Politics
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
2021ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மே 7ம் தேதி 2022ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அப்பொதைய முதலமைச்சர் ஆற்றிய உரையில் பேசியதாவது, “நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.
பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம்.
முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என உரையாற்றினார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை என்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான அரசாணையினை வெளியிட்ட நாளன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்.
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படுகிறது.
காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் பட்டியலின்படி, திங்கள்கிழமை உப்புமா வகையாக, ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை உப்புமா போன்ற உப்புமா வகைகள் காய்கறி சாம்பாருடனும் வழங்கப்படுகிறது.
அதேபோல் செவ்வாய் கிழமை கிச்சடி வகையாக ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை காய்கறி கிச்சடி வகைகளும்,
புதன்கிழமை, கிச்சடி வகையாக ரவா பொங்கல் மற்றும் வெண்பொங்கல் காய்கறி சாம்பாருடனும்,
வியாழக்கிழமை உப்புமா வகையாக சேமியா உப்புமா வகை , காய்கறி சாம்பாருடனும்,
வெள்ளிக்கிழமை இனிப்பு வகையாக ஏதாவதொரு கிச்சடி வகையுடன் இனிப்பு வகையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு நாளைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் ஆகும். ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.
காலைச் சிற்றுண்டி வழங்குவதால் ஒரு குழந்தைக்கு 293.40 கி.கலோரி ஆற்றல், புரதம் 9.85 கிராம், கொழுப்பு 5.91 கிராம், இரும்பு சத்து 20.41 மி.கிராம் மற்றும் சுண்ணாம்பு சத்து 1.64 மி.கிராம் கூடுதலாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் விரிவாக்கமாக, தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தினை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தினைத் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று இந்த மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப் பட்டதுடன், 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 18.50 லட்சம் மாணவர்கள் இந்த முன்னெடுப்பின் கீழ் பயனடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,23,536 குழந்தைகள், 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். (அப்போதைய கணக்கீட்டின்படி)
இத்திட்டம் விரிவாக்கப் பட்டதுடன், 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 18.50 லட்சம் மாணவர்கள் (அப்போதைய கணக்கீட்டின்படி) இந்த முன்னெடுப்பின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
இப்படியாக இந்தத் திட்டத்தின் விரிவாக்கமாக 2026 தேர்தலின் போது திமுக அரசு மீண்டும் அமைந்த உடன் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், 6-8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படியே, தற்போது ஆளும் தவெக அரசு இந்தத் திட்டத்தினை செப்டம்பர் 17ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் பொய்யை மக்கள் மத்தியில் பரப்பி இன்று ஒரு மைனாரிட்டி ஆட்சியை முதல்வர் விஜய் நடத்தி வந்தாலும், திமுக-வின் முத்தான திட்டங்களை தொடர்ந்தும், அதனை விரிவாக்கம் தான் செய்ய முடியுமே தவிர, அந்தத் திட்டங்களை நிராகரிக்கவோ நிறுத்தி வைக்கவோ முடியாது. அப்படி திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடரும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் இந்த தமிழ்நாட்டை ஆளுகிறார் என்றே பொருள்படும்.
Also Read
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!
-
“உங்கள் அரசியல் பயணம் புரிந்துவிட்டது” : ராகவா லாரன்ஸிற்கு இயக்குநர் சேரன் கண்டனம்!