Politics

“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக பீகார் விளங்கி வருகிறது.

சுமார் 13 கோடி மக்கள் வாழும் பீகார் மாநிலத்தில் மக்கள்தொகை கூடிக்கொண்டே செல்வதுபோல, வறுமையும், வேலையின்மையும் கூட கூடிக்கொண்டேதான் செல்கிறது.

குறிப்பாக, இந்திய அளவில் அதிகப்படியான இளைஞர்கள் இருக்கும் பீகாரில், ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த தேர்தலில் ஆண்டிற்கு சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளித்து வென்ற நிலையிலும், அதில் கால் பகுதிகூட நிறைவேற்றப்படவில்லை என்பதே கசப்பான உண்மை நிலவரம்.

இதனை உணர்ந்து 20 ஆண்டுகால பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு முட்டுக்கட்டையிடும் வகையில் இந்தியா கூட்டணி தீவிர மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டும், தேர்வு முடிவுகள் என்னவோ பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகவே இருந்தது.

இதற்கு தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால், 65 லட்சம் வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதே நேரம், நாட்டில் பிற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வாக்களித்த பலர், பீகாரிலும் வாக்களித்த செய்திகள் பல தகுந்த சான்றுகளோடு இணையத்தில் உலா வந்தும், அதற்கு தேர்தல் ஆணையமோ, அதனை மறைமுகமாக இயக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசோ கண்டும் காணாததுபோல அமைதி காத்தது.

அதனால், எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடும் நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வேலைவாய்ப்பின்மையின் காரணமாக புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் வலுக்கட்டாயமாக பீகார் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படும் காணொளி உழைக்கும் மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனைக் கண்டித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, “பீகாரில் தேர்தல் முடிந்த பிறகு, வலுக்கட்டாயமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

20 ஆண்டுகால பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு பிறகும், இந்த நிலை மாறவில்லை. இம்முறை அனைத்து மாவட்டங்களிலும் பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்த NDA கூட்டணி, இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் அதை நிறைவேற்றாது” என குற்றம் சாட்டியுள்ளது.

Also Read: “முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!