Politics

“2026 தேர்தலுக்கு 6 மாதம் ‘கால்ஷீட்’ கொடுத்திருக்கிறார் விஜய்!” : விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் பதிலடி!

நாகை மாவட்டத்தில் மக்களை சந்திக்கிறேன், பிரச்சாரம் செய்கிறேன் என விஜய் தெரிவித்து, ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் அவதூறு கருத்துகளை முன்வைத்தது, தமிழ்நாட்டளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில், சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினத்தின் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அவதூறுகளையும், இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும், வாயில் வந்ததை பேசும் நடைமுறையையும் விஜய் கையில் எடுத்திருக்கிறார். அவர் நேற்று (செப்.20) நாகை மாவட்டத்திற்கு வந்து, முழுக்க முழுக்க பொய் தகவல்களை பரப்பிவிட்டு சென்றிருக்கிறார்.

முன்னுக்கு பின் முரணாக பொய்யை சொல்லி கவனத்தை ஈர்க்கிற வழக்கத்தை இதுவரை பா.ஜ.க.வில்தான் பார்த்து வருகிறோம். அதை இப்போது விஜய்-யும் செய்கிறார். பா.ஜ.க.வின் தன்மையை இவரே பிரதிபலிக்கிறார் என்ற சந்தேகமும் அவர் மீது எழுந்துள்ளது.

விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று அவரது கட்சியின் மாவட்ட செயலாளர்தான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார், கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால், அதை அரசாங்கம் திட்டமிட்டு செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் விஜய்.

நாகை மாவட்டத்தில் மிகப்பெரிய மீன் இறங்குதளம், மீன் பதப்படுத்தும் நிலையம், புயல் பாதுகாப்பு மையம், பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு சுவர் என பல கோடி ரூபாய் செலவில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர்த்து உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாத்துறை திட்டங்கள் என ஏராளமான திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தி வருகிறது.

நாகப்பட்டினம் வரலாற்றிலேயே ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, விரைவில் செயல்முறைக்கு வர இருக்கிறது. இதுபோன்று பார்த்து பார்த்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், நாகையில் என்ன நடந்திருக்கிறது என்ற புரிதலே இல்லாமல் பேசியிருக்கிறார் விஜய்.

அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த விஜய் அவர்களே, முதலில் நீங்கள் செய்தியாளர்களை சந்தியுங்கள். அந்த தைரியம் இருக்கிறதா உங்களுக்கு? கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வதுதான் துணிச்சல். அரசியலில் அந்த துணிச்சல் வேண்டும். எந்த கேள்வி கேட்டாலும், பதில் சொல்வதுதான் ஒரு தலைவருக்கான இலக்கணம். அது எங்கே போனது உங்களிடம்?

விஜய்க்கு கூடுகிற கூட்டம், அவரது சினிமா கவர்ச்சிக்கு கூடுகிற கூட்டம். அதை வைத்துக்கொண்டு, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுகிறார்கள்.

தற்போது கடைசியாக ஒரு படத்திற்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்தது போல, 2026 தேர்தலுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த படம் ஓடினால் தொடர்வீர்கள், இல்லையென்றால் விட்டு போய்விடுவீர்கள். இதனை கேரள நடிகையே சொல்லிருக்கிறார்கள். அதனை விஜயும் மறுக்கவில்லை. இந்த அரசியல் செயற்கையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு!