Politics

“ஒரே ஒரு ரூ-வை போட்டு பாஜகவை அலறவிட்ட முதலமைச்சர்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேருரை!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (மார்ச் 28) தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்றிய பேருரை பின்வருமாறு,

“அரண்மனையிலிருந்த அரசியலை திராவிட இயக்கமாக்கி, ஆலமரத்திற்கு எடுத்து வந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அந்த திராவிட இயக்கத்தை வெட்டவெளிக்கு எடுத்துச் சென்றவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். வெட்டவெளியில் இருந்த திராவிட இயக்கத்தை ஊர்தோறும், கிராமந்தோறும் கொண்டு சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ஊர்தோறும் இருந்த திராவிட இயக்கத்தை, தன்னுடைய திட்டங்கள்மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்கின்றவர் நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள்.

பாரம்பரியமும் பெருமையும் மிக்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நம் துறைகள் சார்ந்து, துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மானியக்கோரிக்கை விவாதத்தின்மீது பதிலுரை வழங்குகின்ற வாய்ப்பை வழங்கிய,இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவசரப் பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகியோருக்கும் வணக்கம். நான் பதிலுரையாற்றும் சமயங்களில் ஒருமுறைகூட அவர்கள் அவையில் இருப்பதில்லை. அதை நானும் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய காரில் ஏறி, அவர் செல்ல முயன்றபோது, தயவுசெய்து எனது காரை எடுத்துச் செல்லுங்கள்; எனக்கொன்றும் பிரச்சினையில்லை என்று நான் சொன்னேன்.

அப்போது உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள் எழுந்து நின்று, எங்கள் கார் தவறாக எங்கும் சென்றுவிடாது என்று சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு டெல்லியில் route மாறி, கிட்டத்தட்ட 3 கார்கள் மாறிச் சென்றிருக்கிறார்கள். அவர்களது கட்சி அலுவலகத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு வாழ்த்துகள்.

பொதுவாக ஒரு பேப்பரில் எழுத ஆரம்பிக்கும்போது, சிலர் 'உ' போட்டு, அதற்குக் கீழே இரண்டு கோடுகள் போட்டு எழுதத் தொடங்குவார்கள். ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 'ரூ' போட்டு பட்ஜெட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். பாசிஸ்ட்டுகள், எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழ்நாட்டை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு ‘ரூ’ போட்டு, அவர்களை அலறச் செய்தவர்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இப்படிப்பட்ட நம்முடைய தலைவர் அவர்கள் இருக்கின்றவரை, தமிழ்நாட்டுக்குள் இந்தித் திணிப்பு மட்டுமல்ல; எந்தத் திணிப்பையும் யாராலும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக எடுத்துரைத்து என் பதிலுரையை தொடங்குகிறேன்.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள்-ஊரகக் கடன்கள் துறை. 1989 ஆம் ஆண்டு, மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்காக தருமபுரி மண்ணிலிருந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற விதையைத் தூவியவரும் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

அந்த விதை இன்றைக்கு தமிழ்நாடெங்கும் பரவி மிகப்பெரிய ஆலமரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியமே நம்முடைய சுய உதவிக் குழுக்களைப் பார்த்து அவர்களுடைய திட்டங்களை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும், அங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை நேரடியாக ஒவ்வொரு குழுவாக முடிந்தவரை சந்திக்க வேண்டும், அவர்களோடு உரையாட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்.

அதன்படி, சமீபத்தில், திருவாரூர் மாவட்டம் சென்றபோது, பழவனக்குடி ஊராட்சியைச் சேர்ந்த குழுக்களின் சகோதரிகளை சந்தித்து கலந்துரையாடினோம். அப்போது, குழு சகோதரிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதனை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றவுடன், உடனடியாக அதைத் தீர்க்க வேண்டுமென்று உத்தரவிட்டவுடன் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு 5 மணி நேரத்திற்குள் அவர்கள் கேட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டம், வீட்டுமனைப் பட்டா உட்பட ஏராளமான மனுக்களுக்கு தீர்வுகளை உடனுக்குடன் வழங்கினோம்.

திராவிட மாடல் அரசு அமைந்தது முதல், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 1 இலட்சத்து 35 ஆயிரம் புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

குழுக்களுக்கு வங்கிக் கடன்:

சென்ற ஆண்டு 35 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் எங்களுக்குக் target கொடுத்தார். அந்த target-ஐ achieve செய்துவிட்டோம். இந்தாண்டு 37 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிக் கடன் இணைப்புகளாக வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் எங்களுக்குக் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.

இந்த 4 ஆண்டுகளில், இப்படியாக மொத்தம் 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வங்கிக் கடன் இணைப்புகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். இதனை முதலமைச்சர் அவர்கள், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய வெறும் கடன் தொகையாக மட்டும் பார்க்கவில்லை; அவர்களுடைய உழைப்பின்மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைத் தொகையாகத்தான் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல, சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள், கடந்த 5 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகின. ஆனால், சென்ற ஆண்டு நம்முடைய துறையினுடைய கூடுதல் முயற்சியால் சென்ற ஆண்டு மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளோம். இந்தாண்டு இத்துறைக்கு 350 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு target கொடுத்திருக்கிறார்கள்.

குழுக்களுக்கு ஐ.டி. கார்டு கொடுக்க வேண்டுமென்று குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். கடந்த மார்ச் 8 ஆம் தேதி, உலக மகளிர் தினத்தன்று, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இந்த ID Card-இன்மூலம், குழுவினர் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை 100 கி.மீ. தூரம் வரை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

அதுமட்டுமின்றி, இன்னும் ஏராளமான பலன்களை இந்த அடையாள அட்டைகள்மூலம் குழுக்களைச் சார்ந்த சகோதரிகள் பயன்பெறலாம். விரைவில் அந்த ID Card அனைத்து குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கும் வழங்கப்படும்.

அதேபோன்று, 65 குழுக்களின் சகோதரிகள், சமைத்து விற்பனை செய்யும்விதமாக, சென்னை மெரினாவில் முதன்முதலாக உணவுத் திருவிழாவை கடந்த ஆண்டு நடத்திக் காட்டினோம். 5 நாட்கள் நடந்த இந்தத் திருவிழாவுக்கு சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்து ஆதரவு கொடுத்தார்கள்.

இந்த உணவுத் திருவிழாவின்மூலம், கிட்டத்தட்ட 1 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் விற்பனை ஆகியிருக்கின்றன. நம்முடைய திட்டங்களில் மகளிர் குழுக்களின் பங்களிப்புகள்: காலை உணவுத் திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால், குழுக்களின் சகோதரிகள் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற 18 இலட்சம் மாணவர்கள், பயன்பெறும் வகையில், 51 ஆயிரம் குழு சகோதரிகள், காலை உணவுத் திட்டத்தில் அவர்களுடைய பங்கு இருக்கிறது. அதேபோல, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பயனாளிகளை சென்றடைந்திருக்கிறோம்.

இந்தத் திட்டத்திலும், சுமார் 11 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த சகோதரிகளின் பங்களிப்பு இருக்கிறது என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அண்ணன் இராமலிங்கம் அவர்கள், நேற்று பேசும்போது, நகர்ப்புறங்களில், மகளிர் குழுக்களுக்கு கூட்ட அரங்கு அமைக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்கள். ஏற்கெனவே, 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் இந்தத் திட்டம் இருக்கின்றது. அவர்கள் கூட்டம் நடத்துவதற்கு hall வசதி ஏற்கெனவே இருக்கின்றது. இப்போது நகரப்புறங்களிலும் அந்த வசதி வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.

நான் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்போது, தொடர்ந்து குழு சகோதரிகள், ஏற்கனவே, இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அதனை முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். அதன்படி, நகர்ப்புறங்களில் குழுவுக்கான கூட்ட அரங்கங்கள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

வெங்கடேஸ்வரன் அவர்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பயன்கள், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். 2006-2011, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில், தருமபுரி மாவட்டத்தின் 6 ஒன்றியங்களில் “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” 1.O செயல்படுத்தப்பட்டது. விரைவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.O, செயல்படுத்தப்படும்போது,

உங்கள் மாவட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து ஒன்றியங்களும் நிச்சயம் சேர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், கடந்த சுதந்திர தின விழாவின் போது, ‘முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை’, நம்முடைய துறை பெற்றது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் மூலம், அரசுத் திட்டங்களை ஆய்வு செய்து, அவை சரியான திசையில் செல்வதை தொடர்ந்து ஆய்வு செய்கிறோம்.

அறிவிப்புகளின் நிலை:

நம்முடைய அரசின்மூலம் இதுவரை வெளியிடப்பட்டுள்ள 6,812 அறிவிப்புகளின் செயலாக்கத்தினை நம்முடைய சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

அறிவிக்கப்பட்டுள்ள 6,812 அறிவிப்புகளில், 96 சதவிகித அறிவிப்புகளுக்கு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 3,838 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளார்கள். அவற்றை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன் மூலம், 2,437 கோரிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன.

அந்தக் கோரிக்கைகளில், 513 பணிகளை மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் இல்லையென்று தெரிய வந்தது. எனவே, அவற்றிற்கு மாற்றாக, வேறு கோரிக்கைகளை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மூலமாக, ஓராண்டுக்கு முன்பே சம்பந்தப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி 91 தொகுதிகளில் இருந்து மாற்றுக் கோரிக்கைகள் வந்துள்ளன. அதில், 216 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, ஒருங்கிணைக்கும் வாய்ப்பு, நம்முடைய சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில், இன்றைக்கு ஒவ்வொரு மாதமும், சுமார் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் ஒவ்வொருவரும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெற்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்மூலம், கடந்த 19 மாதங்களில் மட்டும், 21,657 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

“இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிர், புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்” என்ற மகிழ்ச்சியான செய்தியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கு இந்த நேரத்தில் நான் என்னுடைய நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து, வட சென்னை வளர்ச்சித் திட்டம். வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 235 பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 சதவிகித பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோல, பட்டா வழங்குதல். சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ், சென்னை மற்றும் புறநகரில், கடந்த 8 மாதங்களில் மட்டும், 1,36,149 பட்டாக்களை வழங்கியுள்ளோம். மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று, தொடர்ந்து பட்டாக்களை வழங்குவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

அடுத்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம். ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், கடந்த 3 ஆண்டுகளில், நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள்மூலம், 2,65,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட 2,65,000 நபர்களில், 1,34,000 பேர் மகளிர் என்பதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

இன்றைக்கு இந்தியாவிலேயே எப்படி நம்முடைய தமிழ்நாடு No.1 மாநிலமாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறதோ அதேபோல, நம்முடைய தமிழ்நாட்டு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்தியாவிலேயே நம்பர்-1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

விளையாட்டுத் துறையில் நம் திராவிடமாடல் அரசுபடைத்து வரும் சாதனைகளில் சிலவற்றை, இந்த மாமன்றத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன்.வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயமாக இந்த உலகமே நம்மை கொண்டாடும். ஆனால், வெற்றிபெறுவதற்கு முன்பே தகுதியுள்ள வீரர்களை கொண்டாடுகின்ற அரசுதான் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

அதற்கு ஓர் உதாரணத்தை மட்டும் நான் இங்கே கூற விரும்புகின்றேன். சென்ற ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பாரா ஒலிம்பிக்ஸ் ஆகஸ்டு மாதம் 2024-ல் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றனர்.

அந்த 17 வீரர்களையும் அழைத்து, அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாகவே, இங்கிருந்து போவதற்கு முன்பே selection ஆன உடனே Special High Cash Incentives-ஆக சிறப்பு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூபாய் 7 இலட்சத்தை அவர்கள் prepare ஆவதற்கு மட்டுமே 7 இலட்சம் ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து இந்த பாரா ஒலிம்பிக்ஸ்-ல் பங்கேற்ற, 4 மாற்றுத் திறனாளி வீரர்கள் முதல் முறையாக பதக்கம் வென்றனர். (மேசையைத் தட்டும் ஒலி) பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைகள் தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் மற்றும் தடகள வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையை நம் முதலமைச்சர் அவர்கள் உடனடியாக வழங்கி வாழ்த்தினார்கள்.

அதேபோல, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்கின்ற வீரர்களுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், முந்தைய ஆட்சியில், வேலைவாய்ப்பு கொடுத்ததாக சொன்னார்கள். கொடுத்தது எத்தனை பேருக்கு என்று பார்த்தீர்களென்றால், வெறும் 3 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், நம்முடைய அரசு அமைந்த பிறகு, இதுவரை மொத்தம் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற 1,821 வீரர்களுக்கு, 60 கோடியே 14 இலட்சம் ரூபாய் High Cash Incentives உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு வீரர்களின் சாதனைகள்: இளம் செஸ் வீரர் தம்பி குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று, தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் இன்றைக்கு பெருமையைத் தேடித்தந்திருக்கிறார்.

அதேபோல, மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை தங்கை கமலினி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். மலேசியாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற Under 19 World Cup போட்டியில், இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு, தங்கை கமலினியின் சிறப்பான ஆட்டம், மிகச் சிறந்த முக்கிமான காரணமாக இருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி பிரணவ், அண்மையில் உலக ஜுனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றார். சமீபத்தில் நடைபெற்ற கோ-கோ உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி சுப்பிரமணி, இந்தியாவை வெற்றி பெறுவதற்கு மிக மிக முக்கியமான ஒரு player ஆக இருந்தார்.

சாதனை படைத்த இந்த 4 வீரர்களுக்கும் மொத்தம் 6 கோடியே 60 இலட்சம் ரூபாய் அளவுக்கு உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். அதேபோல சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற Khelo India Para Games 2025 தமிழ்நாட்டு வீரர்கள் முதன்முறையாக ஒட்டுமொத்தமாக points tally-ல் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். (மேசையைத் தட்டும் ஒலி) 28 தங்கம் உட்பட 74 பதக்கங்களை குவித்த மாற்றுத் திறனாளி வீரர்களை இந்த மாமன்றத்தின் வாயிலாக நாம் அனைவரும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

FICCI - (Federation of Indian Chambers of Commerce and Industries) சார்பில், 2024 –ஆம் ஆண்டிற்கான, விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டது. (மேசையைத் தட்டும் ஒலி) அதேபோல, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், முதன்முறையாக E Sports-ஐ demo game-ஆக நடத்தியதால், 2025 ஆம் ஆண்டிற்கான ஜெம் (GEM) விருது மும்பையில் தமிழ்நாடு அரசுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.

சென்ற நிதி ஆண்டில், மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் சென்னையில் நடத்தப்பட்ட பல சர்வதேச – தேசிய போட்டிகளின் விவரத்தைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024, தெற்காசிய இளையோர் தடகளப் போட்டிகள்–South Asian Youth Games, 76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி, Chennai Open ATP Challenger – 100, Asian Triathlon 2025, World Table Tennis Star Contenders, 23rd National Para Athletics Championships 2025, ஆகியவை சென்னையில் நடத்தப்பட்டுள்ளன.

23rd National Para Athletics Championships-ல், தமிழ்நாட்டு வீரர்கள் 47 பதக்கங்களைக் குவித்து, ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

தெற்காசியாவிலேயே முதன்முறையாக Night Street Circuit கார் பந்தயம் சென்னையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை ஏன் நடத்துகிறீர்கள் என்று பல்வேறு விமர்சனங்கள வந்தன; வீண் செலவு என்று சொன்னார்கள்; சிலர் நீதிமன்றத்திற்கெல்லாம்கூட சென்றார்கள்; இன்னும் சொல்லப்போனால், போட்டி நடைபெற்ற அந்தநேரத்தில், பலர் TV-யில் பேட்டியெல்லாம் கொடுத்தார்கள்;

கார் கூவத்தில் விழுந்தால் என்ன செய்வீர்கள் என்று சிலர் கேட்டார்கள்; சிலர், கார் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கின்ற Gallery-க்குள் புகுந்துவிட்டால் என்னவாகும் என்றெல்லாம் கூறி பொதுமக்களிடத்தில் குழப்பத்தை உண்டாக்கினார்கள். ஆனால், யார் யாரெல்லாம் இந்தப் போட்டியை விமர்சித்தார்களோ, அவர்களே பாராட்டுகிற அளவுக்கு (மேசையைத் தட்டும் ஒலி) Chennai Formula 4 பந்தயத்தை சிறப்பாக நடத்திக் காட்டினோம்.

அந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கி, அங்கிருந்த gallery-ல் அமர்ந்து, அந்தப் போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்கள். இதற்கு சென்னை மக்கள் மிகப்பெரிய ஆதரவைத் தந்தார்கள். இந்தப் போட்டியில் 15 நாடுகளிலிருந்து 40 கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். ஒருபுறம், வழக்கமான போக்குவரத்து;

இன்னொரு புறம், கார் பந்தயம் என தீவுத்திடலைச் சுற்றி நடந்த இந்தக் கார் பந்தயம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் போட்டியை நாம் நடத்திக்காட்டிய விதம், எந்த மாதிரியான சவாலான போட்டிகளையும் நம்மால் எளிதில் நடத்த முடியும்; (மேசையைத் தட்டும் ஒலி) அதற்கான ஆற்றல் நம்மிடம் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

தமிழ்நாட்டு வீரர்களின் திறமைக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் அவர்கள், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இதுவரை 28 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் விளையாட்டு வீரர்களின் தேவை அடிப்படையில், 16 கோடியே 56 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெற்ற வீரர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 100 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் பெருமைதேடித் தந்திருக்கின்றார்கள்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் எந்த அளவுக்கு நம்முடைய வீரர்களின் வாழ்வை மாற்றுகிறது என்பதற்கு ஒரு சிறந்த சிறு உதாரணத்தைக் கூற விரும்புகின்றேன். வட சென்னையைச் சேர்ந்த கேரம் வீராங்கனை தங்கை காசிமா; அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கின்றார். அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால், அவருக்கு, அதற்கான பயணத்திற்கும், தங்குவதற்கும், பயிற்சிக்குமான செலவிற்கு நிதி உதவி இல்லை. இதுபற்றி எங்களுடைய துறைக்கு கோரிக்கை வைத்தவுடன், உடனடியாக, அடுத்த நாளே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கி, அவரை உலகக் கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா அனுப்பி வைத்தோம். நிதி பெற்றுச் சென்ற தங்கை காசிமா அவர்கள், உலகக் கோப்பையை வென்று தமிழ்நாடு திரும்பினார்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உடனடியாக அவரைப் பாராட்டி, (மேசையைத் தட்டும் ஒலி) 1 கோடி ரூபாயை High Cash Incentives ஆக வழங்கினார்கள். இதுபோல, நூற்றுக்கணக்கான காசிமாக்கள் உருவாக நம்முடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து துணை நிற்கும். ஆகவே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய தொகுதிகளில், விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டிகளில் பங்கேற்க நிதி உதவி தேவைப்பட்டால், அவர்களை, www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் தயவுசெய்து விண்ணப்பிக்கச் சொல்ல வேண்டும். நிச்சயம் அவர்களின் திறமைக்கு ஏற்ப, நிதி உதவி அளிக்கப்படும்.

விளையாட்டினை மாபெரும் மக்கள் இயக்கமாக்கும் விதமாக, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். கடந்த ஆண்டு, இதற்காக 83 கோடியே 37 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முந்தைய ஆட்சி காலத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசுத் தொகையாக 8 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு ஒவ்வோராண்டும் கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் அளவுக்கு வெறும் பரிசுத்தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போட்டிகளில் கடந்த ஆண்டு பங்கேற்றவர்கள் 5 இலட்சம் வீரர்கள். இந்தாண்டு சுமார் 12 இலட்சம் வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்திருக்கிறார்கள். இதுவே இத்திட்டத்திற்கான வெற்றி என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக சென்னை திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலி என 6 மாவட்டங்களில் Para-Sports Arena அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக மொத்தம் 5 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாரா விளையாட்டு மைதானங்களுக்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்கள் நேற்று பேசியபோது, புதிய விடுதிகள் திறக்கப்படவில்லை என்றும், விடுதிகளில், Sports Hostels-ல் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாகவும் ஒரு கருத்தைக் கூறி இருந்தார்கள். நம்முடைய அரசு அமைந்த இந்த 4 வருடங்களில், இதுவரை 6 புதிய விடுதிகள் (மேசையைத் தட்டும் ஒலி)-மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேயத்தில் ஒன்றும், SDAT Tennis stadium, நுங்கம்பாக்கத்தில் ஒன்றும், SDAT Aquatic complex, வேளச்சேரியில் ஒன்றும், Sports University, செங்கல்பட்டில் ஒன்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றும், சேலம் மாவட்டத்தில் ஒன்றும் என இதுவரையில் 6 புதிய விடுதிகளை நம்முடைய அரசு அமைந்த பிறகு தொடங்கியிருக்கிறோம்.

தற்போது 40 விடுதிகள் உள்ள நிலையில், வரும் ஆண்டில் புதிய விடுதிகளை கூடுதலாகத் திறக்கவுள்ளோம். மேலும், விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை நாளொன்றுக்கு தலா ஒருவருக்கு 250 ரூபாய் என்றிருந்தை நம்முடைய அரசு சென்ற வருடம் 350 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளில், நம்முடைய துறை அரசு எடுத்த முயற்சியால், விடுதியில் இருக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை, 2,300-லிருந்து இன்றைக்கு 2,600 ஆக உயர்ந்துள்ளது என்பதை இங்கே தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

விளையாட்டுக் கட்டமைப்பை தமிழ்நாடெங்கும் பரவலாக்கம் செய்திட, சட்டமன்றத் தொகுதிகள்தோறும் Mini Stadiums அமைக்கப்படும் என்று நாம் 2022- 2023 ஆம் ஆண்டில் அறிவித்திருந்தோம். முதற்கட்டமாக 9 சட்டமன்றத் தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதில் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, சோழவந்தான், திருவைகுண்டம் மற்றும் காரைக்குடி ஆகிய தொகுதிகளில் Mini Stadium கட்டி முடிக்கப்பட்டு ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொளத்தூர், வாணியம்பாடி, காங்கேயம், பத்மநாபபுரம் மற்றும் ஆலங்குடி ஆகிய 5 தொகுதிகளிலும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அங்கேயும் Mini Stadiums திறந்து வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 22 சட்டமன்றத் தொகுதிகளில்

Mini Stadium அமைக்கப்படும் என்று கடந்தாண்டு சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதுமட்டுமல்ல, நிலம் இருக்கின்ற அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியங்களை அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய பேரவைத் தலைவர் அவர்கள், அவருடைய இராதாபுரம் தொகுதியில் ஸ்டேடியம் அமைக்க வேண்டுமென்று கேட்டுள்ளீர்கள். இராதாபுரத்தில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைப்பதற்கான அறிவிப்பை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்கள். இதற்காக நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு உறுப்பினர் நீலமேகம் அவர்கள், தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், Synthetic Athletic Track அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நேற்றையதினம் கோரிக்கை வைத்திருந்தார். அந்தப் பணிகள், வரும் ஏப்ரலுக்குள் முடிக்கப்பட்டு, விரைவில் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரத்தில், கலைஞர் குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என்று சென்ற ஆண்டு சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தோம். அதன் அடிப்படையில், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் பாக்சிங் அகாடமியை, முதலமைச்சர் அவர்கள் கடந்த மாதம் திறந்து வைத்தார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்’ வழங்குவோம் என்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தோம். கடந்த ஆட்சியில், வெறும் 4 விளையாட்டுக்களுக்கான sports kids தான் கொடுக்கப்பட்டது.

அந்த நிலையில், கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின்கீழ், 10 வகையான விளையாட்டுகளுக்குத் தேவையான 33 sports kids-ஐ நாம் தொடர்ந்து வழங்கியிருக்கின்றோம். அனைத்து மாவட்டங்களிலும், ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 17,000 எண்ணிக்கையிலான கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் தொகுப்பினை கொடுத்திருக்கிறோம். வரும் ஆண்டில், நகர்ப்புறங்களிலும், கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின்கீழ், விளையாட்டு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இப்படியாக தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி புதிய உயரங்களை தொட்டிடும் வகையில் நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அயராது பாடுபாட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன். ”

Also Read: காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி! : சட்டப்படிப்புகள் குறித்து அமைச்சர் ரகுபதி தகவல்!