Politics
கழகத் தலைவர் தலைமையில் ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு!’ : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தி.மு.க.வில் கோடிக்கணக்கான உறுப்பினர்களை இணைப்பதற்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் செயல்பட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், 2 கோடி மக்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதை எளிதாக்குவது குறித்தும் காணொளி வாயிலாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளில், “தம்பி வா, இனத்திற்காக இரத்தம் சிந்த வா” என்று கம்பீரமாக அழைத்தார் பேரறிஞர் அண்ணா. அடுத்துவந்த கலைஞர் இந்த இயக்கம் இருக்கிறது, இருக்க வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சொன்னார். 75 ஆண்டுக் கடந்து செல்கிற இந்த இயக்கம், 100 ஆண்டுக் காலத்தையும் கடந்துசெல்ல, இந்த இயக்கத்தைப் புதுப்பிக்க நினைக்கிறார் நமது முதலமைச்சர்.
டீ கடை முதல் டிவிட்டர் வரை இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பயணித்து இருக்கிறது. 89 வயதில் கலைஞர் அவர்கள் டிவிட்டரில் செயல்பட்டார். ஒவ்வொரு நாளிலும் சமூக வலைதளத்தைக் கூர்ந்து கவனித்தார். எதற்காக அதைச் செய்தார் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், மக்களின் பிரச்சனையை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என நினைத்திருந்தார்.
கழகத் தலைவர் அவர்களும் டிஜிட்டல் தளங்களின் செயல்களை முழுமையாக உள்வாங்கியிருந்தார். இன்று இதுவரை வரலாறு காணாத அளவிற்கு எந்த ஓர் இயக்கமும் செய்யாத விஷயம், ஒரு மக்கள் இயக்கம், 68,000 பூத் ஏஜண்ட்களை (BDA) வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று, அங்கு இருக்கும் மக்களிடையே திமுகவின் திட்டங்கள் எல்லாம் அவர்கள் சென்று சேர்ந்து இருக்கிறதா எனச் சரி பார்க்க இருக்கிறார்கள்.
அப்படி இல்லை என்றால், அதைக் கொண்டு போய் சேர்க்கும் வேலையை அவர்கள் செய்ய இருகிறார்கள்; இதுவரை எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களைத் திமுகச் செய்திருக்கிறது; அதையெல்லாம் மக்களிடம் கொண்டு பொய் சேர்த்து இருக்கிறோம். ஆனால் சரி பார்க்கும் வேலையை இதுவரை எந்தவொரு தலைவரும் செய்ததில்லை; அப்படிப்பட்ட மகத்தான தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார்.
இன்று ஒரு மாபெரும் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இந்த இனத்தை எதிர்த்து வரும் எதிரிகளையும், இந்த இனத்திலேயே இருந்துகொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்க வேண்டும். அதற்காக இந்த மகத்தான பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
இந்தப் பயணத்தின் வழியாகத் தமிழ் இனத்திற்காக, தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எழுச்சிக்காக நீங்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டு, தமிழ்நாட்டிற்காக நிற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க இருக்கிறோம்.
இந்த இனத்தின் எதிர்கள், கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகிகள் இவர்கள் எல்லோரையும் முறியடிக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும்; அந்த அணியின் தலைவராகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும். அவர் இருந்தால் மட்டும் தான் விடியல் என்ற உண்மையை அவர்கள் இடத்தில் கொண்டுபோய் சொல்ல இருக்கிறோம்.
இந்தப் பயணம் இன்று ஜூன் 25 ஆம் தேதி ஆரம்பித்து இருக்கிறது. இந்தப் பயணத்தில் இன்று 234 தொகுதிகளிலும் இருந்து எங்களின் ஐ.டி.விங், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு இந்தப் பணியை வழங்கிய திராவிட நாயகர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பணியை இன்று 234 OTNAC எனப்படும் ஓரணியில் தமிழ்நாடு assembly coordinator அந்தத் தொகுதி பார்வையாளர்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சியை வழங்கியிருக்கிறோம்.
அடுத்ததாக இந்த 234 பேரும் 27 ஆம் தேதி தொடங்கி 29 வரை மிகப் பிரம்மாண்டமாக அங்கே இருக்கும் தொகுதிகளில் வாக்குச்சாவடி, பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்குப் பயிற்சியைக் கொடுக்க இருக்கிறார்கள். அந்தப் பயிற்சியில் பூத்களின் பாகங்களைப் பிரித்துக் கொண்டு அவர்களுக்கும் பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள்.
ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சர் அவர்கள் இந்தப் பணியை முழுமையாகத் தொடங்கி வைப்பார். அடுத்தக்கட்டமாக இந்த மாபெரும் பணியை மாவட்ட செயலாளர்கள் கையில் எடுப்பார்கள்; ஜூலை 2 ஆம் தேதி மாவட்ட கழகச் செயலாளர்கள் கையில் எடுப்பார்கள்.
அடுத்து ஜூலை 3 ஆம் தேதி இந்த மாபெரும் இயக்கம் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு பொய் சேர்த்து; அதன்மூலம் இந்த இயக்கத்திற்குப் புதிய ரத்ததையும் பாய்ச்சி, உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப் போகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த முயற்சி இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை; உலகிலேயே எங்கும் நடந்ததில்லை என்று தான் கூறவேண்டும். எதிரணியில் இருக்கும் பலருக்கு பூத் ஏஜெண்ட்களே இல்லாமல் இருப்பார்கள்; ஆனால் திமுகவுக்கு மட்டும்தான் BDA என்ற பொறுப்பையும் உருவாக்கி தரும் தெம்பு, திராணி இருக்கிறது.” என தெரிவித்தார்.
Also Read
-
திருவாரூரில் ரூ.846.47 கோடியில் 1,234 முடிவுற்ற பணிகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
-
திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்தி திணிப்பு முயற்சி : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!