கு கண்டனங்களை எழுப்பியது. இந்த சூழலில் திமுகவை குறித்து மதிமுகவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அதோடு வைகோ யார் தயவும் இல்லாமல் தலைவராக உயர்ந்ததாகவும் வைகோவை மேலோங்கி பேசுவதோடு மட்டுமில்லாமல், திமுகவை தரந்தாழ்ந்து மதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவை சேர்ந்த சீர்காழி எம்.எல்.ஏ, தான் திமுக உறுப்பினர் என்பதால் பதவியை ராஜினமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், கடையநல்லூர் எம்.எல்.ஏ. தி.மு.இராஜேந்திரன், தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இப்படியான சூழலில் நேற்று மதிமுகவை சேர்ந்த மாநில நிர்வாகிகளான அழகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன் (இருவரும் பொடா சட்டத்தில் வைகோவுடன் சிறையில் இருந்தவர்கள்), டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் ஆதரவாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதனால் கோபமடைந்த மதிமுகவினர் திமுகவினரை வசைப்பாட தொடங்கினர். இந்த நிலையில், மதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான சிவசங்கர் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியது வருமாறு :-
மதிமுக, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து விலகியதைக் குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். யாரும் இதற்காக வருத்தப்படவில்லை; எனவே, இது குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் எதையும் நாங்கள் முன்வைக்கவில்லை. இருப்பினும், மதிமுக தரப்பிலிருந்து திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்படும்போது, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
வைகோ அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவோ அல்லது தலைவர் கலைஞர் அவர்களின் தயவோ இல்லாமலேயே வளர்ந்தார் என்று சிலர் பேசுகின்ற செய்தியை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். வைகோவின் வரலாறு தெரியாமல் இன்று மதிமுகவில் இருப்பவர்கள் பேசலாம், ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் வைகோவின் வரலாறு நன்கு தெரியும்.
வைகோ நாடாளுமன்றத்தில் போய் கர்ஜித்த பிறகுதான் 'வைகோ' என்ற அடையாளமே அவருக்கு கிடைத்தது. ஆனால், அந்த நாடாளுமன்றத்திற்கு வைகோவை அனுப்பியது யார் எனில்? கலைஞர் தான். 1978 முதல் 1990 வரையான ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தொடர்ந்து அனுப்பி, அவர் பேசுவதற்கான தைரியத்தை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
ஒரு கட்சியின் தலைவருக்கு இருக்கும் தெம்புதான் தொண்டனையும் பேச வைக்கும்; அந்தத் தெம்பைப் பெற்றுதான் வைகோ அக்காலகட்டத்தில் புகழ் பெற்றார். ஆனால், அதற்கு நன்றியாக அவர் மதிமுகவை ஆரம்பித்து, திமுகவை பிரித்தார். அதன் பிறகு அவர் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டும், சிவகாசி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது அனைவரும் அறிந்ததே.
எனினும் மீண்டும் சிவகாசி தொகுதியில் தலைவர் கலைஞர் அவர்களே அவருக்கு வாய்ப்பளித்து நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். அதன் பின் 2019-ல் தற்போதைய கழகத் தலைவர் தளபதி அவர்களும் அவரை மேலவை உறுப்பினராக ஆக்கினார். இவ்வாறாக 4 முறை எந்தவிதத் தேர்தல் சிரமமும் இல்லாமல் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
மதிமுகவைத் தொடங்கிய பிறகு 1996 தேர்தலில், அவரே ஆட்சியைப் பிடிக்கப் போவதாகப் பெரிய அளவில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்து, மீண்டும் கலைஞர் அவர்களே முதலமைச்சரானார். வைகோவின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், திமுகவினருக்கு இவையெல்லாம் தெரியும் என்பதை மதிமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் வைகோவின் வரலாற்றை நாங்கள் சொல்வதைவிட, மதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்திருக்கும் மூத்த தலைவர்களே அதற்குச் சாட்சி. வைகோ மீது போடப்பட்ட பொடா வழக்கிற்காகப் போராடியவர் கலைஞர். அக்காலத்தில் மதிமுகவின் தூண்களாக இருந்த செவந்தியப்பன், அழகு சுந்தரம், செங்குட்டுவன் போன்றவர்கள் இன்று தளபதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
மதிமுக தொடங்கப்பட்டபோது இருந்தவர்களுக்கும், இன்று இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தாலே அதன் நிலை என்னவென்பது புரியும். இதற்கு மேலும் பேசினால் வைகோவின் தொடக்க கால அரசியல் பயணத்தில், கலைஞர் மேடையில் பேசும்போது அவர் காலடியில் அமர்ந்திருந்த காட்சியை நேரடியாகப் பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் பேச ஆரம்பித்தால் மதிமுகவின் மொத்த வரலாறும் முடிந்துவிடும்.
எனவே மதிமுகவினருக்கு அன்போடு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அங்க போய்ட்டீங்க... விஜய் படத்தை பார்த்துட்டு ‘விசில்’ அடிங்க, மகிழ்ச்சியா இருங்க, ‘வைப்’ ஆகுங்க... விஜய் படத்தில் வருகின்ற பாடலை கேட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் காங்கிரஸ் விஸ்வநாதன் ‘டான்ஸ்’ ஆடியதுபோல், நடனமாடி மகிழ்ச்சியாக இருங்கள். தேவை இன்றி திமுகவினரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்." என்றார்.
Also Read
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!