Politics

“ஆளுநரின் மைக்கை அணைக்கவில்லை! அதன் அவசியம் எங்களுக்கு இல்லை!” : அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு,

“ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கவேண்டிய ஆளுநர், இன்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாக நம்முடைய சட்டமன்றத்திற்கு வந்து சென்றிருக்கிறார். சட்டமன்றத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அவர்களிடத்தில் நாங்கள் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு, முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடுவது - நிகழ்ச்சி முடிந்தவுடன் இறுதியிலே தேசிய கீதம் பாடுவது - இது தமிழ்நாட்டின் மரபு என்பதை எடுத்துச் சொல்லி வந்து கொண்டிருந்தாலும் கூட அவர் அவர் இன்றைக்கு பேசத் துவங்கும்பொழுதே, தேசிய கீதம் படவில்லையே? என்று சொன்னார்.

அது மரபல்ல - நாங்கள் இன்றைக்கு உரையை நிகழ்த்த வேண்டும் என்று சொன்னதற்கு திரும்பத் திரும்ப அவர் எழுதிக் கொடுக்கப்பட்ட அல்லது தயாரித்துத் தரப்பட்ட அல்லது தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட அந்த ஆளுநர் அறிக்கையை வாசிக்காமல், தானாக ஏதாவது வார்த்தைகளை எல்லாம் சொல்லி, அதன் மூலமாக ஏதாவது இங்கே சட்டமன்றத்தில் பிரச்சினைகளை கிளப்ப முடியுமா? என்று பார்த்தார்.

ஆனால் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.  நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர், சட்டமன்றத்தில் ஆளுநர் அறிக்கையை படியுங்கள் என்ற வேண்டுகோளை, தயவு செய்து, தயவு செய்து, எவ்வளவு தூரம் எளிமையாக தாழ்ந்து போய் கேட்கமுடியுமோ அந்தளவுக்கு சபாநாயகர் கேட்டிருக்கின்றார். ஆனாலும், அவர் அப்படிக் கேட்டு, நீங்கள் எழுதிக் கொடுத்த உரையை வாசியுங்கள் என்று சொல்லும்போது, அதை வாசிக்காமல் ஆளுநர் அவர்கள் வெளியேறிவிட்டார். 

வெளியேறிச் சென்ற பிறகு, தன்னுடைய ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு ஒரு அறிக்கையை தந்திருக்கின்றார். அவருடைய மைக் ஆஃப் செய்யப்பட்டது போல நாங்கள் அத்தனை பேரும் அங்கு தான் இருக்கின்றோம் – பத்திரிகையாளர்களாகிய நீங்களும் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தீர்கள். எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது?

அவர் பேசுகின்ற பொழுது, சட்டப்பேரவைத் தலைவர் எழுந்து நின்று, அவர் எழுதிக் கொடுத்திருக்கின்ற அந்த வாசிப்பை வாசியுங்கள் என்று நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி, கேட்கின்ற ஒன்றை சட்டப்பேரவைத் தலைவருக்கு உண்டு.

ஏனென்றால், சபையை நடத்துகின்றவர் அவர் - சபையினுடைய விருந்தினர், இன்றைக்கு சட்டமன்றத்தின் தலைவராக இருக்கக் கூடிய ஆளுநர் – அந்த ஆளுநர் அந்த உரையை வாசித்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு, திரும்பத் திரும்ப கேட்க கேட்க வேறு வேறு கேள்விகள் சொல்லிவிட்டு, இப்பொழுது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்.

மைக் ஆஃப் செய்யப்படவில்லை. அது சுத்தமான புழுகு. அதை தமிழக மக்களுக்கு தெரிவிப்பதற்காக இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கின்றோம். ஆளுநர் ஏதோ தான் சொல்லிவிட்டால், அதை மக்கள் உண்மையாக எண்ணி விடுவார்கள் என்று நினைக்கின்றார். ஆளுநரின் மைக் அமத்தப்படவில்லை. அமத்தவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. அவர் பேசத்தான் விட்டிருக்கிறோமே தவிர மைக்கை ஆஃப் செய்யவில்லை.

ஆனால், அங்கிருந்து பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை இன்றைக்கு எதிர்க்கட்சிகள் சொல்லப்படாத குற்றச்சாட்டுகளை எல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு, எல்லோருக்கும் வக்காலத்து வாங்குகின்ற ஒரு வக்கீலாக இருந்து கொண்டு இந்த அரசுக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் சொல்ல முடியுமோ அதையெல்லாம் பொய்யாக இன்றைக்குச் சொல்லி இருக்கின்றார். 

தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும்பொழுது நம்முடைய முதலீடுகள் 12 லட்சம் கோடி ரூபாய் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்கிறோம் – அதோடு இல்லாமல், நாம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் 4வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு போய் விட்டோம் என்று சொல்கிறார் - இந்திய ஒன்றியம் தன்னுடைய கணக்கில், 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை கண்டிருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்று இந்திய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

நாங்கள் அறிவிக்கவில்லை – ஆனால், இவர் எதைப் பார்த்து சொல்கிறார் - எந்த கணக்கை பார்த்துக் கொண்டு சொல்கிறார் – இவர் தூங்கிக்கொண்டுப் பார்த்துச் சொல்கிறாரா? விழித்துக்கொண்டு சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால், நாங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கிற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. அதை யாராலும் மறைக்க முடியாது.

அதைப்போல, தொழில் வளர்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு வெளிநாடுகள் இங்கு வந்திருக்கின்றன - பல தொழிற்சாலைகள் இன்றைக்கு உண்டாகி இருக்கின்றது - அதனால் தான் இந்த வளர்ச்சியை நம்மால் எட்ட முடியும் - தொழில் வளர்ச்சி இல்லை என்று சொன்னால் 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைவது என்பது சாத்தியமே கிடையாது - அதற்கு அடிப்படை காரணம் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு.

எனவே இந்த வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி பற்றிய ஆளுநர் சொல்லிய கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை - ஒன்றிய அரசின் கணக்கெடுப்பு சரியானதாக 11.19% பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி - அதை ஆளுநர் அவர்கள் பொய்யாக சட்டமன்றத்தில் சொல்வதற்கு பதிலாக, ஆளுநர் மாளிகையில் இருந்து இன்றைக்கு சொல்லி இருக்கின்றார். 

என்ன காரணம் - அது அவருக்கு தான் தெரியும் - தமிழ்நாட்டின் மீது என்ன விரோதம் என்று அவருக்கு தான் தெரியும் - 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி எப்படி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்பதை நீங்கள்தான் சென்று கேட்க வேண்டும் - இங்கு தொழிற்சாலைகள் வரவில்லை வேலைவாய்ப்புகள் பெருகவில்லை என்று சொன்னால் எப்படி 11.19% பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டில் எட்டும் என்று ஆளுநர் அவர்களை பார்த்து நீங்கள் அவர்களை பார்த்து கேளுங்கள். 

கேள்வி - ஆளுநர் வெளியே சென்ற 10 நிமிடத்தில் மூன்று பக்கத்திற்கு அறிக்கை வந்திருக்கிறது அப்போது அது முன்பே தயாரிக்கப்பட்டதா? பதில் - ஆமாம் முன்னாலேயே தயாரிக்கப்பட்டது தான் ஆளுநர் இங்கிருந்து வெளியேறுகிறார் வெளியேறிய உடனேயே அந்த அறிக்கை ஆளுநர் மாளிகையில் இருந்து வருகிறது என்று சொன்னால், எல்லாம் திட்டமிடப்பட்ட வேலைகள் தான்.

எனவே அவர்கள் முன்பே தயாரித்து வைத்திருக்கலாம் – எங்களுக்கு அதைப் பற்றி கவலையில்லை - தமிழ்நாட்டை குறை சொல்ல வேண்டும் – 2026 என்பது தேர்தல் ஆண்டு – இதில் ஆட்சியைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் ஏதாவது கனவு கண்டிருக்கிறார் - 11.19% பொருளாதார வளர்ச்சியை மூடி மறைக்க யாராலும் முடியாது - எந்த சக்தியாலும் முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி - தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கிறது என்பது ஆளுநரின் அறிக்கை…

பதில் - முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து - இறுதியில் தேசிய கீதம் - அதுதான் தமிழ்நாட்டின் வழக்கம் நம்முடைய சட்டமன்ற நிகழ்ச்சியின் வழக்கம். அந்த மரபு படி தான் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். மரபை மீறவில்லை மரபை மீறினால் தான் தவறு நாங்கள் மரபுப்படி நடந்து கொண்டிருக்கிறோம்.

Also Read: அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி : CPI(M) செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!