Politics

முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!

முரசொலி தலையங்கம் (21-11-2025)

கோவையும் மதுரையும் பாவ நகரங்களா?

தமிழ்நாட்டுக்கு ‘அல்வா’ கொடுப்பதில் பா.ஜ.க.வுக்கு யாராவது சொல்லித் தர வேண்டுமா என்ன? முதலில் ‘எய்ம்ஸ்’ அல்வா கிண்டிக் கொடுத்தார்கள். இப்போது ‘மெட்ரோ’ அல்வாவை கொடுத்துள்ளார்கள். இவை அனைத்துக்கும் சேர்த்து மக்கள் கணக்குத் தீர்க்கக் காத்திருக்கிறார்கள்.

கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் நொள்ளையானது. 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து. இப்போது நடப்பது 2025 ஆம் ஆண்டு. இந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை இப்போது கூடி இருக்கும். இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்துக்கு பணம் ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றும் போது 2035 ஆம் ஆண்டு ஆகி இருக்கும். அப்போது கோவை, மதுரைக்கான மக்கள் தொகை எண்ணிக்கை 20 லட்சத்தை எல்லாம் தாண்டி இருக்கும். இதெல்லாம் பா.ஜ.க. புத்திசாலிகளுக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் மக்கள் தொகையைக் காரணமாகக் காட்டுகிறார்கள் என்றால் என்ன காரணம்? அவர்களுக்குச் சொல்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். அவ்வளவுதான்.

இந்த மாதிரியான மொண்ணையான காரணங்களை தமிழ்நாட்டுக்காகவே தேடிக் கண்டு பிடித்துச் சொல்வார்கள். மற்ற மாநிலங்களுக்கும் இதே போன்ற அளவுகோல்களைப் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை.

ஆக்ரா மக்கள் தொகை 16 லட்சம்தான். ஆனால் அங்கே மெட்ரோவுக்கு அனுமதித்து உள்ளார்கள். பாட்னா மக்கள் தொகை 17 லட்சம்தான். ஆனால் அங்கே மெட்ரோவுக்கு அனுமதித்து உள்ளார்கள். போபால் மக்கள் தொகை 18 லட்சம்தான். ஆனால் அங்கே மெட்ரோவுக்கு அனுமதித்து உள்ளார்கள். கோவைக்கும், மதுரைக்கும் மறுக்க என்ன காரணம்? இந்த இரண்டு மாபெரும் நகரங்களும் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால்தான் மறுத்துள்ளார்கள்.

பா.ஜ.க. தமிழ்நாட்டை ‘பாவ மாநிலமாக’ பார்க்கிறது. அதனால் கோவையையும், மதுரையையும் ‘பாவ’ நகரங்களாகப் பார்க்கிறது. தங்களுக்கு வாக்களிக்காத மக்கள் வாழும் நகரங்களை அப்படித்தானே பார்ப்பார்கள்.

சென்னையில் 54 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த நிலையில் கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை வைக்கப்பட்டது. திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவைக்கு வாய்ப்பு இல்லை, அதற்கான வசதி இல்லை என்று முதலிலேயே நிராகரித்து விட்டார்கள். சேலம், திருச்சி பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அது தொடர்பான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. கோவை, மதுரையை மட்டும் ஆய்வு செய்தது மெட்ரோ நிர்வாகம். அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையில் ஏதாவது குறைகள் இருந்தால், திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் சொல்லலாம். ஆனால் அதனை விடுத்து, மொத்தத் திட்டத்தையும் ஊத்தி மூடுவது ஏன்?

மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று 2011 ஆம் ஆண்டே வரையறுத்த நகரங்களில் முக்கியமானது கோவை. அந்தப் பட்டியலில் இருக்கும் பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் 14 ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல்படுத்தப் படாத நகரமாக கோவை இருக்கிறது. ‘கோவை’யைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க., கோவை மக்களுக்கு இழைக்கும் அநீதியல்லவா இது? கோவைக்கு பிரதமர் வந்த நாளில்தான், இந்தத் தகவல் வெளியானது. இது அவமானம் இல்லையா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? கோவைக்கு வருகிறீர்கள்?

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் இப்படித்தான் நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தது பா.ஜ.க. அரசு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போராடித்தான் நிதியைப் பெற்றார்.

சென்னை மெட்ரோ – 1 என்ற திட்டத்தை 2008 ஆம் ஆண்டு உருவாக்கியதும் தி.மு.க. அரசுதான். இன்றைக்கு சென்னை மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கக் காரணம் தலைவர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான்.

இந்த அடிப்படையில்தான் மெட்ரோ –2 என்ற திட்டம் உருவானது. மூன்று ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதற்கு நிதி கொடுக்காமல் வைத்து இருந்தார்கள்.

முடிந்தவரையில் டிமிக்கி கொடுத்து வந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். பிரதமருடன் கலந்து கொண்ட மேடைகளிலும் இதனை வலியுறுத்தினார் முதலமைச்சர். பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதை வலியுறுத்தினார்.

2024 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி அன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘’சில மாநில அரசுகள் இலவசப் பயணம் என அறிவிக்கிறார்கள், இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை. எனவே மெட்ரோ திட்டங்களால் பயனில்லை’’ என்று சொன்னார். எந்த மோடி? நேற்று கோவைக்கு வந்து, ‘தமிழில் பேச முடியவில்லையே’ என்று வருந்தினாரே அந்த மோடிதான், இப்படிச் சொன்னார்.

தொடர்ந்து வலியுறுத்திய பிறகுதான் மெட்ரோ – 2 திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாளன்று ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலை வழங்கியது. 7,425 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு வழங்க முடிவெடுத்தது. தமிழ்நாடு அரசு 22 ஆயிரத்து 228 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. மீதமுள்ள 33 ஆயிரத்து 593 கோடி ரூபாயை நாம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன் தொகை என்பது ஒன்றிய அரசின் கடனாகக் கருதப்பட்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். இந்தக் கடனை நாம்தான் கட்டப் போகிறோம். அனுமதி கொடுப்பதற்குதான் இவ்வளவு முரண்டு பிடித்தார்கள்.

பணமும் முழுமையாக அவர்கள் பணமில்லை. கடன் வாங்கி, அவர்கள் கட்டப் போவதும் இல்லை. ‘அனுமதி’ தருவதற்கு இவ்வளவு முரண்டு பிடிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?

தமிழ்நாடு முன்னேறி விடக் கூடாது என்பதுதான். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது என்பதுதான்.

Also Read: “மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!