Politics

“உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆர்.என்.ரவி - ஆளுநரின் அழைப்பை புறக்கணிக்க வேண்டும்!” : பெ.சண்முகம்!

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, இருப்பிடம் முதல் ஊதியம் வரை வழங்குவது தமிழ்நாடு அரசுதான் என்பதை ஆர்.என்.ரவி முற்றிலுமாக மறந்து, முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பிரச்சாரக் குரலாகவே, தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டப்போராட்டத்தில் கடும் தோல்வி அடைந்தது, ஆர்.என்.ரவியை கூடுதலாக சினப்படுத்தியுள்ளது. அதனால், நாள்தோறும் புதுப்புது சர்ச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தற்போது ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இது குறித்து, சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கும், அரசுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் துணை வேந்தர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை கழக துணை வேர்ந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும். திட்டமிட்ட இந்த மோதல் போக்கிற்கு குடியரசு துணைத் தலைவரும் துணை போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆர்.என்.ரவியின் இந்த சட்டவிரோத துணை வேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை சி.பி.ஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பல்கலை கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழுக்கு எதிரான சூழ்ச்சிகளை மாணவச்செல்வங்கள் நீங்கள் வீழ்த்த வேண்டும்!” : துணை முதலமைச்சர் உரை!