Politics

“ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.. எகிறும் எதிர்பார்ப்பு” : முழு விவரம் அறிக!

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் 2026 ஆம் ஆண்டு, ஜூன் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடும். அன்று கூடும் சட்டமன்ற பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வு கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை அதிகமாக பார்க்க வேண்டும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர்,  அரசியலில் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் மிக ஆர்வத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த முதல்வரை நேரலையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துள்ளேன். சட்டப்பேரவை முழுவதுமாக நேரலை செய்வது தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

இதுவரையில் காலை 9:30 மணிக்கு துவங்கிய சட்டப்பேரவை கூட்டம், வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காலை 10.00 மணிக்கே சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது இருப்பினும், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளை பேச கூடுதல் நேரம் தேவைப்படுவதாக கூறி, கடந்த திமுக ஆட்சியில் அவை விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு கடந்த 2024 ஜூலை முதல் காலை 9.30 மணிக்கு கூடத்தொடர் நடைபெற்றது.

இந்த நடைமுறையே இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் 18 ஆம் தேதி கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு கூடும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை கூடிய சட்டப்பேரவைத் தொடரில் ஆளும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதம் அரசியல் ரீதியாக பெரிய பேசுபொருளாகியிருந்தது. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்த விமர்சினத்திற்கு முதல்வர் பேரவையில் பதிலளிக்காமல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பெரும் நகைச்சுவையாக மாறிப்போனது.

இந்நிலையில், மீண்டும் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், காரசார விவாதங்களும் ஆளும் கட்சி எதிர்கட்சி என அனைத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதில்கூற வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், போன்றவை சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “தவெக கூட்டணியா.. இதெல்லாம் அதிக பிரசங்கித்தனம்” - பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவுக்கு வலுக்கும் கண்டனம்!