Politics
தமிழ்நாட்டுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கான நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசு... வைகோ கண்டனம் !
தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க நினைத்து ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்பட வில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், இத்திட்டத்தில், மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம். ஆனால், ஒன்றிய அரசு கடந்த 2021 முதல் கல்வி நிதியை வழங்காமல் இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி விவரங்களை சமர்ப்பிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத காரணத்தால் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகை ஒதுக்கப்படவில்லை. பல்வேறு மாநிலங்கள் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை” என்றார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியை வழங்க முடியும் என்று கூறி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத, “பி.எம். ஸ்ரீ’ பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்துக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும்” என, நாடாளுமன்ற நிலைக்குழு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் ஒன்றிய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும்.
ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய 2,291 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும்.
கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இச்சூழலில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஐ முடக்கி வைக்கும் வகையில் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை விடுவிக்காமல் அடாவடியாக ஒன்றிய அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!