Politics
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு… இதில் முழு மனநிறைவு: திருமாவளவன் பேட்டி!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக இக்கூட்டணி உறுதியான நிலையில் நிலைத்து இருக்கும் போது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக பொருளாளரும் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களான எ.வ. வேலு, எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்களான எம்.பி. க்கள் திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுத் தலைமையில் தொகுதி உடன்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் சில கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தே.மு.தி.க கட்சிக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் ம.தி.மு.க. சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து தொகுதி ஒப்பந்தத்தை நிறைவு செய்தனர். அதன்படி, தி.மு.க. கூட்டணியில் உள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இதில் 6 தனித் தொகுதிகளும், 2 பொதுத்தொகுதிகளிலும் விசிக போட்டியிடும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி உடன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கையெழுத்திட்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என வெட்கையோடு உழைத்து வருகிறோம். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
“இத்தேர்தலில் தற்காலிகமாக எங்களுக்கு என்ன லாபம் என நினைத்து வலதுசாரி அரசியலுக்கு நாங்கள் இடம் கொடுத்துவிட்டால், தமிழ்நாட்டில் சாதிவெறியர்களும் மதவெறியர்களும் மட்டுமே கொட்டம் அடிப்பார்கள். இடதுசாரி சக்திகள் பின்னுக்கு தள்ளப்படுவதை நாம் எதிர்கொள்வோம். விசிகவுக்கு கொடுத்த 8 தொகுதிகளும், இடதுசாரி கட்சிகளுக்கு கொடுத்த 10 தொகுதிகளும் சேர்த்து 18 தொகுதிகள், இடதுசாரி அரசியலை பாதுகாக்கும் இயக்கங்களுக்கு தி.மு.க. வழங்கியிருப்பதாக நான் பார்க்கிறேன்.
ஒருபுறம் வலதுசாரிகள், மற்றுபுறம் திராவிட அரசியலுக்கு எதிரான சமூகநீதி மீறி செயல்படும் திருபுவாத சக்திகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனவே, ஓரிறு இடங்களுக்காக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பை சேதப்படுத்த கூடாது என்ற உணர்வுடன் 8 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் எங்களுக்கு முழு மனநிறைவு உள்ளது!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!