Politics
"மாநிலத்தை வஞ்சிக்கும் அமித்ஷாவின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !
தமிழ் மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிற அமித்ஷாவின் அரசியல், தமிழ்நாட்டில் எப்பொழுதும் எடுபடாது என்பதை கள நிலவரங்கள் உணர்த்தி வருகின்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 11 ஆண்டுகாலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி குன்றி, அதனுடைய பாதிப்பினால் மக்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை சர்வதேச நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதை உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு அறிக்கை உறுதி செய்திருக்கிறது. கவுரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மோடி ஆட்சியில் நிகழ்ந்துள்ளன.
மோடி ஆட்சிக்கு எதிராக செய்தி வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். உத்தரபிரதேசத்தில் இருக்கும் ஹத்ரஸ் எனும் ஊரில் ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க செல்லும் வழியில் சித்திக் காப்பன் என்கிற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு, 746 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இப்படி இன்னும் பல வழக்குகள் பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டடு நிலுவையில் உள்ளன. பிரதமர் மோடி ஆட்சியில் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு குறித்து 2025 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகில் உள்ள 180 நாடுகளில் 151-வது இடத்தில் இந்தியா இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் படு பாதாளத்தில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேறு ஆதாரம் தேவையில்லை.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் 2025 இல் வெளியிட்ட அறிக்கையின்படி உலகத்தில் உள்ள 193 நாடுகளில் இந்தியா 130-வது இடத்தில் இருக்கிறது. இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளை ஒப்பிடுகிற வகையில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பிரதமர் மோடி மிகப் பெரிய சாதனையாக குறிப்பிடுகிறார். ஆனால், மோடி ஆட்சியின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியே தவிர, 146 கோடி மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியல்ல என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச நாணய நிதியம் 2025 இல் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகிலுள்ள 196 நாடுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 144-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தனிநபர் வருமானம் தற்போது ரூபாய் 2 லட்சத்து 13 ஆயிரத்து 366 என்கிற அளவில் தான் உள்ளது. ஆனால், சர்வதேச நாடுகளின் சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 12 லட்சத்து 21 ஆயிரத்து 200 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் உலக நாடுகளின் வரிசையில் இந்திய மக்களின் தனிநபர் வருமானம் எந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் உறுதி செய்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி என்பது இயல்பாகவே இருப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அந்த வளர்ச்சி யாருக்கான வளர்ச்சி என்பதை பார்க்கிற போது, மோடி ஆட்சி குறிப்பிட்ட சில தொழிலதிபர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துக்களை குவிக்க மட்டும் தான் பயன்பட்டதே தவிர, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படவில்லை. மேற்கூறிய சர்வதேச தரவுகளின் அடிப்படையில் வளர்ச்சி என்பது சாதாரண ஏழை, எளிய மக்களுக்கானது அல்ல என்பது தான் கடந்த 11 ஆண்டுகால மோடி ஆட்சியிலிருந்து மக்கள் பெற்ற பயனாகும். இதை மூடி மறைப்பதற்காகத் தான் பா.ஜ.க., மதரீதியான வகுப்புவாத உணர்வுகளை தூண்டி விட்டு, அதன்மூலம் மக்களின் ஆதரவை திரட்ட முயல்கிறதே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமாக செயல்படவில்லை என்பதைத் தான் சர்வதேச நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் உறுதிபடுத்துகின்றன. எனவே, மோடி ஆட்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே தவிர, 146 கோடி மக்களுக்கான ஆட்சி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
-
தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!
-
”பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்கு சென்று கம்பு சுற்றுங்கள்” : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!