Politics

புறநகர் மற்றும் பறக்கும் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்கவேண்டும் - தயாநிதி மாறன் MP கோரிக்கை !

சமீபத்தில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், உள்ளூர் ரயிலிலிருந்து தவறி விழுந்ததில், ஒரு ரயில்வே காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்து, பலர் படுகாயமடைந்த செய்தி நாடுமுழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய ரயில்வே துறை, மும்பை மாநகரில் இயங்கும் அனைத்து புறநகர் ரயில்களிலும் தானியங்கி கதவுகளை அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ளும் என்று அறிவித்தது.

இதனிடையே மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் பல ஆண்டுகளாக ஒன்றிய ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் வாயிலாகவும், பாராளுமன்றத்திலும், தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டங்களிலும், அனைத்து புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்கக்கோரி வலியுறுத்தி வந்த நிலையில், மீண்டும் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மும்பை மாநகரில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பயன்பாட்டிலுள்ள அனைத்து புறநகர் ரயில்களிலும் தானியங்கி கதவு வசதியை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு

புறநகர் மற்றும் உள்ளூர் ரயில்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, தானியங்கி கதவு அமைப்புகளை அமல்படுத்த வேண்டுமென 17.08.2019 மற்றும் 31.05.2022 ஆகிய தேதிகளில் கடிதம் வாயிலாகவும், 07.12.2022 மற்றும் 12.12.2022 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தினேன். பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு ஆலோசனைகள் கேட்டபோது மாண்புமிகு நிதியமைச்சரிடம், சென்னையில் புறநகர் ரயில்களில் படிகளில் பயணம் மற்றும் அதிகப்படியான கூட்டம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை மேற்கோள்காட்டி இப்பரிந்துரையை முன்வைத்தேன். மேலும், சென்னை இரயில்வே கோட்டத்தின் வளர்ச்சி நடவடிக்கை மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தென்னக இரயில்வே அலுவலகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டங்களிலும் பலமுறை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம், தானியங்கி கதவு அமைப்புகளின் தேவைகள், நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பெட்டிகளை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினேன்.

சமீபத்தில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், உள்ளூர் ரயிலிலிருந்து தவறி விழுந்ததில், ஒரு ரயில்வே காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் இப்பிரச்சினைக்கு அவசரத் தீர்வு காண்பதின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இதற்கு தீர்வு காணும் விதமாக, ரயில்வே வாரியம், 2026 ஜனவரிக்குள் மும்பை புறநகர் ரயில்வேயில் தானியங்கி கதவு அமைப்புகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இப்பிரச்சினைக்கு இது நிரந்தர தீர்வாக அமையாது.

இப்பிரச்சினை மும்பை மட்டுமின்றி சென்னை, கொல்கத்தா, டெல்லி போன்ற அனைத்து பெருநகரங்களிலும் புறநகர் ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு தினசரி சவாலாக உள்ளது. ஆகையால் இந்த பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை மும்பையில் மட்டுமே செயல்படுத்துவது என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது. ஒரு தனிப்பட்ட நடவடிக்கையாக கருதாமல், புறநகர் ரயில் போக்குவரத்து துறையில், தேசிய அளவிலான பாதுகாப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதை ஒரு தொடக்கமாக அமைச்சகம் கருத வேண்டும்.

ரயில்வே வாரியம், தற்போது பயணிகளின் பயன்பாட்டிலுள்ள புறநகர் ரயில் பெட்டிகளிலும், இனி புதிதாக உருவாக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகளுடன் மறு வடிவமைப்பு செய்ய ஒரு விரிவான திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்,

மேலும் ரயில்வே அமைச்சகம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உறுதியளிக்க வேண்டும்:

அனைத்து பெருநகரங்களிலும் நெரிசல் மிகுந்த நேரங்களில் புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு ரயிலிலும் பயணிகளின் எண்ணிக்கையின் தேவைக்கு ஏற்ப போதுமான பெட்டிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பாகவும், திறமையாகவும் ரயில் சேவைகளை கையாள Smart Signaling மற்றும் Capacity Planning திட்டமிடுதலில் முதலீடு செய்ய வேண்டும்.

தாமதமாக கொண்டுவரப்படும் சோதனை திட்டங்களோ, மாநிலம் வாரியாக அமல்படுத்தப்படும் திட்டங்களோ, அன்றாடும் புறநகர் ரயில்களை நம்பி வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் கேள்விக்குறியாக்குவது ஏற்புடையதல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம், தொலைநோக்கு பார்வையோடு, தீர்க்கமான முடிவுகளை அமைச்சகம் மேற்கொள்ளும் என நம்புகிறேன். நன்றி!

Also Read: தமிழ்நாட்டில் வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் விஷமப் பிரசாரம் : தமிழ்நாடு DGP-யின் பதிலடி !