Politics
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் (16-வது பேரவை) எட்டாவது கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று (20-2-2026) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை
16-ஆவது சட்டமன்றப் பேரவையின் எட்டாவது கூட்டத்தொடரின் நிறைவு நாளில் நாம் இங்கே ஒன்று கூடியுள்ளோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஐந்து நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப் பெற்று, இந்த ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றின் மீது சிறப்பான விவாதம், பதிலுரை வழங்கப் பெற்றுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் சிறப்பான அறிக்கையையும், பதிலுரையையும் வழங்கியிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியை, அடுத்த இரண்டு மாதத்தில் மீண்டும் வந்து, நிச்சயம், இன்னும் கூடுதலாக, வேகமாகத் தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களைப் போலவே எனக்கும் இருக்கிறது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், சமூகநீதியும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இன உணர்வும், மாநில சுயாட்சிக் கொள்கையும் தமிழினத் தலைவர் கலைஞரின் சிறப்பான நிர்வாகமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசைக் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடத்திக்காட்டி இருக்கிறோம் என்ற மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன்னர் அமர்ந்த பலரும், இன்றைக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்கள் அனைவருமே போற்றப்படக் கூடியவர்கள்தான். ஆட்சிச் சக்கரத்தை உயர்த்திப் பிடித்தது மகத்தானது.
தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கால நேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணையோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை.
இதனையே நானும் கடைப்பிடித்திருக்கிறேன். ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு - அந்த முடிவினால் விளையும் பயன் – பயன் பெற்றவர்களின் உயர்வு - உயர்வினால் உண்டாகும் வளம் - வளத்தினால் விளைந்திடும் இன்பம் - இன்பத்தால் கிடைத்திடும் நன்மை - இதுவே நாம் இப்போது காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த நன்மையே மக்களுக்கு நம்பிக்கையைத் தந்து, நாளைய ஆட்சியாளர்களாக எங்களைத் தொடரச் செய்யப் போகிறது.
இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளும் வல்லமையையும் பெற்றுள்ளேன்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பைத் தந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
நூற்றாண்டைக் கடந்து பெருமையோடு இயங்கி வருகிறது இந்தப் பேரவை. கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்தப் பேரவையினுடைய நூற்றாண்டு விழாவுக்கு வந்து நவீன தமிழ்நாட்டின் சிற்பியான தலைவர் கலைஞர் அவர்களின் படத்தையும் திறந்து வைத்த அன்றைய மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில்கொண்டு, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் பேரவைத் தலைவராகப் பணியாற்றும் நீங்கள் அமைதியாகவும், கண்ணியத்தோடும் அதேநேரத்தில் கட்டுப்பாட்டோடும் தங்களுடைய ஆற்றலால் இந்தப் பேரவையைச் சிறப்பாக நடத்திச் சென்றிருக்கிறீர்கள்.
அதற்காக என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தப் பேரவையில் பெரும்பான்மை இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர் என்கிற முறையில் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுக்குத் துணையாக நின்று, பேரவையின் துணைத் தலைமைப் பொறுப்பை ஏற்று, அமைதியாக, சிறப்பாகப் பேரவையை நடத்தும் பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், நன்றிகள்.
இப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறக்கூடிய நேரத்தில், கருத்து மோதல்களை எதிர்கொண்டு, கட்சி வேறுபாடுகள் வெளிப்படுகையில் தன்னுடைய அனுபவத்தினாலும், அபார நினைவாற்றலாலும் அமைதிப்படுத்தக்கூடியவர், பேரவையின் மூத்த உறுப்பினர் அவை முன்னவர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.
அவர் தற்போது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகள்.
பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றும் அரசு தலைமைக் கொறடா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
மக்கள் பணியானாலும் சரி; வந்த, வருகின்ற தேர்தல் பணிகளானாலும் சரி; என்னில் ஒரு பாதியாய், இயக்கத்தின் வளர்ச்சிக்கும், ஆட்சியின் சிறப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், நன்றிகள்.
முக்கியமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் உருவாக்கினாலும், அவை சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"குறைகளைச் சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்குச் சிறகுகளைத் தரக்கூடியவர்கள்" என எண்ணிச் செயலாற்றுபவன் நான். அரசுக்குத் தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்றைக்கு வரவில்லை.
இருந்தாலும், அவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கெல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அன்போடும் பாசத்தோடும், என்றென்றும் என்னிடத்திலே உரிமையோடு அன்புகாட்டி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
16-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் என்ற முறையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமிதம் அடைகிறேன்.
இந்த அரசு சிறப்பாகச் செயல்படுவதற்கு அனைத்து வகைகளிலும் துணைநின்ற தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும், காவல் துறை அலுவலர்களுக்கும், அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஒவ்வொரு துறையிலும் இருந்து வருகிற கோப்புகளை எனக்குச் சமர்ப்பித்து, அனுமதி பெற்று, அத்திட்டங்களைக் கண்காணிக்கும் என்னுடைய செயலாளர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பேரவை மிகச்சிறப்பாக நடைபெற கடந்த 5 ஆண்டுகளாகப் பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றும் நம்முடைய பேரவை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும், பேரவையினுடைய அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரவையினுடைய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு, உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நான் நினைவுகூர வேண்டியவர்கள், இந்தப் பேரவைக்கு நம் எல்லோருடனும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம்முடன் பணியாற்றிய மாண்புமிகு உறுப்பினர்கள் ஐந்து பேர் மறைவெய்திவிட்டார்கள். தம்பி திருமகன் ஈ.வெ.ரா, விழுப்புரம்
புகழேந்தி, சகோதரர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், அமுல் கந்தசாமி, பொன்னுசாமி ஆகிய ஐவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து அவர்களாற்றிய பணிகளுக்காக என்னுடைய நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 24-01-2026 அன்று இதே பேரவையில் நான் உரையாற்றும்போது குறிப்பிட்டதை இப்போது நான் நினைவுகூர்கிறேன்: “2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 6-வது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்குக் கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை.
இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது” என்று நான் சொல்லியிருந்தேன்.
முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு; நமக்கு ஒத்துழைக்காத, ஓரவஞ்சனை செய்யக்கூடிய ஒன்றிய அரசு இரண்டுக்கும் இடையில்தான் நாம் இருந்தோம். நமக்குப் பெரும் வெற்றியைத் தந்து பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம்.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த 5 ஆண்டுகளில் அடைந்திருக்கின்றோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை, இயற்றிய சட்டங்களை மக்களின் முன் வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.
திராவிட மாடல் அரசால், இந்த 5 ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை;
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்துச் சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லை! இல்லவே இல்லை! ஒட்டுமொத்த தமிழர்களும் என் கையோடு கைசேர்த்து, எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள்.
நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன்.
நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உழைத்த நான், இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.
எவரேனும் விடுபட்டிருந்தால், அவர்களையும் இணைத்துக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!