Politics
புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து...பதவிக்காலம் நிறைவுபெற்ற எம்.பி.களுக்கு முதலமைச்சர் பாராட்டு!
மாநிலங்களவையில் 6 தமிழ்நாட்டு எம்.பி.-க்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், பதவிக்காலம் நிறைவுபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும் - புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் :
சண்முகம்
கருப்பு-சிவப்பு கழகத்தில் அண்ணன் சண்முகம் அவர்கள் தொழிலாளர்களின் சிவப்புச் சிந்தனை சார்ந்த உரிமைக் குரலாக இருப்பவர். 50 ஆண்டுகளுக்கு மேல் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தைக் கட்டமைத்து, ஒவ்வொரு மே தினத்திலும் தங்கள் சங்கத்தினருடன் என்னையும் சிவப்புச் சட்டையில் வீரவணக்கம் செலுத்த வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அவையில் தொழிற்சங்கப் பிரதிநிதியாக முழங்கிய அவரது குரல், இந்திய நாடாளுமன்றத்திலும் முழங்கிட வேண்டும் என்பதால் கழகத்தின் உறுப்பினராக அண்ணன் சண்முகம் அவர்கள் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனது பணியினைச் சிறப்பாக நிறைவேற்றி, பதவிப் பொறுப்பை நிறைவு செய்திருக்கிறார்.
உரிமைகளை விட்டுத் தராத அவருடைய கொள்கை உணர்வும், தொழிலாளர் நலனில் அவருக்குள்ள அக்கறையும் மாநிலங்களவை விவாதங்களில் எதிரொலித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்ணன் சண்முகம் அவர்கள் ஆற்றிய பணிகளுக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவருடைய தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.
எம்.எம். அப்துல்லா
மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட தம்பி எம்.எம்.அப்துல்லா அவர்கள், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, மாநிலங்களவையில் மக்கள் சேவகராகச் சிறப்பாகப் பணியாற்றி, மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் வகையில் நடந்துகொண்டதை அறிந்து கழகத்தின் தலைவர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.
மாநிலங்களவையில் வருகைப் பதிவு, எழுப்பிய கேள்விகள், பெற்ற பதில்கள், அதன் வழியாக நிறைவேறிய திட்டங்கள் என எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்ட தம்பி அப்துல்லாவின் ஓய்வில்லாப் பணிகள், குறுகிய காலத்திலேயே, அவரை முழுமையான ‘பார்லிமெண்ட்டேரியன்’ என அடையாளம் காட்டியிருக்கிறது. நாட்டுப்பற்றையும் மதநல்லிணக்கத்தையும் மாநிலங்களவை விவாதங்களில் உரத்த குரலில் அழுத்தமாகப் பதிவு செய்த தம்பி அப்துல்லா, தனது பதவிப் பொறுப்பு நிறைவடையும் நாளிலும் மதநல்லிணக்க அடையாளமான கோரிக்கையை முன்வைத்தன் மூலம் கழகத்தின் வார்ப்பு என்பதை மெய்ப்பித்திருக்கிறார். சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும் - நீதிமன்றங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் தன்னுடைய அழுத்தமான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்பவுள்ளார். அவருக்கும், மாநிலங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ - மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
-
தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பது எப்போது? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்விகளை எழுப்பிய கணபதி ராஜ்குமார் MP!
-
பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மருந்துகள் தரமானவையா? : மக்களவையில் மலையரசன் MP கேள்வி!
-
பொதுப்பணித்துறையின் சாதனைகள்... வரலாற்றில், ‘’ஸ்டாலின் கட்டடக் கலை’’ என புகழப்படும்!
-
“நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!