Politics
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு பித்தலாட்டங்கள், பொய் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தங்கள் ஆட்சியில் நடக்கும் அவலங்களை கேட்டால், உடனே திமுக மீது எதாவது ஒரு பழியை போட்டு அதனை திசைதிருப்பி விடுவதிலேயே மும்முரமாக இருந்து வருகிறது விஜய் அரசு.
அண்மையில் நிதித்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை, அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். 'அதுல ஒன்னும் இல்ல.. கீழ போட்டுரு..' என்று சுந்தரராஜன் படத்தில் வரும் காமெடி போல், அதில் திமுக-வுக்கு எதிராக எந்த ஒரு தகவலும் இல்லை.
மாறாக கடந்த திமுக ஆட்சியில் தேவையில்லாத கடன் எதுவும் வாங்கப்படவில்லை என்றும், ஒன்றிய அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்குள் தான் கடன் வாங்கப்பட்டது என்று தெரியவந்தது. இந்த சூழலில் தற்போது மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
இதிலும் வழக்கம்போல திமுகவுக்கு எதிராக ஒன்றும் இல்லை. எனினும் எதையாவது திமுகவுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் என்ற நோக்கில், கடன் குறித்த தகவலை மட்டும் வெளியிட்டாரே தவிர, அந்த கடன் எதற்காக வாங்கப்பட்டது என்ற தகவலை அதில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்துவிட்டார்.
இருப்பினும் அவர் வெளியிட்ட அறிக்கை மூலம், 2016 - 2021 அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.58,534 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 2021 - 2026 திமுக ஆட்சி காலத்தில் ரூ.34,447 கோடியாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்த்தப்படாமலே வருவாய் அதிகரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமாரின் வெற்று வெள்ளை அறிக்கைக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு :-
இன்று தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் எங்களின் கழக தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மின்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டார்.
கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளன. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி , 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37% , 3.5% , 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ. 56,000 கோடி. அதற்கடுத்து ரூ58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ 1,48,77, 856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது. வருவாய் பற்றாக்குறை ரூ 34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000
வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார். அதையும் வெளிப்படையாக மக்கள் முன் கூறி இருக்க வேண்டும் ஆனால் அதை தவெக அரசு மறைத்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டிக்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர்படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. அதேபோல பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்றிருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மின் தேவை என்பது 94,947 மில்லியன் யுனிட் அதுவே 2020-21 இல் 93,344 , 2021-22 இல் 98,674 மில்லியன் யுனிட், 2022-23 இல் 1,03,546 மில்லியன் யுனிட், 2023-24 இல் 1,11,504 மில்லியன் யுனிட், 2024-25 இல் 1,16,813 மில்லியன் யுனிட் ஆக 94,947 மில்லியன் யுனிட் லிருந்து 1,16,813 மில்லியன் யுனிட் ஆக மின் தேவை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 25,000 மில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும் , உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது இதனை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும்.
அதேபோல இந்த வெள்ளை அறிக்கையில் திமுக-வின் திட்டங்களையே பட்டியலிட்டுள்ளனர்.
2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதை கூறாமல் மறைத்துள்ளனர்
அதே போல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு. நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ் நாள் 16 ஆண்டுகள் தான். அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம்.
ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். தரமான பொருளுக்கும் டூப்ளிகேட் பொருளுக்குமான விலை வேறு வேறு ஆக தான் இருக்கும். நாம் தரமான மின் மாற்றியை வாங்குகி உள்ளோம். அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளை குறைக்காமல் , நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.
அதேபோல கடந்த ஆட்சியில் எந்த கட்டமைப்பும் செய்யவில்லை என சொல்கிறார் அமைச்சர் ஆனால் அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே எங்களது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு நடவடிக்கைகளும், புதிய மின் உற்பத்தி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள். 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இப்படி வெள்ளை அறிக்கையிலேயே நாங்கள் செய்த திட்டங்கள் இடம் பெற்றிருந்தும் அதை திரித்து அமைச்சர் பேசி உள்ளார்.
திமுக ஆட்சியில் எந்த திட்டமும் தொடங்கவில்லை என்று அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார். வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3 , உடன் குடி மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் 75% நிறைவு பெற்றது. குண்டாறு மின் திட்ட பணிகள் 85% முடிந்துவிட்டது; கொல்லிமலை மின் திட்டம் 90% முடிந்துவிட்டது.
சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் tnpsc தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர். ஏன் இதனை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்கவில்லை.
மேலும் கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் அவர்களின நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீீீது வழக்கு தொடுக்கப்படும்.
இப்போது முதல்வரின் தனி செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவரது சினிமா pro வான ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் பார்க்கிறார் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களா.?
ஆண்டு வாரியாக வருமானம் எவ்வளவு? ஆண்டு வாரியான செலவினம் எவ்வளவு? என்பதை அமைச்சர் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. சொல்லக்கூடிய குற்றச்சாட்டை பத்திரிக்கையாக இல்லாமல் ரீல்ஸாக இல்லாமல் நிரூபிக்க கூடிய குற்றச்சாட்டுகளாக சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். மின்சாரம் வாரியத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக எவ்வளவு போராட்டங்களை திமுக தலைவர்கள் நடத்தினார்கள். திமுக முன்னெடுத்து இருக்கிறது என்பதை அமைச்சர் திரும்பி பார்த்தால் இது போன்ற கருத்துக்களை அமைச்சர் தெரிவிக்க மாட்டார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்த வரை மறைமுக டென்டர்கள் கிடையாது. அனைத்தும் இணையதள வாயிலாகதான் டெண்டர்கள் போடப்படுகிறது. கடந்த திமுக அரசின் மீது துறை ரீதியாக குற்றச்சாட்டை முன்வைக்க எந்தவித முகாந்திரமும் இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் தான் அமைச்சர் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசியல் திட்டங்களை வெளியிடும் வெள்ளையறிக்கையாக தான் இது அமைந்துள்ளது. இலவச மின் இணைப்புகளுக்கு மின்சார வாரியம் 2500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இதன் காரணமாகவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது.
போற போக்கில் குற்றச்சாட்டு செல்லக்கூடாது. எந்த பணியிடம் மாற்றங்களுக்கு இவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது என்று ஆதாரத்தை வெளியிட்டால் நாங்கள் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம். பொத்தாம் பொதுவாக பணியிட மாற்றங்களுக்கு பார்ட்டி பண்ட் வசூல் செய்தார்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களிடத்தில் திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
“சில தினங்களுக்கு முன்பு 18 ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக கூறினீர்கள். சில நாட்கள் கழித்து 40 ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதாக சொன்னீர்கள். மின்வாரியத்தில் இருந்து காணாமல் போனது 18 ஹார்ட் டிஸ்க்தான். ஆனால் திரும்ப கைப்பற்றப்பட்டது 40 ஹார்ட் டிஸ்க் என்றால், அந்த 40 ஹார்ட் டிஸ்க்குகளும் மின்வாரியத்திற்குச் சொந்தமானதா? அல்லது வேறு துறைகளைச் சேர்ந்தவையா? இதற்கு அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை . அதை நான் எடுத்து சொல்லி கேள்வி கேட்டும் இன்று வரை பதில் இல்லை. தங்களின் நிர்வாகத் திறமை யின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!