Politics

சமூக ஊடகங்களில் நசுக்கப்படும் கருத்து சுதந்திரம் : ஒன்றிய அரசின் அதிகாரத்துவ நடவடிக்கை!

இந்திய அரசியலமைப்பு, “இந்தியர்கள் அனைவரும் சமம், அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது” என்பதை உறுதிசெய்கிறது. ஆனால், ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க, சமத்துவத்தையும் சமூகநீதியையும் மறுப்பதோடு மட்டுமல்லாமல், அரசியலமைப்பையே திருத்தி அமைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

75 ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, 100 ஆண்டுகால ஆதிக்கத் திட்டத்துடன் செயல்பட்ட (செயல்படுகின்ற) ஆர்.எஸ்.எஸ் அந்த அரசியலமைப்பை எதிர்த்தது. அனைவருக்கும் சம உரிமை வழங்குவது, மநுநீதிக்கு எதிரானது என தருக்கமிட்டது.

எனினும், பல்வேறு நெருக்கடிகளை கடந்து இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அம்பேத்கரின் பொதுநல சிந்தனையால், மக்கள் நலனுக்கான தேவை ஏற்பட்டால், இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மக்கள் நலனுக்காக ஏற்படுத்திய வழிவகையை, தற்போது அதிகாரத்துவ செயல்படுத்தத்திற்கு பயன்படுத்த முற்பட்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. சகோதரத்துவம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்புகிற வகையில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கொண்டுவரும் சட்டங்கள் அமைந்துள்ளன.

இந்தியா, ஹிந்தியாவாக மாற்றப்படுவது மட்டுமல்லாமல், காவி போர்வைக்குள், ஒட்டுமொத்த நாட்டையும் மறைக்கும் செயலில் மும்முரம் காட்டப்படுகிறது. இவ்வாறான, பா.ஜ.க.வின் திட்டங்களை தோலுரித்து முற்போக்கு சிந்தனைகளுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நெறியாளர்களை நசுக்கவும், ஒன்றிய பா.ஜ.க அரசு தயங்கவில்லை.

உலகம் அறிவியல் மயமாகும் வேளையில், இணையம் அனைத்து மக்களையும் சென்றடையும் கருவியாக செயல்படும் வேளையில், இணையத்திலும் கருத்து சுதந்திரத்தை சூறையாடி வருகிறது பா.ஜ.க.

அதற்கு அண்மையில் வெளியாகியுள்ள தரவுகளே சான்றுகளாகவும் அமைந்துள்ளன. இந்தியாவில் ஒன்றிய அரசால், X சமூக வலைதளப் பக்கத்தில் முடக்கப்படும் பதிவுகளில் பெரும்பான்மையானவை ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைவர்களை குறிவைத்த பதிவுகள் என்பதே அந்த சான்று.

குறிப்பாக, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, அமித்ஷா மகனும் ஐசிசி தலைவருமான ஜெய்ஷா, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த பதிவுகள், ஒன்றிய அரசின் நெருக்கடியால், சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சுமார் 1.1 லட்சம் சமூக வலைதளப் பதிவுகள், ஒன்றிய பா.ஜ.க அரசின் நெருக்கடியால், சமூக வலைதளத்தில் இருந்து X சமூக வலைதள நிறுவனம் மூலமாகவே நீக்கப்பட்டுள்ளன. “இதுபோன்ற ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், எங்களால் விதிகளை மீறி செயல்பட இயலாது” என X சமூக வலைதள நிறுவனமே, ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது கண்டனம் எழுப்பியுள்ளது.

கூடுதலாக, கருத்து சுதந்திரத்தை நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எதிராக X சமூக வலைதளம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட போது, “ஊடகப் பதிவுகள் குறித்து தனித்து நடவடிக்கை எடுக்க, X சமூக வலைதள ஊடகத்திற்கு உரிமை கிடையாது” என வாதாடி, தனது ஆதிக்கத்துவத்தை ஆணித்தரமாக முன்வைத்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இதுபோன்ற சமூக வலைதளப் பதிவுகள் முடக்கங்களால், மணிப்பூர் வன்முறைக்கு இரையானது தொடர்பான பதிவுகள் முழுமையாக வெளிப்படாமல் போனது, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது அரங்கேறி வரும் தாக்குதல்கள் வெளிப்பட இயலாமல் இருக்கிறது.

இவை அனைத்திற்கும், பொறுப்பேற்கின்ற இடத்தில் இருப்பது ஒன்றிய பா.ஜ.க அரசு. இது குறித்த பதிவுகள் இணையத்தில் வெளிவந்தால், அதனையும் முடக்க பா.ஜ.க தயங்குவதில்லை என்பதே, இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குவதாய் அமைந்துள்ளது.

Also Read: Tollgate : “ஒன்றிய அரசின் மீது கோபம் பற்றி எரிகிறது..” - அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் ஆவேசம்!