Politics

“மொழி கொள்கையில் ஏமாற்று அரசியலை மேற்கொள்ளும் பா.ஜ.க!” : மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்!

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், மொழி, மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

குறிப்பாக, இந்தியை திணிப்பதை ஒற்றை நோக்காகக் கொண்டு, மாநில மொழிகளை அழித்து வருவது, பா.ஜ.க.வின் அண்மை நடவடிக்கைகளால் அதிகரித்துள்ளது. அதற்கு, போஜ்புரி, மால்வி, சட்டீஸ்கரி போன்ற மொழிகள் இரையாகியுள்ளது சான்றுகளாகவும் அமைந்துள்ளன.

இந்த வரிசையில் தமிழ் இணைந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை எவ்வித சமரசமும் இன்றி கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக, ஒன்றிய பா.ஜ.க அரசு கல்வி நிதியை நிறுத்திய நிலையிலும், தமிழ்நாடு தந்நிலையைவிட்டு விலகாமல் இருக்கிறது.

இந்நடவடிக்கையை, இந்தியாவின் இதர மாநிலங்கள் ஆதரித்து வருவதோடு மட்டுமல்லாமல், தங்களது மாநில மொழிகளையும் காக்க வேண்டும் என்ற உணர்வு இந்திய அளவில் பெருகியுள்ளது.

அதன் விளைவாய், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மொழியை காக்க, மக்கள் ஒரு திரளாக குரல் எழுப்பி வருகின்றனர். இதனால், ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், மகாராஷ்டிர பா.ஜ.க அரசே இந்தி திணிப்பை எதிர்ப்பது போன்ற காட்சிப்படுத்தலை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பா.ஜ.க ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிர மொழி ஆலோசனைக் குழு அமைத்த மாநில அரசு.

“தொடக்க கல்வியில் தாய் மொழியே முக்கியம். இனியும் மகாராஷ்டிரா மொழி பண்பாட்டு தளங்களில் இன்னல் வேண்டாம்” என பரிந்துரை.

இன்னல் விளைவிப்பதும் பா.ஜ.க. இன்னல் வேண்டாம் என பரிந்துரைப்பதும் பா.ஜ.க. அது தான் பா.ஜ.க.வின் ஏமாற்று அரசியல்” என பதிவிட்டுள்ளார்.

Also Read: உடல்நலக்குறைவால் போப் பிரான்சிஸ் காலமானார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !