Politics
"தேர்தல் ஆணையத்தை தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது ஒன்றிய பாஜக அரசு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை :
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாடு மூலமாக, செங்கொடித் தோழர்களான உங்கள் எல்லோரையும் சந்திக்கின்ற வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்திருக்கக்கூடிய என் அன்புக்குரிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு முதலில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவரே குறிப்பிட்டுச் சொன்னார் - அண்மையில் நடந்த ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழாவில், உங்கள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்கான ஒப்புதலையும் நான் தந்திருந்தேன். ஆனால், உடல்நிலை காரணமாக வர முடியவில்லை என்கின்ற அந்த வருத்தத்தை தீர்க்கக்கூடிய வகையில், இன்றைய நாள் அமைந்திருக்கிறது!
தோழர் D.ராஜா அவர்களும், தோழர் முத்தரசன் அவர்களும் கொள்கைத் தோழர்கள் மட்டும் கிடையாது. அதையும் கடந்த ஒரு நட்புறவை - அன்பை எப்போதும் பேணக் கூடியவர்கள். அவர்களுடைய அன்புக்கும் - என்னில் பாதியான சிவப்புச் சிந்தனை கொண்ட கம்யூனிஸ்ட் தோழர்களின் கொள்கைப் பிடிப்புக்கும் கட்டுப்பட்டு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.
திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்குமான நட்பு என்பது, கொள்கை நட்பு! சமூகத்துக்குத் தேவையான நமது கொள்கை வலுவாக இருக்கின்ற காரணத்தால்தான், நம்முடைய நட்பும் வலுவாக இருக்கிறது! ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியத்தின் இரு முகங்கள்தான் திராவிட இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும்! கருப்பும் - சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்! எங்களில் பாதி நீங்கள்! இந்த கொள்கை உறவின் ஆழத்தை, தலைமுறைகள் கடந்தும் நாம் சொல்ல வேண்டும். அப்போதுதான் பல தலைமுறைகள் காக்கப்படும்! கொள்கை முரண்கள் ஒருபோதும் கொள்கை எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது! அதனால், வரலாற்றில் பதிவான இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் சுருக்கமாக நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நம்முடைய மதிப்பிற்குரிய முத்தரசன் அவர்களும் ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். எங்கே சென்றாலும், அவர் கோரிக்கை எடுத்து வைப்பது வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ மாநாட்டுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, கோட்டைக்கு வந்தாலும் மனுவோடுதான் வருவார். எதற்காக மனுவோடு வருகிறார் என்றால், தனிப்பட்ட பிரச்சனைக்காக அல்ல. தொழிலாளர்களின் பிரச்சனைக்காக, பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அந்த கோரிக்கையை எடுத்து வருவார்.
இதோ, இந்த அரங்கத்துக்கு ‘சேலம் சிறை தியாகிகள் அரங்கம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறீர்களே, சேலம் சிறையில், 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கடுமையாக கண்டித்து எழுதினார்கள். 1950 மார்ச் 5-ஆம் நாளை, கண்டன நாளாக கடைப்பிடிக்கச் சொன்னார் தந்தை பெரியார். திராவிடர் கழகம் சார்பில், ஊர்வலமும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
சிறையில் இருந்த தோழர்கள் விடுதலை செய்யப்பட்டபோது, குத்தூசி குருசாமி அவர்கள், சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் வரவேற்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதெல்லாம் வரலாறு! அந்த வரலாற்றை போற்றும் விதமாக இங்கு வருவதற்கு முன்பு, விமான நிலையத்திலிருந்து இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு வருவதற்கு நாங்கள் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, நம்முடைய அன்புக்குரிய தோழர் முத்தரசன் அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை என்னிடத்தில் வழங்கினார். வழங்கியது மட்டுமல்ல, அதை வழங்கியதால் நான் மறந்துவிடுவேனோ என்று கருதி இங்கே அதையும் குறிப்பிட்டுச் சொல்லி, உங்களுக்கு நினைவுபடுத்தி, எனக்கும் நினைவுபடுத்தியிருக்கிறார். அண்ணன் முத்தரசன் அவர்கள் கேட்டு எதையும் நான் தட்டிக் கழித்தது கிடையாது. முடியாது என்று நான் சொல்ல முடியுமா? ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது. அதுவும் நிறைவேற்றப்படுகிறது. ஆகையால், இந்த மாநாட்டில் வைத்த கோரிக்கை சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரைவில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும். அதற்கான உத்தரவை அதிகாரிகளோடு நான் தொலைபேசியில் வழங்கியிருக்கிறேன். வழங்கிவிட்டு தான் நான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். நாளையிலிருந்து அந்தப் பணி தொடங்கவிருக்கிறது.
அடுத்து 1951-ல் நடந்த தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தோழர் ஜீவா அவர்களைதான் அழைத்தார். அன்றைக்கு அண்ணா என்ன சொன்னார் என்றால், "பெரியாரும் – நானும் - ஜீவாவும் ஒரு இடத்திலிருந்து பணிபுரியும் காலம் எதிர்காலத்தில் வரும். அது பொதுவுடைமை முகாமாகப் பெயர் மாற்றப்படும். அந்த முகாமில் திராவிட என்ற அடைமொழி இடம் பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுச் சொன்ன பேரறிஞர் அண்ணாவின் எண்ணம், இந்த மேடையில் நிறைவேறி இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், கொள்கை உணர்வோடு நாமெல்லாம் இந்த மேடையில் கூடியிருக்கிறோம். "திராவிடப் பொதுவுடைமை முகாமாக" தான் நான் இந்த மேடையை கருதுகிறேன்.
நம்முடைய தோழமை இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். நம்முடைய இந்த ஒற்றுமைதான் பலருடைய கண்ணை உறுத்துகின்றது. "என்னடா... எத்தனை சதி செய்தாலும், எவ்வளவு குழப்பம் ஏற்படுத்தினாலும், எப்படிப்பட்ட போலிச் செய்திகளை எல்லாம் பரப்பினாலும் இவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களே" என்று வாயில், வயிற்றில் அடித்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் மேல் திடீர் என்று பாசம், குபீர் பாசம் பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. அடிமைத்தனத்தை பற்றி பழனிசாமி அவர்கள் பேசலாமா? பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே இருக்கக்கூடிய யாருக்கும் யாரும் அடிமை இல்லை. அடிமைத்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இயக்கங்கள்தான் இங்கே இருக்கக்கூடிய இயக்கங்கள் - திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும்! கொள்கைகளைப் பற்றி தெரியாத பழனிசாமி அவர்கள், விரக்தியில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
அதற்காக நம்முடைய கூட்டணித் தலைவர்கள மிக மிக மோசமாக கொச்சைப்படுத்துகிறார்கள். நான் கேட்க விரும்புவது, கம்யூனிஸ்ட் தலைவர்களைவிட நீங்கள் என்ன அதிகம் தியாகம் செய்துவிட்டீர்களா? நம்முடைய எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்களைவிட நீங்கள் என்ன பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா? இங்கே இருக்கக்கூடிய தலைவர்களை விட ஏதாவது ஒரு இடத்தில் நாங்கள் மிஞ்சி தியாகம் செய்திருக்கிறோம் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கங்கள் இந்த இயக்கங்கள்.
அவர்களுக்கு இருப்பது மக்கள் மீதான உண்மையான அக்கறை இல்லை; பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் இல்லை; புழுதிவாரி தூற்றி - அவதூறுகளை பரப்பி நம்முடைய கூட்டணி தலைவர்களை களங்கப்படுத்த வேண்டும்; எப்படியாவது கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த வேண்டும் என்ற மலிவான நோக்கத்தோடு இன்றைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்; கூட்டணியில் இருந்தாலும், நியாயமான கோரிக்கைகளை, விமர்சனங்களை வைக்க கம்யூனிஸ்ட் தோழர்கள் ஒருபோதும் தவறியதில்லை. நாங்களும் அவர்களுடைய கோரிக்கைகளை என்றைக்கும் நாங்கள் புறக்கணித்தது கிடையாது. அவர்களுடைய கருத்துகளைக் கேட்கிறோம்; விவாதிக்கிறோம்; பலவற்றில் உடன்படுகிறோம்; அதற்கான தீர்வை முன்னெடுக்கிறோம். இதுதான் ஜனநாயகம்! அதனால்தான் தோழமைப் புரிதலுடன் எங்களுடைய கூட்டணிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
நம்மைப் பொறுத்தவரைக்கும், சாதியவாதம் - வகுப்புவாதம் - பெரும்பான்மைவாதம் - எதேச்சாதிகாரம் - மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையாக பணியாற்றவேண்டும்! ஏனென்றால், நம்முடைய இலட்சியம் பெரிது! அந்த இலட்சியத்திற்காகத்தான் நானும், நீங்களும் இந்த மேடையில் இருக்கிறோம்! ஜனநாயகம் - சமூகநீதி - சமதர்மம் - சகோதரத்துவம் ஆகியவை நம்மை இணைத்திருக்கிறது! ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் - சமூகநீதிக்கு எதிரானவர்கள் - சமதர்மத்தை வெறுப்பவர்கள் - சகோதரத்துவம் வளரக்கூடாது என்று நினைப்பவர்கள் நம்முடைய தோழமையை, கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நமக்குள்ள எப்படியாவது பிளவு ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறார்கள். நான் உறுதியோடு சொல்கிறேன் - அவர்களுடைய சதித்திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது! அதனால்தான், இந்த மாநாட்டிற்கு தோழர் முத்தரசன் அவர்கள் ‘வெல்க ஜனநாயகம்’ ‘எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் இந்த மாநாட்டை அவர் எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்.
தோழர்களே... ஜனநாயகம்தான் இறுதியில் வெல்லும்! அதை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜனாயகச் சக்திகளான நமக்குதான் இருக்கிறது! அதிலும் இன்றைக்கு, ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே ஒன்றிய பா.ஜ.க. அரசு கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேர்தல் ஆணையத்தை, தன்னுடைய கிளை அமைப்பாக மாற்றிவிட்டது. தன்னாட்சிப் பெற்ற தேர்தல் ஆணையத்தை, ‘கீ கொடுத்தால் ஆடுகின்ற பொம்மை’-யாக மாற்றிவிட்டார்கள். அதைத்தான் வருகின்றபோது நான் கேட்டுக் கொண்டே வந்தேன் – திரு.D.ராஜா அவர்கள் அதைப்பற்றி அழுத்தமாக, விளக்கமான இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். தேர்தல் ஆணையர்களுடைய நியமனத்தில்தான் சதி செய்கிறார்கள் என்று பார்த்தால், வாக்காளர் பட்டியலில் இருந்தே தங்களுடைய சதியைத் தொடங்கிவிட்டார்கள்.
மக்களாட்சியைக் காக்க இந்தச் சதியை அம்பலப்படுத்தியுள்ள நம்முடைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு இந்த மேடையில் இருந்து என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வைத்திருக்கக்கூடிய இந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், அவரைப் பிரமாணப் பத்திரம் கொடுக்கச் சொல்லி கட்டளை இடுகின்றது.
தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான். அதை துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பதுதான் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முக்கியம்! அதைக்கூட தேர்தல் ஆணையத்தால் சரியாக செய்ய முடியாதா? அரசியல் சட்டம் வழங்கியிருக்கின்ற கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பு, சுதந்திரமான, நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து உறுதிப்படுத்துகின்ற பணியை தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும்.
ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நாம் எச்சரிச்சது எல்லாம் இப்போது நடைபெறுகின்றது.
இந்தி மொழியைக் காட்டாயமாக்கியது, சமஸ்கிருதம் மேல் இருக்கின்ற பற்றால்தான் என்று நாம் சொன்னது உண்மையாகி இருக்கிறது. பட்டப்படிப்பு படிக்காமலேயே, ‘பாரம்பரிய குருகுலத்தில்’ படித்த, நன்றாக கவனியுங்கள் - ‘பாரம்பரிய குருகுலத்தில்’ படித்தவர்கள் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மாதம் 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் சேரலாம் என்று திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முன்னிலைப்படுத்துவார்கள் என்று சொன்னோம்… இப்போது நாட்டின் பிரதமரே, விடுதலை நாள் விழா உரையில், ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசியிருக்கிறார். அரசு வெளியிடுகின்ற விளம்பரங்களில், அண்ணல் காந்தியின் மீது சாவர்க்கர் படம் இன்றைக்கு இருக்கிறது. இதுதான் இன்றைய அவல நிலை!
அமலாக்கத் துறையை வைத்து தங்களுக்கு ஒத்துவராத எதிர்க்கட்சிகளை மிரட்டுவார்கள் என்று சொன்னோம். தொடர்ந்து ரெய்டு நடத்துகிறார்கள். இன்றைக்குக்கூட, மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.
உறவினர் வீட்டில் ரெய்டு விட்டவுடனே ஓடிவந்து கூட்டணியில் சேர்ந்து கொள்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா? எங்களை மிரட்ட நினைத்தவர்கள் தான் மிரண்டு போயிருக்கிறார்கள்! இதைவிட மோசமான அடக்குமுறையை எல்லாம் பார்த்த இயக்கம்தான் தி.மு.க! நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவர்கள் நாங்கள்! உங்களுடைய எண்ணம் எந்தக் காலத்திலும் நிறைவேறாது! வழக்கம்போல தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குத் தோல்வியைத்தான் கொடுப்பார்கள்!
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு உள்ளவர்கள்; விழிப்புணர்வு மிக்கவர்கள்! தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் உண்மையாக தொண்டாற்றுபவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். சமூகநீதி - சமநீதி - மாநில உரிமை – கூட்டாட்சி தத்துவம் - மொழி உணர்வு - இன எழுச்சி ஆகியவற்றிற்காக, உண்மையாக உழைத்து தியாகங்கள் செய்தது யார்? - நவீனத் தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடித்தளம் அமைத்தது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!
2021-ல் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது போலவே, 2026-லும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம்!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு சாதனைகளை செய்வோம்!
அதற்குத் துணையாக தோழர்கள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கினால், எப்படிப்பட்ட வெற்றியும் வசமாகும்! தி.மு.க.வினர் - கம்யூனிஸ்டுகள் - நம்முடைய கூட்டணிக் கட்சியினர் ஆகியோருடைய உழைப்புக்கு முன்னால், எப்படிப்பட்ட சதிச்செயல்களும் நிற்கக்கூட முடியாது. ஜனநாயகம் வெல்ல களம் நிற்கும் அத்தனைத் தோழர்களுக்கும் என்னுடைய ரெட் சல்யூட்!
இன்றைக்கு ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், அனைத்துத் துறைகளிலும் முதலிடம், முதலிடம், முதலிடம் என்று ஏதோ நாங்கள் சொல்லவில்லை – ஒன்றியத்தில் இருக்கக்கூடியவர்களே ஆய்வு செய்து இன்றைக்கு அந்த ஆய்வை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் முதலிடம், முதலிடம் என்று பெறக்கூடிய நம்முடைய கூட்டணி, நம்முடைய மதச்சார்பற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய இந்த கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும், வெற்றி பெறும், வெற்றி பெறுவதற்கு உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்! என்று கேட்டு, இந்தச் சிறப்புக்குரிய இந்த 26-வது மாநில மாநாட்டில், உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்கக்கூடிய நல்லதொரு வாய்ப்பைப் பெற்று, என்னுடைய பெயரே ஸ்டாலின் – தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் – அண்ணாவை பார்க்காவிட்டால், பெரியாரை பார்த்திருக்காவிட்டால், நானும் இன்றைக்கு கம்யூனிஸ்டில் இருப்பேன் என்று தலைவர் கலைஞர் சொல்வார். அதே உணர்வோடு தான் நானும் இருக்கிறேன் – அந்த உணர்வோடு தான் நானும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, வாழ்க! வெல்க கம்யூனிசம் என்று சொல்லி, விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!
Also Read
-
"குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்" - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் !
-
தொடர் பாலியல் புகாரின் எதிரொலி... AMMA சங்க 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை தலைவரான பெண்!
-
அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு முருகேசா... பாஜக பரப்பிய பொய்யை அம்பலப்படுத்திய TN Fact Check!
-
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக மோசடி: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை!
-
”EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்” : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!