Politics

“பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான்! ராஜ்ஜியம் கிடைக்காது!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.

இந்திய துணைக்கண்டத்தின் தொடக்கமான வள்ளுவ முனை இருக்கும் குமரி முனைக்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், தனித்துவமான பண்பாடு, உணவு, வட்டார வழக்கு, கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகு நிறைந்திருக்கக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டம்.

எல்லைப் போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பொதுவுடைமை இயக்க தீரர் தோழர் ஜீவா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இப்படி பல பேராளுமைகளை கொண்டிருக்கக்கூடிய பல்வேறு தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, இன்று அறிவியலில் சிறந்து இஸ்ரோ அமைப்புக்கு எத்தனையோ தலைவர்களை தந்த கன்னியாகுமரிக்கு நான் வந்திருக்கிறேன். இப்படி பல்வேறு பெருமைகள் கொண்ட மாவட்டத்தில், இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் நம்முடைய மாண்புமிகு அமைச்சர்

மனோ தங்கராஜ் அவர்கள். பால்வளத்துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கை திறத்திற்கும் சொந்தக்காரரான அவருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

அதேபோல், இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், 3 இலட்சத்து 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக்கூடிய நம்முடைய மாவட்டத்தின் ஆட்சியர் அழகுமீனா, இ.ஆ.ப., அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

சிறப்பாக செயல்படுகின்ற மாவட்ட ஆட்சியர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முத்திரை பதிக்கும் வகையில் அவர் செயல்படுகிறார். உங்களுடைய கரவொலியைப் பார்த்தாலே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பலமாக கரவொலி எழுப்பி அவருக்கு நம்முடைய வாழ்த்துகள் சொல்லவேண்டும்!

அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட அரசு அலுவலர்களுக்கும், அத்தனை பணியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நான் வந்தேன். இலங்கை வாழ் தமிழ் சொந்தங்களுக்குரிய குடியிருப்புகள் திறப்பு விழா! பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா வளைவு (Arch), தியாகி பொன்னப்ப நாடார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்துவிட்டுதான் இன்றைக்கு இங்கே இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

தியாகி பொன்னப்ப நாடார் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், விடுதலைப் போராட்ட தியாகிகளில் ஒருவர். குமரியை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கான போராட்டத்தில், மார்ஷல் நேசமணி அவர்களின் போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர் அவர். திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இரண்டு முறையும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மக்களுக்கு பணியாற்றியவர். எளிமையாக வாழ்ந்து, ஏழை மக்களின் குரலாக ஒலித்து, ‘குமரி கோமேதகம்’ என்று மக்களால் போற்றப்பட்டவர். அத்தகைய சிறப்புக்குரிய தியாகி பொன்னப்ப நாடார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, நாகர்கோயில் மாநகராட்சி பூங்காவில், 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

அதேபோல், தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையை கன்னியாகுமரி மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், என்னுடைய பெயரில் அமைந்திருக்கக்கூடிய ஒரு படைப்பகம். இதனையும், நேற்று நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் நம்முடைய சகோதரர் திரு.மகேஷ் அவர்களுடைய சிறப்பான ஏற்பாட்டில், அதை நான் திறந்து வைத்திருக்கிறேன்.

உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்று நான் கருதுகிறேன். 2025 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நான் குமரிக்கு வந்தேன். முக்கடல் சூழக்கூடிய குமரி முனையில், முப்பால் புலவன் வள்ளுவனுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழாவை நாம் கொண்டாடினோம். திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்தேன். இப்போது, 2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கு முன்னால், அரசு விழாவில் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.

குமரி மாவட்டம் மீனவர்கள் நிறைந்த மாவட்டம். மீனவ தோழர்களுக்காக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், செய்யப்பட்ட சில முக்கியத் திட்டங்களை மட்டும், தலைப்புச் செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன்.

2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, நிலம் கையகம் செய்யப்பட்டு வீடுகள் கட்டி கொடுத்தாலும், அரசு நிலம் என்ற வகைப்பாட்டில் இருந்தது. சொந்த வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு வரன்முறைப்படுத்தப்பட்டு இன்று பட்டா வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, இன்று கன்னியாகுமரி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, 40 ஆயிரத்து 86 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோல், தேங்காய்பட்டணம் துறைமுக விரிவாக்கப் பணிகள் உட்பட தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்கள், படகு அணையும் தளங்கள், வலை பின்னும் கூடங்கள், மீன் ஏலக்கூடங்கள் இப்படி, பல பணிகளை குமரி மாவட்ட மீனவர்களுக்காக செய்து கொடுத்திருக்கிறோம்.

21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 361 மீனவ மக்கள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள். குளச்சல் மீன் பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு இது வழிவகுக்க இருக்கிறது!

அடுத்த முக்கியமான கோரிக்கை - வாணியக்குடியில், புதிய மீன்பிடி துறைமுகம். இதற்கும் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குளச்சல் மற்றும் வாணியக்குடிக்கு இடைப்பட்ட தொலைவு 3 கிலோமீட்டர் தான்! இருந்தாலும், மீனவ தோழர்கள் கேட்டதால், அதை நிறைவேற்றி தரவேண்டும் என்பதால் அதை செய்திருக்கிறோம். இதனால், 34 ஆயிரத்து 130 மீனவ மக்கள் நேரடியாக பயன்பெற இருக்கிறார்கள்.

அதேபோல, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணி 253 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல் கட்டப் பணிகளை கடந்த ஆண்டு நான் திறந்து வைத்துவிட்டேன். இரண்டாம், மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் இயந்திரம்!

இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில், உயிர்காப்பு சட்டைகள்! மீன்பிடி தடைக்கால நிவாரணம் மற்றும் மீன்பிடி குறைந்த கால நிவாரணம் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதுவும், 5 ஆயிரம் ரூபாயாக இருந்த தடைக்கால நிவாரணத்தை, திராவிட மாடல் அரசில், 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்.

மீனவ மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு மீனவர், மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது நான் சொன்னதெல்லாம், குமரி மாவட்ட மீனவர்களுக்கு செய்த பணிகளின் சுருக்கமான பட்டியல் மட்டும்தான்!

கடந்த 5 ஆண்டுகளில், குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் செய்து தரப்பட்டிருக்கின்ற மற்றொரு பட்டியலின் சில ஹைலைட்ஸ்களை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

283.69 கிலோமீட்டர் நீளமுடைய சாலைகள் மேம்பாடு. 7 பாலங்கள். பள்ளம்துறை எடப்பாடு மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர். கோட்டார் புனித சவேரியார் தேவாலயம் சீரமைக்க 2 கோடியே 29 இலட்சம் ரூபாய்! தோவாளை வட்டம் அருமநல்லூரில், கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் “அ” கிராமத்தில் இஸ்லாமியர்களுக்கான கபரிஸ்தான் அமைக்க இடம், நாகர்கோயில் மாநகராட்சியில், 46 வார்டுகளில் 55 ஆயிரத்து 709 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள், சுசீந்திரம் தேரூர் குளங்கள் பாதுகாக்கப்பட்ட ‘ராம்சார்’ ஈரநிலங்களாக அறிவிப்பு, மார்த்தாண்டத்தில் தினசரி சந்தை;

பத்மநாபபுரம் குளச்சலில், புதிய பேருந்து நிலையங்கள், தோவாளை, தக்கலை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காக இந்த மாவட்டத்தில், 262 வீடுகள், புகழ்பெற்ற தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வந்த, அந்த நிலையை மாற்றி, உயர்மட்ட மேற்கூரை;

திருப்பதிசாரம் நெல் விதை சேமிப்பு கிடங்கு கட்டடம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகன நிறுத்துமிடம், ஆரல்வாய்மொழி தெற்கு கிராமத்தில், 2 தடுப்பணைகள், 8 கம்பிவலை தடுப்பணைகள், தும்பகோடு கிராமத்தில் 5 நிலைகள், ஓடைக்கரை பாதுகாப்பு சுவர், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 9 புதிய கட்டடங்கள் மற்றும் M.R.I. கருவி, பத்மநாபபுரத்தில், மத்திய ஆய்வகம், முட்டம் கடற்கரைப் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள். இவ்வளவும் செய்திருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, இன்னும் நிறைய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. குலசேகரம் அரசு மருத்துவமனையில், ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவமனை கட்டடம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல மேம்பாட்டிற்கு புதிய மருத்துவமனை கட்டடம்.

அதுமட்டுமல்ல, குமரி மாவட்டத்தில், சுற்றுலாத் துறையை மேலும் வளர்த்தெடுக்க நிறைய செய்து கொண்டிருக்கிறோம். சிற்றார் - 2 அணை – திற்பரப்பு அருவி - மாத்தூர்-தொட்டி-பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் – கடந்த மாதம் கூட சர்வதேச அளவில் இருக்கக்கூடிய சுற்றுலா விடுதிகள் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதைத்தவிர, நாகர்கோயில் மக்களின் நன்மைக்காக வடசேரியில், ‘நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனையம்’ கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

செம்மாங்குளத்தை தூர்வாரி மேம்படுத்தி, மழைநீர் சேகரிப்பு அமைப்பாக செயல்பட அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தமிழ்நாட்டின் உயர்வுக்கும், பெருமைக்கும் அடையாளமாக விளங்குகின்ற ‘நியோ-டைடல்’ பார்க். கன்னியாகுமரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இன்று புதிய டைடல் பார்க் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

இப்படி, குமரியில் இருக்கக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இவ்வளவு இருந்தாலும் உங்கள் மாவட்டத்திற்கு என்று வந்துவிட்டு, உங்களுக்கு புது அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றால் நன்றாக இருக்குமா? மேடையில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா! அதுவும் காங்கிரஸ் கட்சியை கேட்கவே வேண்டாம் – என்னை உரிமையோடு துளைத்து எடுத்துவிடுவார்கள். அதனால், குமரி மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகளை இப்போது நான் உங்களிடத்தில் வெளியிட இருக்கிறேன்.

முதல் அறிவிப்பு - சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரக்கூடிய கன்னியாகுமரி நகராட்சியின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்ய, பழையாற்றிலிருந்து கூடுதல் குடிநீர் வழங்க 28 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், முக்கடலும் சங்கமிக்கும் இந்த பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், AVM கால்வாய் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - களியக்காவிளை – கன்னியாகுமரி சாலையில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில், 9 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

நான்காவது அறிவிப்பு - கல்குளம் வட்டம் - முளகுமூட்டில் உள்ள பழம்பெரும் தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம், 2 கோடி ரூபாய் செலவில், அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு - தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலமாக தற்போது மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிதி உதவிகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான விரிவான அரசாணைகளையும் விரைவில் வெளியிடுவோம்.

ஆறாவது அறிவிப்பு - கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது, காணாமல் போகும் நேர்வில், காப்பீடு உள்ளிட்ட நிவாரணங்கள் கிடைக்கும் நாள் வரை அந்த மீனவர்களின் குடும்ப வாரிசுதாரருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகையாக மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும்.

இதுதான், திராவிட மாடல்! தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான கல்வி, தனித்திறன் பயிற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், புதிய தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்க மானியங்கள், கட்டணமில்லா விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய அனைத்தையும் திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி கொடுத்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துக் கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டது நாங்கள்தான் என்று எங்களின் செயல்பாடுகளால் தினந்தோறும் நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

14 வயதிலிருந்து நான் அரசியலில் இருக்கிறேன். 50 ஆண்டு தொடர் உழைப்பால் ஒரு பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பை அடைந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக - மேயராக - அமைச்சராக - துணை முதலமைச்சராக - எதிர்க்கட்சித் தலைவராக, இன்று, முதலமைச்சராக இருக்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். நான் செல்லாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு, பயணித்து, மக்களை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அதனால்தான், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து, புரிந்து ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டுகிறேன். உங்கள் எதிர்காலத்தை என்னை நம்பி தமிழ்நாட்டு மக்களான நீங்கள் ஒப்படைத்திருக்கிறீர்கள். அதற்கு நான் நிச்சயமாக, உண்மையாக இருப்பேன்! உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது மாதிரி தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சொல்லவேண்டுமா! என் சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் உழைக்கிறேன்!

ஆனால் சிலர், தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள். தேர்தல் சீசன் என்கின்ற காரணத்தால், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களும், இனி அடிக்கடி தமிழ்நாட்டு பக்கம் வரப் போகிறார். ஏற்கெனவே வர ஆரம்பித்துவிட்டார். அதை நினைத்து, அவருடைய கூட்டணியினரே பயப்படுகிறார்கள்.

ஏன் தெரியுமா? எவ்வளவு அதிகமாக பிரதமர் அவர்கள் இங்கு வருகிறாரோ, அந்தளவுக்கு, பெரிய வித்தியாசத்தில், N.D.A. கூட்டணி தோல்வி அடையும். ஏனென்றால், தமிழ்நாட்டிற்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பது மக்களுக்கு ஞாபகம் வரும்.

நேற்றுகூட, அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத் மாநில மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை! தேர்தல் வருகிறதே என்று பட்ஜெட்டிலும் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டிற்குச் செல்ல இருக்கிறோமே என்று அமைச்சரவைக் கூட்டத்திலும் நம்முடைய கோரிக்கைகளுக்கு ஒன்றிற்கும் கூட ஒப்புதல் தரவில்லை! அதனால் தான் நான் அடிக்கடி சொல்வேன்.

இந்த தேர்தல் என்பது, தமிழ்நாடு Vs NDA! தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படவேண்டும்! டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடிய நிலை வரக்கூடாது! இதை தீர்மானிப்பதற்கான தேர்தல் தான்! தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் தாழ்த்தி, வீழ்த்தவேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கின்றது. ஏனென்றால், வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலத்தில் பா.ஜ.க. இருக்காது! பா.ஜ.க. இருந்தால் அங்கே வளர்ச்சி இருக்காது!

குமரி மாவட்டம் என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரக்கூடிய மாவட்டம்! ஆனால், நாடு முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அண்மையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுவதும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மகாராஷ்டிராவில், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து! மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது! அசாமில் இன்னும் மோசம். அந்த மாநிலத்தின் பா.ஜ.க. முதலமைச்சர், தான் வகிக்கும் பொறுப்பின் மாண்பையே மறந்து, முஸ்லீம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்குகிறார்.

பீகாரில், துணை முதலமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பள்ளிக்கூடங்களுக்கு அருகில் இறைச்சி கடைகள் இருந்தால் அகற்றுவோம் என்று பேசியிருக்கிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? இப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடத்தான் அவர்கள் தவியாக தவிக்கிறார்கள்.

ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசில், மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் பேணப்படுகிறது. வக்பு திருத்த சட்டம், C.A.A ஆகியவற்றை எதிர்த்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இங்கு இருக்கிறார்கள். பெரும்பான்மையினர் சகோதர உணர்வோடு இருக்கிறார்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள்.

வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இந்தப் பகுதியை சேர்ந்த நம்முடைய பாலபிரஜாபதி அடிகளார் என்ன பேசியிருக்கிறார் என்றால், “நம்முடைய முதலமைச்சருக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை! மொழி இருக்கிறது, இனமான உணர்வு இருக்கிறது! இது ஒரு பொற்காலம்!” என்று பேசியிருக்கிறார்.

வள்ளலார் அன்பர்கள் பாராட்டுகிறார்கள். உண்மையான ஆன்மீக பெரியோர்கள் பாராட்டுகிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது! நான் வெளிப்படையாகவே பா.ஜ.க.வினரை கேட்கிறேன். எப்போதுதான் நீங்கள் வன்முறையை விட்டு, வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள்?

எப்போதுதான் வெறுப்பையும், பிரிவினையையும் விதைக்கின்ற முயற்சிகளை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கு நல்ல விஷயம் பற்றிப் பேசப்போகிறீர்கள்? யோசிப்பீர்கள்? தொடர்ந்து தமிழ்நாட்டை குறைசொல்லி பேசுகிறீர்களே. அதற்கு முதலில், உங்களுக்கு தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளுகின்ற எந்த மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக ஆளப்படுகிறது? தமிழ்நாட்டிற்கு வர இருக்கின்ற மாண்புமிகு பிரதமர் அவர்கள், நம்முடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எடுத்த நடவடிக்கை என்ன? இலங்கை கடற்படையால், நம்முடைய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்? இதை தீர்த்து வைப்போம் என்று சொல்லித்தானே 12 ஆண்டுகளுக்கு முன்னால், உறுதிமொழி வழங்கிவிட்டு, வாக்குறுதி வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தீர்கள்? வெளியுறவுத் துறையும், கடற்படையும் யார் கண்ட்ரோலில் இருக்கிறது? இவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சரியான ஆள்தான் இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்கள்!

ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் 15 இலட்சம் ரூபாய் தருவேன் என்று வடை சுட்ட மாதிரியே, பழனிசாமி அவர்களும் வாய்க்கு வந்தபடி வெரைட்டி வெரைட்டியாக இப்போது வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை!

இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் – தேர்தலை காரணமாக காட்டி, மகளிர் உரிமைத்தொகையை மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைத்துவிடலாம், மக்களுக்கு தி.மு.க. அரசு மீது அதிருப்தியை கொண்டு வந்து, கெட்டப் பெயரை ஏற்படுத்தலாம் என்று சூழ்ச்சி செய்தார்கள். இதை அட்வான்சாக நாங்கள் தெரிந்து கொண்டு, என்னுடைய சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணமாக வழங்கினேன்.

நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், மக்கள் மகிழ்ச்சி! பாவம் எதிர்க்கட்சிகள்தான் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். முதலில், இதை கிண்டலடித்தார்கள், கொச்சைபடுத்தினார்கள். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களாலேயே நம்முடைய அதிரடி முடிவுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை மறைக்க முடியவில்லை.

அதனால், இப்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். எங்களால்தான் நடந்தது என்று உரிமை கொண்டாட வந்திருக்கிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி புலம்புங்கள். எங்கள் திட்டங்கள் இப்போது ஹிட்டாகிவிட்டது! 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு தொகுப்பு மக்களிடம் சூப்பர் ஹிட்! ஹிட்டோ ஹிட்!

பா.ஜ.க. டப்பா எஞ்சினை நம்பி, அ.தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. என்ற மூழ்கும் கப்பலை நம்பி, பா.ஜ.க. இருக்கிறது! பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான்! ராஜ்ஜியம் கிடைக்காது! நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின்! 11.19 சதவிகிதம் இரட்டை இலக்கு வளர்ச்சியோடு யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிவேகமாக முன்னால் சென்று கொண்டிருக்கிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும். இப்போது நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளை எங்களுடைய Second Innings-இல் நாங்களே மிஞ்சுவோம்.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில், ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்! நாட்டிற்கே வழிகாட்டும் நம்முடைய மக்கள்நலத் திட்டங்கள் தொடர, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட, வெல்வோம் ஒன்றாக! தமிழ்நாடு வெல்லட்டும்!

Also Read: கன்னியாகுமரியில் ஒரே நாளில் 3,12,082 பேருக்கு நலத்திட்ட உதவிகள்! : முழு விவரம் உள்ளே!