Politics
“கீழடி என்பது புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல!” : தமிழிசைக்கு சு.வெங்கடேசன் பதிலடி!
தமிழ்நாட்டில் கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட, தொல்லியல் ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும், இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை, அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ““தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி வரும் பாஜக அரசு, அதே வேகத்தோடு நமது தமிழர் வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது!” என தெரிவித்தார்.
அது குறித்து பதிவிட்ட முன்னாள் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “கீழடிக்கு அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதே ஒன்றிய அரசுதான்” என கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப்பக்கத்தில், “கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே ஒன்றிய அரசு தான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார்.
அதனால் தான் கேட்கிறோம். முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தினீர்கள்? ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நிதியை நிறுத்துவார்கள். எல்லாம் கிடைத்த போது ஏன் நிறுத்தினீர்கள்?
நீங்கள் ஒதுக்கிய நிதி நீங்கள் சொல்லிவரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதட்டமடைந்து நிதியை நிறுத்தினீர்கள். வேதநாகரிகத்துக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்ற உண்மையை உங்களால் ஏற்க முடியவில்லை. எனவே நிதியை நிறுத்தினீர்கள். ஆய்வை நிறுத்தினீர்கள். ஆய்வறிக்கையை எழுதவிடாமல் இடையூறு செய்தீர்கள்.
அதையும் மீறி ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னும் வெளியிடாமல் முடக்க நினைத்தீர்கள். நாடாளுமன்றத்தின் தலையீடு மூலம் வெளியிட முயற்சித்தால் இப்பொழுது “போதிய நம்பகத்தன்மை இல்லை” என்று சொல்லி நிறுத்துகிறீர்கள்.
இது மட்டுமல்ல, இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு. ஏனென்றால் அது புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. இம்மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களின் தொல்நகரம்.
மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல் தடங்கள் நீங்கள் நிதியை மறுப்பதன் மூலமோ, ஆய்வை நிறுத்துவதன் மூலமோ மறைந்து விடாது.
வெளிப்பட்டுவிட்ட வரலாற்று உண்மைகளுக்கு வெளிச்சம் கூடத்தான் செய்யும். அது தான் அறிவியல்” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!