Politics

“இரயில்வே கிராஸிங்களில் விபத்துகளை தடுக்க துரித நடவடிக்கை என்ன?” : திமுக எ.பி.க்கள் அடுக்கடுக்கான கேள்வி!

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 6) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,

“பெரம்பலூரில் இரயில்வே முன்பதிவு மையம் அமைத்திடுக!” என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. அருண் நேரு கோரிக்கை!

பெரம்பலூரில் கணினிமயமாக்கப்பட்ட இரயில் பயணிகள் முன்பதிவு மையம் (PRS) இல்லாதததால் மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று முன்பதிவு செய்து சிரமப்படுவதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் திமுக பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரம்பலூரில் முன்பதிவு மையம் அமைக்கக் கோரி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின்மீது எடுப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டுள்ள அருண் நேரு, விரைவில் ஒன்றிய அரசு ஆய்வுகள் நடத்தி பெரம்பலூரில் ஒரு முன் பதிவு மையத்தை நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

“இரயில்வே லெவல் கிராஸிங்களில் விபத்துகளை தடுக்க துரித நடவடிக்கை?” என நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!

அதிகரித்து வரும் இரயில் போக்குவரத்து மற்றும் சாலை வாகனப் போக்குவரத்து காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதி, காட்பாடி அருகே லத்தேரி ரயில் நிலைய லெவல் கிராசிங்கில் விபத்து அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி அதற்கு தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்குகளில் அதிக விபத்துகள் நடக்கின்றன என்றும் அவற்றை தடுக்க ஒரு ROB அல்லது RUB கட்டுவதன் மூலம் லெஅல் க்ராஸிங்கை அகற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலை-75 இல் காட்பாடி சந்திப்பில் உள்ள சாலை - ரயில் பாலத் திட்டத்தின் நிலை, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, டெண்டர் இறுதி செய்யும் தேதி மற்றும் கட்டி முடிக்கப்பட இருக்கும் தேதி குறித்தும் கேட்டுள்ளார்.

Also Read: “ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொடரும் சிக்கல்கள்!” : மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!