Politics

“ரீல்ஸ் ரெடி.. சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்” : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி!

ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தி.மு.க மீது ஆதாரமற்ற அவதூறுகளை முன்வைத்ததைக் கண்டித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபிறகு, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஊடகங்களைச் சந்தித்து பேசியதாவது :

இன்று சட்டமன்றத்தில், முதலமைச்சர் அவர்கள் பதிலுரையைச் சரியாக 9.30 மணிக்கு ஆரம்பித்தார். அவர் பேசுவதையெல்லாம் நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம். வழக்கம்போல், பிரச்சாரங்களில் பேசுவதுபோல, சினிமா பானியில் தயார் செய்யப்பட்ட தன் டயலாக்குகளை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு, சில தவறான, உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் பதிய வைக்கின்ற வேலையை ஆரம்பித்தார். உடனே நானும், எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து எங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

`பாயின்ட் ஆஃப் ஆர்டரில்’ எனக்குப் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டேன். `பாயின்ட் ஆஃப் ஆர்டர்’ என்பதே, அவர் சொல்கின்ற விஷயம் தவறு, ஆதாரம் இல்லாமல், எதையும் பேசக்கூடாது என்று சொல்வதற்குதான் `பாயின்ட் ஆஃப் ஆர்டரே. ஆனால், சபாநாயகர் எங்களை அனுமதிக்கவில்லை.

நேற்று எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசும்போது, பல அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினார்கள். முதலமைச்சரிடம் கேள்வி கேட்டால், அதற்கு முதலமைச்சர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால், பல அமைச்சர்கள் எழுந்து பல முறை குறுக்கிட்டுப் பேசினார்கள், சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசினார்கள்.

நேற்று நாங்கள் பேசி முடித்து வீட்டிற்குச் சென்றிருப்போம். சபாநாயகர் `அவையின் நேரம் முடிந்துவிட்டது’ என்று கூறியதற்குப் பிறகு நாங்கள் அனைவரும் புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டோம். அதற்குப் பிறகு இன்னொரு அமைச்சர் நான் பேசியதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவற்றையெல்லாம் நேற்று, நாங்கள் வீட்டிற்குச் சென்றுதான் தொலைக்காட்சி மூலமாகப் பார்த்தோம்.

இன்று முதலமைச்சர் உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயத்தைக் கூறும்பொழுது, என்ன ஆதாரத்தோடு பேசுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. ஆனால் சபாநாயகர், `முதலமைச்சர் பேச்சைத் தொடர்வார்’ என்று அனுமதித்தார்.

முதலமைச்சர் இன்று ஒரு ஸ்கிரிப்ட் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அந்த உரையை அவர் பேசி முடிக்கும்வரை, நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்கிற தொனியில், யாரும் `கட்’ சொல்லக்கூடாது என்கிற மனநிலையிலேயே பேசினார். ஷூட்டிங் சென்றால் அவர் எப்படி இருப்பாரோ, அதே மாதிரி சட்டமன்றத்தை ஒரு `ஷூட்டிங் ஸ்பாட்’டாக அவர் இன்று மாற்றிக் காட்டியிருக்கிறார்.

நேற்று நான் அவ்வளவு கேள்விகளைக் கேட்டேன், அப்போது ஒரு முறை கூட எழுந்து வாய் திறக்காத முதலமைச்சர், இன்று முழு டயலாக்கையும் மனப்பாடம் செய்து வந்து அதை முழுமையாகப் பேசியிருக்கிறார். தொடர்ந்து நீங்களும், ஊடகங்களும், செய்தியாளர்களும் அவரிடம் கேள்விகள் கேட்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கும் பதில் சொல்ல மறுக்கிறார், சட்டமன்றத்தில் எங்களுக்கும் பதில் சொல்ல மறுக்கிறார்.

ஒரு முதலமைச்சராக நாங்கள் அவரிடம் எதிர்பார்ப்பது, நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு - மக்களின் கேள்வியைத்தான் நாங்கள் கேட்கிறோம் - மக்களின் கேள்விகளுக்கு, ஒரு முதலமைச்சர் பொறுப்பாகப் பதில் அளிக்கவேண்டும். இதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது, மக்களும் அவரிடம் எதிர்பார்ப்பது. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, என்ன நடந்தாலும் அதை தி.மு.க. மீது பழி போடுவதையே இந்த அரசு ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

அதனால்தான், ஊடகங்கள் மூலமாக நான் முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வது, நேற்று நான் பல கேள்விகளை வைத்திருந்தேன், சிலவற்றை மட்டும் இங்கே மீண்டும் கேட்க விரும்புகிறேன்.

ஆளுநர் சட்டசபைக்கு வரும்போது, மரபு மீறப்பட்டு இருக்கிறது. ஆளுநர் சட்டசபைக்கு வரும்போது, ஆரம்பத்தில் `தமிழ்த்தாய் வாழ்த்தும்’, இறுதியாக நிகழ்ச்சி முடியும் போது `தேசிய கீதமும்’ பாடப்படுவதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை ஆளுநர் வரும்போது மரபு மீறப்பட்டு, இரண்டு முறை ஏன் `தேசிய கீதம்’ பாடப்பட்டது? என்று கேள்வி கேட்டேன், இதில் என்ன தவறு என்று என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன், தவறு கிடையாது, `தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடிவிட்டீர்கள். ஆனால், `தேசிய கீதம்’ இரண்டு முறை பாடப்பட்டது தவறு; தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டு முறையோ மூன்று முறையோ நீங்கள் ஒலிக்க வைக்க வேண்டியதுதானே? என்று நான் கேள்வி கேட்டேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும், இதற்கு என்னவிதமான காம்ப்ரமைஸ் அடைந்திருக்கிறீர்கள் நீங்களும் ஆளுநரும் என்று கேள்வி கேட்டேன், அதற்கு எந்தவிதமான ஒரு பதிலும் இல்லை.

அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், கலைஞருடைய படத் திறப்பிற்கு குடியரசுத் தலைவர் (பிரசிடென்ட்) வந்தபோது அப்பொழுது நீங்கள் பாடினீர்கள் என்றார். முதலமைச்சருக்கு இந்த நெறிமுறை (புரட்டோகால்) கூடத் தெரியாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம். குடியரசுத் தலைவர் வரும் போது குடியரசுத் தலைவருக்கு என்று ஒரு நெறிமுறை இருக்கிறது, ஆனால் ஆளுநருக்கு அப்படியெல்லாம் கிடையாது,

அதே மாதிரி `நான் முதல்வன்’ திட்டம், கிட்டத்தட்ட 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள், பல சாதனைகள் செய்திருக்கிறார்கள், அந்தத் திட்டத்தை ஏன் முடக்கி இருக்கிறீர்கள்? என்று நான் கேட்ட கேள்விக்கு, கண்டபடி இஷ்டத்திற்கு ஓர் ஆதாரமும் இல்லாமல், முறையான பதில் இல்லாமல் என்னென்னவோ குற்றச்சாட்டுகளை எல்லாம் வைக்கிறார்.

மின்வெட்டு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் மீண்டும் அவகாசம் கேட்கிறார்கள். அதையும் தூக்கி தி.மு.க. மீது பழியைப் போட்டுவிட்டு `ஃபியூஸ் கேரியரைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள்’ என்கிறார்கள், எந்தவிதமான கேள்விக்கும் ஒரு தெளிவான பதில் இல்லை.

`பயிர்க் கடன் தள்ளுபடி’, `விவசாயப் போராட்டம்’ இதைப் பற்றிக் கேட்டதற்கு, `விவசாயிகளை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் தூண்டிவிட்டுப் போராட்டத்தில் ஈடுபடச் சொல்கிறார்கள்’ என்று விவசாயிகளுடைய போராட்டத்தை முழுமையாகக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இன்றுகூட காலையில் தொலைக்காட்சியில் பார்த்தேன், திருவள்ளூரில் விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விவசாயிகள் போராட்டத்தை, தி.மு.க.தான் தூண்டிவிடுகிறது என்று விவசாயிகளை நம் முதலமைச்சர் அவர்கள் மிகவும் கேவலமாக, கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதே மாதிரி, சட்டம் ஒழுங்குப்பிரச்சினை, மீண்டும் அதற்கும் அதே பதில்தான், `எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்று கூறுகிறார். ஏன் டி.ஜி.பி.யை நீங்கள் நியமிக்கவில்லை என்று கேட்கிறார். சரி, நாங்கள் செய்யவில்லை, அதான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டார்களே, மாற்றம் என்று சொன்னீர்களே, ஒரே நாளில் எல்லாவற்றையும் கிழித்து எறிந்துவிடுவேன் என்று சொன்னீர்களே, ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே எல்லாம் மாற்றுவேன் என்று சொன்னீர்களே, இப்போது இந்த 40 நாட்களில் உங்களுடைய காவல்துறை எதை கிழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி.

ஒவ்வொரு நாளும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரே நாளில் 24 சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அதற்கெல்லாம் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே அனைத்துக் குற்றங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை, நான் இன்று உங்களிடம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன். நேற்று சபாநாயகர், `ஆதாரத்தைத் கொடுங்கள்’ என்றார்கள், ஆதாரம் கையில் வைத்திருக்கிறேன், ஆதாரத்தை உங்களிடம் கொடுக்கிறேன். ஆனால் நான் வைத்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை.

‘எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது என்று சும்மா சும்மா சொல்லாதீர்கள், நாங்கள் எந்தத் தயவிலும் இல்லை’ என்கிறார்கள். அப்படி இல்லை என்றால் ஏன், ஆட்சி அமைந்த உடனே சென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு பிரிவை மட்டும் இவர் சென்று பார்த்தார்? முதலில் சோபா சென்றது, சோபாவிற்குப் பின்னால் இவர் சென்றார். ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் போகும்போதும் புதிய சோபா சென்றது, அதையெல்லாம் நீங்கள் பார்த்தீர்கள்.

இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரைக்கும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும், அதுவும் அங்கே கட்சி அலுவலகத்தில் கூடக் கிடையாது, இங்கே சட்டமன்ற வளாகத்திலேயே சென்று அமைச்சரின் அறைகளிலேயே சென்று கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் அறையிலேயே சென்று கட்சியில் சேர்ந்து கொள்கிறார்கள்.

பீரோ புல்லிங் மாதிரி இன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை, இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டதற்குத்தான் எந்தவிதமான பதிலும் இல்லாமல், ஒரு சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருவர் வந்தால் எப்படி இருப்பாரோ, டயலாக்கை முழுமையாக மனப்பாடம் செய்து வந்து எப்படிப் பேசி நடித்துவிட்டுப் போவாரோ, அதுமாதிரி இன்று முதலமைச்சரின் இந்த உரை அமைந்திருக்கிறது என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி : முதலமைச்சர் ஒரு குட்டி ஸ்டோரி சொல்கிறேன் என்று சொல்லி, சட்டப்பேரவையில் சொல்கிறார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : அவருடைய ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரைலர் வெளியீட்டு விழாவில் எல்லாம் இதுதான் அவருடைய பாணி. அதைத்தான் இங்கேயும் அவர் கடைப்பிடிக்கிறார், இன்னும் சொல்லப்போனால் சட்டமன்றத்தை கிட்டத்தட்ட ஒரு சினிமா தியேட்டர் மாதிரி ஆக்கிவிட்டார்கள். இன்று விசில் எல்லாம் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இவையெல்லாம் இந்த சபையே பார்க்காதது. விசில் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் நம்முடைய அமைச்சர்களெல்லாம் டான்ஸெல்லாம் ஆட ஆரம்பித்துவிடுவார் என்று நினைக்கிறேன், ‘ஐட்டம் சாங்’ எல்லாம் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

கேள்வி : மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : இது முழுக்க முழுக்க அவர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்று, ரீல்ஸாகப் போக வேண்டும் என்று செய்கிறார்கள். இன்று முதலமைச்சரின் பேச்சை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசியிருக்கிறார் என்றால், அதில் பத்து ரீல்ஸ் தேறும். அதைத் திட்டமிட்டுத்தான் செய்கிறார்கள். இது நாங்கள் எதிர்பார்த்ததுதான், ஓர் அளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மிகவும் செயற்கையாகப் பேசுகிறார். இங்கேயும் நடிக்க ஆரம்பித்துவிட்டார், சைகை எல்லாம் நடித்துக் காட்டுகிறார்.

இன்னும் சபாநாயகர் (ஸ்பீக்கர்) `ஆக்ஷன்’, `கட்’ அதெல்லாம் இனிமேல் சொல்வார் என்று நினைக்கிறேன், `ஒன்மோர்’ எல்லாம் போவார்கள் என்று நினைக்கிறேன். சபாநாயகரிடமும் நான் ஆக் ஷன் பண்ணலாமா என்று கேட்கிறார். சபாநாயகர் ஆக் ஷன் என்கிறார். இனிமேல் முதலமைச்சருக்கு இங்கே முழு கேரவனும் வந்துவிடும் என்று நினைக்கிறேன்; `கேரவன்’, `மேக்கப்’, `ஸ்டண்ட் மாஸ்டர்’ எல்லாம் வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். சட்டமன்றத்தைக் கிட்டத்தட்ட ஒரு படப்பிடிப்புத் தளமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி : கடந்த ஆட்சியில் ஊழல் நடந்ததாகச் சொல்லியிருக்கிறாரே?

பதில் : ஊழல் செய்திருந்தால், ஆதாரம் இருக்கிறது என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள், நீதிமன்றத்தில் நாங்கள் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம், சும்மா பொத்தாம் பொதுவாக, பொதுக்கூட்ட மேடையில் பேசுவது மாதிரி, பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவது மாதிரி சட்டமன்றத்தில் வந்து பேசிக்கொண்டிருக்க முடியாது, அதற்காகத்தான் நாங்கள் பாயிண்ட் ஆஃப் ஆர்டரில் குறுக்கிட்டு பேசினோம். நீங்கள் இஷ்டத்திற்குப் பேசுவீர்கள், நாங்கள் உட்கார்ந்து அவற்றைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா?

கேள்வி : பார்ட்டி ஃபண்ட் பற்றி மிகப்பெரிய அமளி நடந்திருக்கிறது. `பார்ட்டி ஃபண்ட் பற்றி உங்களுடைய கருத்து என்ன சார்?

பதில் : எந்த பார்ட்டி? யார் யாருக்குக் கொடுத்தார்கள்? ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொல்லும்போது, ஆதாரம் இருந்தால் அதற்கு நாம் பதில் சொல்லலாம்.

கேள்வி : ஆளுநர் உரையிலும் மக்கள் திட்டத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, இப்பொழுது முதலமைச்சரின் பதிலுரையிலும் சொல்லவில்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் : வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு 4,500 ரூபாய் கொடுப்பேன் என்றார், அதைப்பற்றி எதுவுமே கிடையாது. நான் கேட்டேன், ஆறு மாதம் கழித்துத்தான் கொடுக்க வேண்டும் என்றால் ஆறு மாதம் எடுத்துக்கொள்ளுங்கள். நிதி நிலைமையையெல்லாம் சரிசெய்துவிட்டுக் கொடுங்கள் என்று சொன்னேன். ஆனால், அதைப்பற்றி எந்தவிதமான பதிலும் இல்லை.

மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாய் தருகிறேன் என்றார், அதைப்பற்றி இல்லை. ஆறு கேஸ் சிலிண்டர்கள் என்றார், அதைப்பற்றியும் வாய் திறக்கவில்லை. இதுமாதிரி எந்தத் தேர்தல் வாக்குறுதியைப் பற்றியும் அவர் பேசவே இல்லை. தி.மு.க ஆட்சியின் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கொடுத்திருக்கிறார். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேறு எந்தப் புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

‘சிங்கப்பெண்’ என்று சொல்லி ஒன்று ஆரம்பித்தார்கள். இப்போது அவர்களும் முதலமைச்சர் பாணியில், ஷூட்டிங் செய்து ரீல்ஸ் எல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே இந்த ஆட்சி ஒரு கேலிக்கூத்து ஆட்சியாக, ஒரு சினிமா ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது என பதிலளித்தார்.

Also Read: “குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!