Politics
"விஜயின் பேச்சில் அனுதாபம் இல்லை, ஆணவமும், திமிரும், அலட்சியமும்தான் இருந்தது" - முரசொலி விமர்சனம் !
முரசொலி தலையங்கம் (02-10-2025)
ஆணவம் அடங்காத விஜய் !
தனது நாற்காலி ஆசைக்காக, விளம்பர வெறிக்காக, பணப் பசிக்காக 41 உயிர்களைப் பலிவாங்கிய நடிகர் விஜயின் ஆணவம் இன்னும் அடங்கவில்லை என்பதையே மூன்று நாட்கள் கழித்து அவர் வெளியிட்ட வீடியோ காட்டுகிறது.
அந்த ஷூட்டிங் வீடியோவில் 41 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அவர்களது பெயரைச் சொல்லவில்லை. அவர் தம் குடும்பத்தின ருக்கு ஆறுதல் சொல்லவில்லை. 'எனக்காக உயிர் இழந்துவிட்டார்களே' என்று அனுதாப வார்த்தைகள் இல்லை. ஆனால் ஆணவமும், திமிரும், அலட்சியமும், அகங்காரமும்தான் இருந்தது. 'இன்னும் வருவேன், இப்படித்தான் நடந்து கொள்வேன்' என்ற தடித்தனம்தான் இருந்தது. 'என்னை எவன் கேட்க முடியும்?' என்ற வார்த்தை தடிப்பு தான் இருந்தது.
41 உயிர்களும் அவரது ரசிகர்கள் தான். அவர்களுக்காகக் கூட இரங்காத அவர் உள்ளம் யாருக்காக இரங்கப் போகிறது. வருத்தம் தெரிவிக்கவில்லை அவர். மன்னிப்பு கேட்கவில்லை அவர். அவர்களை இன்னும் போய் பார்க்கவில்லை விஜய். பார்க்கச் செல்லவில்லை என்றால், அவர் தம் குடும்பத்தினருடன் போனில் பேசினாரா என்றால் அதுவும் இல்லை. பனையூரில் பதுங்கியவாறு வீடியோ வெளியிடுகிறார்.
உயிரற்ற உடல்கள் சரிவதைக் கேள்விப்பட்ட பிறகும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் கரூரை விட்டு ஓடிவந்தவர்தான் விஜய். திருச்சி விமான நிலையத்திலோ, சென்னை விமான நிலையத்திலோ, சென்னையில் தனது வீட்டுக்கு முன்பாகவோ நின்று ஊடகங்கள் மூலமாக, அஞ்சலி செலுத்தி இருக்கலாம். இரங்கலைத் தெரிவித்திருக்கலாம். அவர்தான் வரவில்லை. அவரது கட்சியின் இரண்டாம் கட்ட பிரமுகர்கள் வந்தார்களா என்றால் இல்லை. அவர்கள் தலைமறைவு ஆகிவிட்டார்கள். கட்சியின் நிர்வாகிகள் கூட மக்களைச் சந்திக்க வரவில்லை. இதைத் தான் அந்த ஊர் மக்களும், இறந்தவர் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
6 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? என்பதற்கு அவர் அந்த வீடியோவில் விளக்கம் சொல்லி இருந்தால் அவரை மனிதராக நினைக்கலாம். காலை 3.45 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு மதியம் 3 மணிக்கு வந்ததும், மதியம் 12 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு இரவு 7மணிக்கு வந்ததும் யாருடைய 'சதி'? விஜயை குறிப்பிட்ட நேரத்துக்கு வரவிடக் கூடாது என்று செந்தில் பாலாஜி தடுத்துவிட்டாரா?
விஜய் போன இடங்களில் எல்லாம் மக்கள் மயங்கி விழுந்துள்ளார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதை மனதில் வைத்து, அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு வந்திருக்க வேண்டியது அவர்தானே? அல்லது அந்த மக்களுக்கு உணவும், தண்ணீரும் தந்திருக்க வேண்டியது அவரது கட்சிக்காரர்கள் தானே? அவர் கூட்டத்துக்கு வந்து காத்திருப்பவர்களுக்கு செந்தில் பாலாஜி சாப்பாடு போடுவார் என்று நடிகர் விஜய் நினைக்கிறாரா?
கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் சினிமா முகபாவனையுடன் வீடியோவில் பேசுகிறார். 41 குடும்பங்களின் ஓலம் விஜயின் கல்நெஞ்சை கரைக்கவில்லை. பனையூரில் இருந்தவாறு மீண்டும் ஒரு ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார் விஜய். மற்றவர்கள் மீது பழிபோட்டே அரசியலை நடத்திவிடலாம் என விஜய் நினைக்கிறார்.
'அவர் மட்டும் பவுன்சர்களோடு பாதுகாப்பாக நின்றார். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் செய்யவில்லை' என்று கரூர் மக்கள் பேட்டி தந்து வருகிறார்கள். 'உள்ளே வந்து பல மணிநேரமாக காத்திருந்த எங்களுக்கு தண்ணீர் தரவில்லை, பாத்ரூம் போகக்கூட வெளியே விடாமல் கயிறு வைத்து கட்டி விட்டார்கள்' என்றும் ஒரு பெண் கதறுகிறார். 'இத்தனை பேர் செத்த பிறகும் இங்க வந்து பார்க்காமல், எதுக்காக விஜய் சென்னை போனார்?' என்று ஒரு பெண் கேட்கிறார். விஜய் பாணியில் சொன்னால், 'இதுவும் கடவுளின் குரல் தான்'. இதற்குப் பதில் சொல்லவில்லை விஜய்.
விஜயை நோக்கி கரூர் நீதிபதி பரத்குமார் கேட்ட கேள்விகள் அவரது தடித்த தோல்களுக்கு இன்னும் உறைக்கவில்லை என்பதையே உணர முடிகிறது. நிர்வாகிகள் யாரும் தகவலை உங்கள் தலைவருக்கு சொல்லவில்லையா? கூட்டம் அளவை கடந்துச் சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை? என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு விஜயின் பதில் என்ன?
இதை விட்டு விட்டு, 'கரூரில் மட்டும் எப்படி நடந்தது?' என்று பனையூரில் விட்டத்தைப் பார்த்து விஜய் கேள்வி கேட்கிறார். திருவள்ளூரில் பேச வேண்டிய தேதியை உடனடியாக கரூருக்கு மாற்றியது ஏன்? அதுதான் 'சதி' ஆகும். டிசம்பர் 13 தான் கரூரில் விஜய் பேசுவதற்கு குறிக்கப்பட்ட தேதியாகும். அதை மாற்றி செப்டம்பர்27 ஆம் தேதியே கரூருக்கு வந்த சதியை விஜய்தான் விளக்க வேண்டும்.
இந்த லட்சணத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கு சவால் விடுகிறார் விஜய். சம்பவம் நடந்த உடனேயே நள்ளிரவில் கரூருக்குச் சென்று அனைவரையும் பார்த்தார் முதலமைச்சர். ஆறுதல் சொன்னார் முதலமைச்சர். இறந்தவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர். இதை வைத்து, 'விஜய் எங்கே போனார்?' என்று கேட்கிறார்கள் பொதுமக்கள். அந்த ஆத்திரம்தான் முதலமைச்சர் மீதான கோபமாக மாறுகிறது.
110 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். விஜயை பார்க்க வந்தவர்கள் அவர்கள். இவர்கள் அனைவர் மருத்துவச் செலவையும் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. விஜய் பார்க்கவில்லை. அதை திசை திருப்ப முதலமைச்சர் மீது பாய்கிறார் விஜய்.
இறந்தவர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயை முதலமைச்சர் கொடுத்ததால்தான், 20 ரூபாய் லட்சம் அறிவிக்க வேண்டிய நெருக்கடி விஜய்க்கு வந்தது. இல்லாவிட்டால் விஜய் அறிவித்திருக்க மாட்டார். ஒருவேளை முதலமைச்சர், இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் அறிவித்திருந்தால் விஜய், இரண்டு லட்சம்தான் அறிவித்திருப்பார். இது அவரது ரசிகர்களுக்கே தெரியும். விபத்தில் இறந்த கட்சிக்காரர்களுக்கு இதுவரை அவர் நிதி கொடுத்தது இல்லை.
அரசு அறிவித்த பணத்தை இறந்தவர் குடும்பத்துக்கு தந்துவிட்டது. ஆனால் விஜய் இன்னும் தரவில்லை. அய்யோ தன்னிடம் இருக்கும் பணம் போகப் போகிறதே என்ற ஆத்திரத்தில்தான், ‘என்னைக் கைது செய்யுங்கள்' என்று சவால் விடுகிறார் விஜய். அதன் மூலமாக 41 பேர் மரணத்தை திசை திருப்பப் பார்க்கிறார். அவரது நடிப்பு திரையில் எப்போதோ ஃபெயில் ஆகிவிட்டது. நிஜத்தில் அது செல்லுபடி ஆகாது.
Also Read
-
கல்வி உரிமைச் சட்டம் (RTE)) மாணவர் சேர்க்கை தொடக்கம் : யார் யாருக்கு முன்னுரிமை - முழு தகவல் இங்கே!
-
காந்தியின் சிலையை தொடுவதற்கே அருகதை அற்றக் கூட்டம் : காவி ஆடை - வைகோ ஆவேசம்!
-
“மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
“RSS-உடன் தொடர்பு? விஜயை சுற்றி அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயின்றவர்கள்” -திருமாவளவன் MP விமர்சனம்!
-
”திராவிட மாடல் அரசு மீது காழ்ப்புணர்வுடன் குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.என்.ரவி” : வைகோ கண்டனம்!