Politics
“பாஜக கூட்டணியில், முழு சங்கியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (01-04-2026) திருச்சியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்:
நேற்று மாலை திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினேன். இன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சிக்கு வந்திருக்கிறேன். மூன்று வாரத்திற்கு முன்புதான், இதே திருச்சியில் மாபெரும் மாநில மாநாட்டிற்காக வந்தேன்! இப்போது மீண்டும் நம்முடைய வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போன்று, திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும்! அதற்கு நீங்கள் தயாரா?
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 9 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தந்த அந்த வெற்றியால், இரண்டு சிறப்பான அமைச்சர்களைத் தமிழ்நாட்டிற்கு நீங்கள் தந்திருக்கிறீர்கள்! இந்த முறையும் திருச்சியில் முழு வெற்றி. நூறு சதவிகிதம் வெற்றியைத் தருவீர்களா? தருவோம் (மக்கள்). மகிழ்ச்சி, நன்றி!
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் திருச்சியின் தீரர் - மாநாட்டு நாயகர் – கழகத்தின் முதன்மைச் செயலாளர் – என்னுடைய ஆருயிர் சகோதரர் கே.என். நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் அருமைத் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி அவர்களின் அருமை மகன். எப்போதும் சிரித்த முகத்துடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு, திருவெறும்பூர் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்கள், சிறுபான்மை மக்களுக்காக என்னிடம் எப்போதும் பேசி, எதையும் சாதிக்கும் ஆற்றலைப் படைத்தவர். தொகுதி மக்களுடன் ஏற்கனவே இரண்டறக் கலந்தவர். நல்ல Weight-ஆன வேட்பாளர். சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு நமது வெல்லும் வேட்பாளர் பாரிவள்ளல் அவர்கள், அவருடைய பெயருக்கு ஏற்றவாறு, மக்களுக்கு நிச்சயம் தொண்டாற்றக் கூடியவர். கழகத்திற்காக உழைத்த தந்தை தங்கவேல் அவர்கள் வழியில் வந்திருக்கும் தம்பி பாரிவள்ளல் அவர்களுக்கு, லால்குடி உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து, வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்.
அடுத்து, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் கதிரவனுக்கு நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும். தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களையும், உதவிகளையும் செய்தவர். அப்படிப்பட்ட தம்பி கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.
அடுத்து, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் எஸ். துரைராஜு அவர்கள், இவர் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தின் பெருந்தலைவராக 2 முறை சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். இப்போது, திருவரங்கம் தொகுதியில் போட்டியிடும் அவருக்கு, அந்தத் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மணப்பாறை சட்டமன்றத் தொகுதி, அங்கு நமது வெல்லும் வேட்பாளர் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் சமது அவர்கள், கூட்டணிக் கட்சியைத் சார்ந்திருந்தாலும், நமது உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். கடந்த முறை போன்றே, இந்த முறையும் அவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்.
அடுத்து, முசிறி சட்டமன்றத் தொகுதி - நமது வெல்லும் வேட்பாளர் தம்பி கருணை ராஜா அவர்கள், மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் அவர்களின் அருமை மகன் - தலைமைச் செயற்குழு உறுப்பினர் – பொறியாளர் அணியின் பொறுப்பில் இருந்து பணியாற்றுபவர் – கருணா ராஜாவுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் முசிறி மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, துறையூர் சட்டமன்றத் தொகுதி – நம்முடைய தோழமை இயக்கமான காங்கிரசு இயக்கத்திற்கு அந்தத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறோம். விரைவில் நம்முடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் அறிவிக்க இருக்கும் காங்கிரசு கட்சியின் வேட்பாளருக்குத் துறையூர் மக்கள் கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
இங்கே, இந்த மேடையில் இப்போது நின்று கொண்டிருக்கும் 8 வேட்பாளர்களுக்கும், அதேபோன்று அறிவிக்க இருக்கும் காங்கிரசு கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் 9 வேட்பாளர்களுக்கும் உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்கிறேன்... பண்போடு கேட்கிறேன்... பாசத்தோடு கேட்கிறேன்... உரிமையோடு கேட்கிறேன்... உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கேட்கிறேன்... வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). வெற்றி உறுதியாகிவிட்டது, வேட்பாளர்கள் உட்காரலாம். உங்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த அளவிற்கு ஏன் உரிமையுடன் நான் பேசுகிறேன் என்று கேட்டால், அந்த அளவிற்கு இந்தத் திருச்சிக்காகப் பல முத்திரைத் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நாம் செய்து கொடுத்திருக்கிறோம். அவற்றை எல்லாம் சொல்ல முடியாது. காரணம், நேரமில்லை. கொடுமையான வெயிலில் நீங்கள் எல்லாம் இங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, சுருக்கமாக - தலைப்புச் செய்தியாக மிக மிக சிறப்புக்குரிய சிலவற்றை மட்டும் நான் உங்களிடம் லிஸ்ட் போடக் காத்திருக்கிறேன்.
பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட, “இது என்னப்பா! ஒரு பஸ் ஸ்டாண்டே ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது என்று வியந்து போய் வீடியோ போடும் திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அதன் அருகிலேயே பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம்.
அடுமட்டுமல்ல, திருவரங்கம், லால்குடி நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள்.
திருச்சி மாவட்டத்தில் 327 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம்.
பள்ளிக்கல்வித் துறையை இன்றைக்கு கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட அமைச்சரைத் தந்த உங்கள் மாவட்டத்தில் இரண்டு மாதிரிப் பள்ளிகளைக் கட்டியிருக்கிறோம்.
உங்கள் மாவட்டத்திற்கு மட்டுமே நம்முடைய நேரு அவர்கள் 9 கூட்டுக் குடிநீர் திட்டங்களையும், 18 மறுசீரமைப்புக் குடிநீர் திட்டங்களையும் தொடங்கி செய்து கொடுத்திருக்கிறார்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம்.
துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கத்தேர் உலா.
மணப்பாறையில சிப்காட் தொழிற்பூங்கா.
இதுமட்டுமல்ல, கூடிய விரைவில் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியின் தொடக்கத்திலேயே திறந்து வைக்க இருக்கும் பெரிய திட்டங்கள் என்னவென்று இப்போது சொல்கிறேன்.
டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைய இருக்கும் பிரம்மாண்டமான நூலகம்.
பஞ்சப்பூரில் டைடல் பூங்கா.
சூரியூரில் மிகப் பெரிய ஒலிம்பிக் அகாடெமி ஆகியவற்றை நாம் உங்கள் அன்போடு – ஆதரவோடு வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, விரைவில் அதைத் திறந்து வைக்க இருக்கிறோம்!
நான் சொல்லி இருப்பது அனைத்தும், ‘மெகா – மகா’ திட்டங்கள். திருச்சி என்றாலே பிரம்மாண்டம்தான். அதனால்தான், உங்கள் மாவட்டத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதி மக்களுக்காகவும் இப்படி பிரம்மாண்டமான திட்டப்பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். இவை தவிர இன்னும் ஆயிரக்கணக்கான திட்டப் பணிகளை தொகுதிவாரியாக செய்து கொடுத்திருக்கிறோம்.
தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். மொத்தமாக டோட்டல் போட்டால், நான் பெருமையோடு சொல்கிறேன்... கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திருச்சிக்காக 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் உரிமையுடன் உங்களிடத்தில் உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
2021-ஆம் ஆண்டு எங்கள் மேல் நீங்கள் எல்லாம் நம்பிக்கை வைத்து, ஆதரவளித்து பொறுப்பில் உட்கார வைத்தீர்கள். உங்களின் நம்பிக்கையை நான் இன்றைக்குக் காப்பாற்றி இருக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். கொடுக்காத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயண வசதி செய்து தருவோம் என்று சொன்னேன். முதலமைச்சரான முதல் நாளே பதவியேற்றுக் கொண்டு, கோட்டைக்குச் சென்று, முதல் கையெழுத்தைப் போட்டேன். மகளிர் அனைவரும் இன்றைக்கு டவுன் பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணிக்கிறீர்களா, இல்லையா?
மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்குகிறோம். உண்டா, இல்லையா? இப்போது நம்மைப் பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
காலை உணவுத் திட்டம், வாக்குறுதியில் சொல்லாத திட்டம்.
19 இலட்சம் பிள்ளைகள் சூடான சுவையான காலை உணவைச் சாப்பிட்டு படிக்கிறார்கள்.
நான் முதல்வன் திட்டமும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. 48 இலட்சம் திறன் பயிற்சி சான்றிதழ்களை நம்முடைய இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் இன்றைக்குப் பெற்றிருக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்ய உருவாக்கப்பட்ட திட்டங்கள்தான் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள். 9 இலட்சம் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை நீங்கள் எல்லாம் சிறப்பாகக் கொண்டாட 3,000 ரூபாய் வழங்கினோம். 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அனைவருக்கும் வந்ததா?
மகளிர் உரிமைத் தொகையைத் தேர்தலை காரணம் காட்டித் தடுக்க நினைத்தார்கள். அதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, மூன்று மாதங்களுக்கான தொகையையும், கோடை காலச் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 5 ஆயிரம் ரூபாயை அட்வான்சாகக் கொடுத்தோம். 5 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வந்ததா, இல்லையா?
அரசு ஊழியர்களின் நீண்ட ஆண்டகாலப் பிரச்சினை, சற்றேறக்குறைய 22 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றி, சொன்னபடியே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி, இன்றைக்குச் சாதனை படைத்திருக்கிறோம்.
இவை அனைத்திற்கும் மேல், தமிழ்நாட்டில் சாதிக் கலவரம் இல்லை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை. உத்தர பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை.
இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்திருக்கிறோம். அமைதியான சூழலும், திறமையான மனித வளமும், நம்முடைய ஆட்சியில் இருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்!
அதற்கான தெளிவான செயல்திட்ட அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் அறிவிப்புகள் பல இருக்கிறது. நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். ஹைலைட்டாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் சில வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்கிறேன்.
மாதம்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்பதை இரண்டு மடங்காக இனி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க போகிறோம்! என்ன மகிழ்ச்சிதானே?
அதேபோன்று, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதாமாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று, காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த நாம் அறிவித்திருக்கிறோம்! மேலும், 15 இலட்சம் மாணவர்கள் அதனால் பயன்பெறப் போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப் போகிறது.
அதேபோன்று, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்குப் பிடித்த கடைகளிலேயே உங்களுக்குப் பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாகப் பார்த்து, இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு ரூபாய் கூப்பன்? தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இதைப் பற்றித்தான் ஒரே பேச்சாக இருக்கிறது.
நம்முடைய பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, அவர்களுக்குப் பிடித்த கடையில், அவர்களுக்குப் பிடித்த டிசைனில், அவர்களுக்குப் பிடித்த கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை மனதில் வைத்துதான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இல்லத்தரசி திட்டத்தில் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் எல்லாமே ‘உங்கள் சாய்ஸ்’தான்!
அதேபோன்று, உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.
அனைவரும் பழைய பம்பு செட்டு வைத்திருப்பார்கள். சிலது அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக கரண்ட் செலவாகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பீர்கள். அதை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அரசே இனி வாங்கித் தரும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இன்னும் இருக்கிறது,
மீன்பிடித் தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக, மீன்பிடி குறைவுக்கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் நிறைய பேர் இங்கு வந்திருப்பீர்கள். உங்களை எல்லாம் பிசினஸ்-வுமனாக முன்னேற்றும் வகையில் பிணை எதுவும் இல்லாமலேயே, 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
உயர்கல்வி படிக்கும் 35 இலட்சம் மாணவர்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் இதயமாக இருக்கும் இந்த டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்
- இப்படி ஏராளமான வாக்குறுதிகளை நாம் கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையைச் சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி!
தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் படுகுழிக்குத் தள்ளிய அ.தி.மு.க.வும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்குக் கொண்டு சென்றிருக்கும் பா.ஜ.க.வும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் வழக்கம்போல் படுதோல்வியைதான் நீங்கள் பரிசாக தர வேண்டும்!
மக்களுக்கு நேரடியாக எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பனைத் தரப்போகும் நம்முடைய இல்லத்தரசிகள் திட்டத்தைப் பார்த்து இன்றைக்கு வயிறு எரிந்து, அது ஊழலுக்கான திட்டம் என்று சொல்கிறார், பழனிசாமி. எந்த பழனிசாமி, சம்பந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்திய பழனிசாமி!
தி.மு.க. செய்யும் ஒவ்வொரு திட்டமும் தரமானதாக இருக்கும்! எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்... தலைவர் கலைஞர் அவர்கள் 2006 தேர்தலின்போது, கலர் டி.வி. வழங்குவோம் என்று சொன்னார்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, கலர் டி.வி.யின் கொள்முதல் நேர்மையாகவும், தரமானதாகவும், யாரும் குறை சொல்ல முடியாததாகவும் இருக்க வேண்டும் முடிவு என்று, அதற்கான டெண்டரை முடிவு செய்ய, எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.
2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கலர் டி.வி.க்களை வழங்கும் விழாவைத் தொடங்கி, ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான, நம்முடைய தமிழர்களின் வீடுகளுக்கு கலர் டி.வி.க்களை வழங்கினோம். கிட்டத்தட்ட இருபது வருடம் ஆகிறது. இன்றைக்கும் பல வீடுகளில் கலர் டி.வி.யாக மட்டுமல்ல; கலைஞர் டி.வி.யாக அது நிலைத்து நிற்கிறது! இதற்கு பெயர்தான் குவாலிட்டி!
இதுவே, அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று கொடுத்தீர்கள். என்ன ஆனது? காயலாங்கடையில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் வாய் இருக்கிறது என்று என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார், நம்முடைய பழனிசாமி அவர்கள்!
ஏற்கெனவே, 2021 தேர்தலில், மகளிர் உரிமைத்தொகையாக நாங்கள் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னவுடனே, அவசர அவசரமாக அவர் வீட்டில் இருக்கும் ஜெராக்ஸ் மெஷினை ஆன் செய்து, 1,500 ரூபாய் தருவோம் என்று அறிக்கை வெளியிட்டார்.
பழனிசாமியின் வாய்ச்சவடாலும், அவரின் அலங்கோல ஆட்சி நிர்வாகத்தின் ஊழல் பவுசும் தெரிந்து, மக்களான நீங்கள் அவரைப் புறக்கணித்தீர்கள். இப்போதும் மக்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்று, வயிற்றெரிச்சலில், தன்னை போலவே பிறரையும் நினைத்து ஊழல் நடக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அண்மையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு டிரெய்லர்தான் அது. மதுரையில் நடைபெற்ற கூட்டத்தின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார் படத்தை வைக்கக் கூடாது என்று பா.ஜ.க. சொன்னதும், சுயமரியாதையே இல்லாமல் அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி.
மதுரை பா.ஜ.க. ஆதரவுக் கூட்டத்தில், தந்தை பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியை வெளியிட்டார்கள். அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் கேட்கிறேன்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தால் விட்டிருப்பாரா? அல்லது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தால் விட்டிருப்பாரா? பேரறிஞர் அண்ணாவை இவ்வாறு அசிங்கப்படுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பார்களா? பழனிசாமியின் ஒரே சாதனை அ.தி.மு.க. எனும் கட்சியை அடிமைக் கூட்டமாக சீரழித்து இருப்பதுதான்.
'திராவிடம்' என்ற சொல்லும் அந்தக் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. முன்னணியினர் அதையும் கூட தடுக்கவில்லை. “திராவிடம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, நான் புராணங்களை எல்லாம் படித்தது இல்லை” என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே சொன்னவர்தான் பழனிசாமி.
இந்தத் துப்புகெட்ட பழனிசாமி, யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை - தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருந்து கொண்டிருப்பவர்தான் பழனிசாமி.
சிறுபான்மைச் சமூகத்திற்கும், இலங்கைத் தமிழர்க்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்து அது நிறைவேற துணைபோன கட்சிதான் அ.தி.மு.க. ஏன், இவர்களுடன் சேர்ந்து 'பாட்டாளி' அன்புமணி ராமதாசும் ஆதரவாக வாக்களித்து துரோகம் செய்தார்.
இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான அந்தச் சட்டமே மாநிலங்களவையில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 70 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் இரத்தக்கறை இன்றைக்கு அ.தி.மு.க. கையில்தான் இருக்கிறது.
இவ்வளவுக்கு பிறகும் பழனிசாமி என்ன பேசினார்? “குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே! எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று காட்டுங்கள்" என்று சொன்னவர்தான் பழனிசாமி. ஆனால், சிறுபான்மையினர் வாக்குகள் வேண்டும் என்று, 2024 தேர்தலில் தனியாக நின்று நாடகம் ஆடியபோது, CAA சட்டத்தை கண்டிப்பதாக பல்டி அடித்தார் பழனிசாமி.
“பா.ஜ.க. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள், CAA சட்டம் ஒரு வரலாற்றுப் பிழை” என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார் பழனிசாமி. நான் இப்போது கேட்கிறேன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, நீங்கள் இப்போது அந்தச் சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? தைரியம் இருந்தால், வெளிப்படையாகச் சொல்லுங்கள்.
பழனிசாமியின் துரோகப் பட்டியல் இதோடு நிற்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்தபோது கண்ணை மூடிக்கொண்டு அதையும் ஆதரித்தார் இந்தப் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய எட்டு மாநில விவசாயிகளை, “புரோக்கர்கள்” என்று வசைபாடிக் கொச்சைப்படுத்தினார். இப்படி, பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து, முழு சந்திரமுகியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி. அதாவது, முழு சங்கியாகவே மாறிவிட்டார்.
ஊர் ஊராகச் சென்று, அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரச்சினை இல்லை என்றால், எதற்காக அத்தனை முறை டெல்லிக்குச் சென்றீர்கள். டெல்லிக்குச் சென்று அமித்ஷாவின் அப்பாய்ன்ட்-மெண்டுக்காக பலமணி நேரம் ஏன் காத்துக்கிடந்தீர்கள்? அதுவும் வேறு வேறு காரில் மாறி மாறி சென்று, முகத்தை எல்லாம் மூடிக்கொண்டு ஏன் வெளியில் வந்தார்?
நான் கேட்கிறேன்... கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அனைத்து கட்சிகளும் ஏன் பா.ஜ.க.விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? இது எப்படி தெரியுமா இருக்கிறது? “மாப்பிள்ளை அவர்தான், ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று நம்முடைய சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படத்தில் வரும் காமெடி போன்று இருக்கிறது.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன், கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என்றால், அதில் இருக்கும் சிறிய கட்சிகள் எல்லாம் ஏன் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடாமல், பா.ஜ.க.வின் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்? பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று பிரதமர் மோடி அவர்கள் இதுவரை சொல்லி இருக்கிறாரா? அ.தி.மு.க. என்ற பெயரைக் கூட அவர் சொன்னது போன்று எனக்குத் தெரியவில்லை. NDA சர்க்கார், NDA சர்க்கார் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
ஆனால், நாம் “தமிழ்நாடு வெர்சஸ் NDA, தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி” என்று சொன்னால் மட்டும், “இது என்ன டெல்லி தேர்தலா?” ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” என்று பெரிய அறிவுக்கொழுந்து மாதிரி கேட்கிறார் பழனிசாமி! தன் மீதான ஊழல் புகார்கள், உறவினர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க மொத்தக் கட்சியையும் பா.ஜ.க.விடம் பழனிசாமி அடகு வைத்துவிட்டார்.
மக்கள் வாக்களிக்காமலேயே M.L.A.க்களை ஏலத்தில் எடுத்து ஒரு முறை முதலமைச்சர் ஆகிவிட்டார். கூவத்தூர் வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும். மீண்டும் இவரிடம் ஆட்சி சென்றால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைத்துவிடுவார். அடகு என்ன, மொத்தமாக விற்றுவிடுவார். இவரின் ஓனரான பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதுதான். நேராக வந்தால் தமிழ்நாட்டு மக்கள் நோட்டாவிற்கு கீழே அனுப்பிவிடுவார்கள்! அதனால்தான் கொத்தடிமைக் கூட்டமாக இருக்கும் அ.தி.மு.க. முகமூடியுடன் வருகிறார்கள்.
கடந்த 11 ஆண்டு காலத்தில் பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கான எதையும் செய்யவில்லை. நம்முடைய மக்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. 12 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக இதுவரை ஒரு சிறப்புத் திட்டம் கூட இல்லை. அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் இப்போது என்ன நிலையில் இருக்கிது என்று உங்களுக்கு தெரியும். இப்போது வரை கட்டி முடிக்கப்படவில்லை.
நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள்.
மதுரை, கோவை, திருச்சி மாநகரங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மெட்ரோ இரயில் திட்டத்தைக் கேட்டோம். அதுவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒழுங்காகத் தராமல் இழுத்தடிக்கிறார்கள். ஓசூர் விமான நிலையத்திற்கும் அனுமதி தரவில்லை. பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி நிதியையும் தருவதைத் தடுக்கிறார்கள். குடிநீர் திட்ட நிதியும் இல்லை.
இவ்வளவு அநீதிகளையும் செய்துவிட்டு, தேர்தல் வந்துவிட்டது என்று, தமிழ்நாட்டிற்குக் கிளம்பி வருகிறார், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். கடந்த மாதம்கூட இதே திருச்சிக்கு பிரதமர் மோடி அவர்கள் வந்தார். நான் கேட்கிறேன்... அப்படி வந்தவர், “இதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மூலமான தமிழ்நாட்டிற்கு செய்த திட்டங்கள் என்று சொன்னாரா? எங்களால் தமிழ்நாட்டிற்கு இதெல்லாம் கிடைத்திருக்கிறது” என்று பட்டியல் போட்டுச் சொன்னாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்! சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்!
இதில், தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். என்னுடைய ஒவ்வொரு பேச்சிலும், ஒவ்வொரு சாதனைத் திட்டம் குறித்தும், புள்ளிவிவரங்களோடு விளக்கிச் சொல்கிறேன். நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடையும் பலரும் ஊடகங்களில் அதை தொடர்ந்து பதிவு செய்கிறார்கள்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மக்களான உங்களிடம் கேட்டிருந்தாலே, திராவிட மாடல் திட்டங்களை வரிசையாக சொல்லியிருப்பீர்கள். பரவாயில்லை, எப்போதும் டூர் மோடிலேயே இருக்கும் பிரதமருக்கு இதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள நேரம் இருந்திருக்காது; அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டைப் பற்றி புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்காது.
அவரிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டிற்கு வாருங்கள்... ஒருவார காலம் இங்கேயே தங்கியிருந்து, எங்கள் தமிழ்நாடு எப்படி தலைசிறந்த தமிழ்நாடாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான்!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடப்பது மாதிரியான அட்டூழியங்கள் இங்கு கிடையாது! பெண்களைப் பாதுகாப்பாக வாழ வைப்போம் என்று பிரதமர் சொல்ல வேண்டியது, தமிழ்நாட்டில் இல்லை; பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சென்றுதான் இதையெல்லாம் பேச வேண்டும்! அதைவிட்டுவிட்டு, NDA கூட்டணியினர் தமிழ்நாட்டைப் பற்றி அவதூறாகப் பேசுவது, தமிழ்நாட்டை நாசப்படுத்தவும்; தமிழ்நாட்டு வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்றுதான்!
தமிழ்நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தொடர வேண்டும் என்றால், ஏழாவது முறையும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும், திராவிட மாடல் தொடர வேண்டும். பா.ஜ.க.வும் அதன் கொத்தடிமைக் கூட்டமும் ஆட்சிக்கு வந்தால் அதன் தீமைகள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்! தமிழ்நாடு தமிழ்நாடாகதான் இருக்க வேண்டும்!
உத்தரபிரதேசம் போன்று, மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகக் கூடாது! இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே தட்சிண பிரதேஷ் என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்! இதைத் தடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும்! நம்முடைய எதிரிகளையும் பா.ஜ.க.வின் உதிரிகளையும் வீழ்த்த வேண்டும்!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது! நம்முடைய ஸ்பீடு என்ன என்று காண்பித்துவிடலாமா? வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? ஒரு கை பார்த்துவிடலாமா?
நடக்க இருக்கும் இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்! கலைஞரின் மகனாக உங்களிடம் கேட்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு உங்கள் பொன்னான வாக்குகளைத் தாருங்கள். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமை!
அதை உணர்ந்து,
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் திருச்சியின் தீரர் கே.என். நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய வெல்லும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!
லால்குடி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் பாரிவள்ளலுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்!
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் துரைராஜுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்!
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் சமதுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்!
முசிறி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கருணை ராஜாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்!
துறையூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நம்முடைய ராகுல் காந்தி அறிவிக்கும் வேட்பாளருக்குக் கை சின்னத்தல் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டு, உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியனுக்கு வழங்குங்கள்... வழங்குங்கள் என்று கேட்டு, விடைபெறுகிறேன்.
Also Read
-
“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!
-
ஒரே நாளில் 7 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து அசத்திய துணை முதலமைச்சர் உதயநிதி! : முழு விவரம் உள்ளே!
-
தேர்தலுக்கு தயாராகும் களம்! - ஏப்.3 அன்று திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - முழு உரை உள்ளே!
-
"விஜய் ஒரு மாய பிம்பம்": திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விமர்சனம்!