Politics
வடக்கின் ஆதிக்கம்.. பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது... பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவு-செலவுத் திட்டம், 2025-2026, பதிலுரை வருமாறு :
தங்கம் தென்னரசு : பேரவைத் தலைவர் அவர்களே, 2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்மீது கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற பொது விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிடும் ஒரு நல்ல வாய்ப்பினை எனக்கு நல்கியிருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர், எங்கள் ஆருயிர் தலைவர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், அவை முன்னவர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், பேரவைத் தலைவராகிய தங்களுக்கும், இந்த மாமன்றத்தினுடைய உறுப்பினர் பெருமக்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தையும், நெஞ்சார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னை இந்தப் பேரவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கக்கூடிய திருச்சுழி தொகுதிவாழ் பெருமக்களுக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீளா துயில் கொண்டிருக்கக்கூடிய இடம் நோக்கி, நான் தொழுது வணங்குகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே,
‘கடுஞ் சினத்த கொல் களிறும்;
கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும்,
நெஞ் சுடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்’
என்கிறார் மதுரை இளநாகனார் என்கிற சங்கப் புலவர் அவர்கள். விரைந்து செல்லக்கூடிய கடிய சினத்தையுடைய யானைப்படை, விரைந்து செல்லக்கூடிய செருக்கை உடைய ஒரு குதிரைப்படை, உயர்ந்த கொடிகளையுடைய தேர்ப்படை, நெஞ்சில் வலிமையுடைய காலாட்படை என்று ஓர் அரசனிடத்திலே நான்கு படைகள் சிறப்பாக அமையப் பெற்றிருந்தாலும், பெருமைமிக்க அறநெறி ஒன்றுதான் அந்த மன்னனின் ஆட்சியினுடைய வெற்றிக்கு அடையாளமாக விளங்கும் என்று மதுரை இளநாகனார் குறிப்பிட்டுச் சொல்கிறார். அத்தகைய அறநெறியினுடைய வழியில் நின்று, ஆட்சி புரியக்கூடிய முதலமைச்சர் அவர்களுடைய திராவிட மாடல் ஆட்சிக்கு பெருமைகள் பலப்பலவாக இருந்தாலும், அறமே இந்த ஆட்சியினுடைய அடிப்படையாக அமைந்திருக்கிறது. எனவேதான்,
‘நமரெனக் கோல்கோ டாது,
பிறர் எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்
வானத்து அன்ன வண்மையும்’
கொண்டு அறநெறி பிறழாம், திறனறி மன்னராக, நல்லாட்சி புரியக்கூடிய நாயகராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விளங்குகிறார்கள்.
அவரை மருதன் இளநாகனாருடைய சொற்களில் “நீ நீடு வாழிய நெடுந்தகை” என்று நான் வணங்கி, என் உரையை நான் துவங்குகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, “எல்லார்க்கும் எல்லாம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்பேரில், 14-3-2025 அன்று சட்டமன்றத்தில் முன்வைத்த வரவு-செலவுத் திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 4 நாட்களாகப் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசியிருக்கக்கூடிய நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய தமிழ்நாடு அரசு இன்றைக்கு அளித்திருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைக்கும், ஒன்றிய அரசு அளித்திருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நான் தொடக்கத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர்கள் நன்றாக அறிவார்கள். ஒன்றிய அரசினுடைய நிதிநிலை நீங்கள் அனைவரும் அறிந்தவண்ணம் இந்தியாவினுடைய ஒருசில மாநிலங்களுக்கு மட்டுமான நிதிநிலை அறிக்கையாக இன்றைக்கு அமைந்திருக்கிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு மாத்திரமான ஒரு நிதிநிலை அறிக்கையாக ஒன்றிய அரசினுடைய நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. ஆனால், முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி, நம்முடைய மாநில அரசு இன்றைக்கு அளித்திருக்கக்கூடிய இந்த நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாட்டினுடைய கடைக்கோடி மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய நோக்கில் அமைந்திருக்கக்கூடிய ஒரு நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; தேர்தல் காலத்தில் ஒருவேளை எங்களுக்கு ஆதரவாக இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தாலும்கூட, எப்படி புவியிலே வாழக்கூடிய மக்களுக்கு நிறம் பார்த்து வேறுபாடு இல்லாமல் வான் மழையானது அத்தனை பேருக்கும் சமமாகப் பொழிகிறதோ, அதைப்போல, முதலமைச்சர் அவர்கள் சமன்செய்து சீர்தூக்கும் துலாக்கோல்போல் அனைத்துப் பகுதிகளையும் சமமாகப் பாவித்து, தமிழ்நாட்டினுடைய எல்லாப் பகுதிகளுக்கும் தேவையான உரிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க எங்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பதை நான் நெஞ்சுயர்த்திப் பெருமையாக இந்த மாமன்றத்திலே நான் தெரிவிப்பேன். அதன் காரணமாகவே இந்த நிதிநிலை அறிக்கையை இன்றைக்கு அனைவரும் பாராட்டக்கூடிய ஒரு வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்.
இன்னொன்று, நம்முடைய உயிரினும் மேலான தமிழ்மொழியைவிட வட மொழிக்கும், இந்தி ஆகிய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளக்கூடிய ஒன்றிய அரசு ஒருபுறம் இருக்கிறது. ஆனால், நம்முடைய தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசக்கூடிய அந்தப் பழங்குடி மொழிகளுக்கும் உரிய கவனம் கொடுக்கக்கூடிய ஓர் அரசாக இன்றைக்கு நாம் பரிணமித்து வந்திருக்கிறோம் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையில் உங்களால் கவனித்துப் பார்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, அதேபோல போக்குவரத்துத் துறையை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்று சொன்னால், ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு இரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கியிருக்கக்கூடிய நிதி 19 ஆயிரத்து 68 கோடி ரூபாய் மட்டும்தான்; ஆனால், உத்தரப் பிரதேசத்திற்கு 2025-2026 இந்த ஓராண்டிற்கு மட்டும் நம்முடைய ஒன்றிய அரசு ஒதுக்குவதற்கு உத்தேசித்திருக்கக்கூடிய தொகை அதே 19 ஆயிரத்து 858 கோடி ரூபாய்; அதாவது நமக்கு மூன்று ஆண்டுகளிலிலே கொடுக்கக்கூடிய அந்தத் தொகையை ஒரே ஆண்டிலே உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்றிய அரசு வழங்குகிறது என்று சொன்னால், ஒன்றிய அரசினுடைய நிதிநிலை அறிக்கைக்கும், நாம் கொண்டு வந்திருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை உங்களால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இப்படி நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்தாலும்கூட இந்தியாவிலே மிக அதிகமான மதிப்பீட்டிலான சென்னை இரண்டாம் கட்ட Metro Rail திட்டத்தை ஒன்றிய அரசினுடைய நிதி உதவியின்றி, தன்னுடைய சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாடு செயல்படுத்த ஆரம்பித்தது.
முதலமைச்சர் அவர்கள் மேதகு இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் வற்புறுத்திய பின்னர்தான், ஒன்றிய அரசு தனது பங்கினை தமிழ்நாட்டிற்கு வழங்கியது என்பதனை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். அதுமட்டுமின்றி, எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்காக மித அதிவேக இரயில் Semi High-Speed Railway இரயில்வே அமைப்பான மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு; Regional Rapid Transit System மற்றும் உயர் போக்குவரத்து அமைப்பான Ropeway போன்ற அமைப்பை உருவாக்கி இரயில்வே வளர்ச்சி குறித்து சிந்தித்து செயலாற்றி நம்முடைய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசினுடைய இந்த நிதிநிலை அறிக்கை நடப்பு ஆண்டிற்கான வெறும் புள்ளிவிவரங்களை மட்டும், வரவு-செலவு குறித்த புள்ளி விவரங்களை மட்டும் கொண்டதாக அமையவில்லை. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், எங்களுக்கு வழிகாட்டியபடி எதிர்கால தமிழ்நாட்டினுடைய வளமான எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளம் அமைத்திடும் வகையில் உயரிய நோக்கங்களை உள்ளடக்கி இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, Chip War என்கின்ற ஒரு நூல் கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை எழுதியவர் Chris Miller என்பவர் ஆவார். Semiconductor துறையில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறதோ, அந்த நாடுதான் பொருளாதார வளர்ச்சியிலும் முதலிடம் வகிக்கும் என்று அவர் பல்வேறு தரப்பினரோடு கலந்து, ஆய்ந்து அதை நிரூபித்தும் இருக்கிறார். அவர்கள் கடந்த முறை உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு இங்கே, சென்னைக்கும் நேரடியாக வருகை தந்து தன்னுடைய கருத்துகளை நம்மிடத்திலே பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இன்று உலகெங்கும் பல நாடுகளும் Semiconductor துறையில் போட்டிப்போட்டுக் கொண்டு செயலாற்றி வருகின்றன. எனவே, அந்தத் துறையில் தமிழ்நாடும் முன்னிலைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து அவருடைய ஆலோசனைகளைப் பெற்று Semiconductor திட்டம் ஒன்றினை ஐந்து ஆண்டுத் திட்டமாக நம்முடைய அரசு இன்றைக்கு அறிவித்து இருக்கிறது. அதில் இரண்டு Semiconductor தொழிற்பூங்காக்கள் கோவையிலே சூலூரிலும், பல்லடத்திலும் இன்றைக்கு நிறுவப்பட இருக்கின்றன. Semiconductor வளர்ச்சியில் கோவை மண்டலம் இன்னும் செழுமை அடைந்திடும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். அதுமட்டுமல்ல; புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் பலவும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்திருக்கின்றன. Technical textiles, man-made fibers என்ற வகையில் இந்தியாவில் electronic பொருட்களை அதிக அளவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என்கின்ற பெருமையை நாம் பெற்று சிறந்து விளங்குகிறோம். தொழில் வளர்ச்சி என்பது ஏதோ பெயருக்கு மட்டும் இல்லாமல், தொடர்ந்து எல்லா இடங்களிலும் முன்னேறி தமிழ்நாட்டில் பரவலான தொழில் பெருக்கத்தை இந்த அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இந்த 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 80 ஆயிரம் நபர்களுக்குமேல் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்பூங்காக்கள் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டிலே இடம்பெற்றிருக்கிறது என்பதை நான் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
அதைப்போன்று புத்தொழில் நிறுவனங்கள்; இந்த நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்கக்கூடிய வரை, தமிழ்நாட்டிலே பதிவு செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கையை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், அது வெறும் இரண்டாயிரத்து நூற்று ஐந்துதான். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் நம்முடைய தமிழ்நாடு அரசு எடுத்திருக்கக்கூடிய பல்வேறு முயற்சிகளின் காரணமாக இந்த எண்ணிக்கை இன்றைக்கு ஐந்து மடங்காக அதிகரித்து 10,649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, இந்திய திருநாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்குத் திகழ்ந்து வருகிறது. அதைப்போல சிறு, குறு தொழில்களைப் பொறுத்தமட்டில் இந்த அரசு பொறுப்பேற்கின்றபோது தமிழ்நாட்டில் 14.17 இலட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கிக் கொண்டிருந்தன. அதேவேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் 17.92 இலட்சம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் 32.10 இலட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இது இத்தகைய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குவதற்கு ஒரு உகந்த சூழ்நிலை நிலவி வருவதைக் காட்டுகிறது.
பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் SIPCOT நிறுவனத்தின் மூலமாக ஒன்பது தொழிற்பூங்காக்கள் சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவிலேதான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளையில் இந்த கடந்த நான்கு ஆண்டுகளிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலே பொறுப்பேற்றுக் கொண்டதற்குப்பிறகு, 32 தொழிற்பூங்காக்கள் 16,880 ஏக்கர் பரப்பளவிலே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று, இதே காலகட்டத்தில் SIDCO நிறுவனம் பத்து ஆண்டுகளிலே 1,111 ஏக்கர் பரப்பளவிலே 25 தொழிற்பேட்டைகளை நிறுவி இருக்கிறார்கள். ஆனால், 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான இந்த நான்கு ஆண்டு காலத்தில் மட்டும் 28 தொழிற்பேட்டைகள் 1,213 ஏக்கர் பரப்பளவிலே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இது அண்மையில் இந்த நிதிநிலை அறிக்கையிலே நாங்கள் சொல்லியிருப்பதைப்போல, கடந்த 2000 ஆம் ஆண்டிலே குமரி முனையில் வள்ளுவருக்கு வானுயர சிலை எழுப்பிய, அதே வருடம் ஜூலை மாதம், சென்னையில் TIDEL Park தொழில் பூங்காவை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். ‘ததும்பும் தமிழ் பெருமிதம் ஒருபுறம், உலகை வெல்லும் நம்முடைய தொழில்நுட்பம் மறுபுறம்’ என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திட்டமிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், TIDEL Park மற்றும் Mini TIDEL Park இன்றைக்கு தொடங்கப்பட்டு வருகின்றன. வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், தூத்துக்குடி, மதுரை, ஓசூர் என தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மற்ற இடங்களிலும் இதேபோன்று தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், அந்தந்தப் பகுதிக்கு பெருமைக்குரிய அடையாளங்களாக மாறி, இளைஞர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் வழிகாட்டியாக மாற்றிடும் என்று நான் நம்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, தஞ்சை மாவட்டத்தில் சீர்காழி என்கின்ற ஒரு நகரம் இருப்பதை நாம் அறிவோம். ஏழாம் நூற்றாண்டினுடைய காலகட்டத்தில் சிற்றூராக இருந்த சீர்காழியில் ஒரு காலை பொழுதில், அந்த ஊரில் இருக்கக்கூடிய சிவன் கோயிலினுடைய குளக்கரையில் ஒரு குழந்தை அழுதுக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தை பசியால் கதறி அழுதபோது, அந்தக் குழந்தையினுடைய பசியை ஆற்றுவதற்கு, அதனுடைய அன்னை அருகில் இல்லை. அதனுடைய உற்றாரும், சுற்றாரும், உறவினரும் அருகில் இல்லை. ஆனால், அந்தக் குழந்தைத் தொடர்ந்து அழுதபோது, அந்தக் குழந்தையின் அழுக்குரல் அந்த ஊர் இறைவி அவர்களுடைய செவிகளில் விழுந்து பாலுக்காக, ஏங்கி வயிற்றுப் பசிக்காக அழக்கூடிய அந்தக் குழந்தையினுடைய பசியை ஆற்றுவதற்கு தாய்மை உணர்வோடு பார்வதியாக இருக்கக்கூடிய அந்த உமையம்மையே நேரடியாக வந்து, அந்தக் குழந்தைக்கு ஞானப் பாலினை ஊட்டி, அதனுடைய பசியை தணித்ததாக நான் புராணங்களிலே படித்து இருக்கிறேன். அப்படி உமையம்மையே ஞானப்பால் ஊட்டியதால்தான், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனாக அந்தக் குழந்தை உருவாயிற்று என்பதும், அதை ஒட்டி அந்தக் குழந்தை,
‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்’
என்று அழகிய தமிழிலே அந்தக் குழந்தை பாடியதாகவும் நான் படித்து இருக்கிறேன்.
பேரவையினுடைய தலைவர் அவர்களே, அன்றைக்கு ஒரு மழலையினுடைய அழுக்குரலுக்கு உமையம்மை நேரடியாக இறைவியே வந்து பாலூட்டினாள். மலைமகள் அன்றைக்கு அந்தக் குழந்தைக்கு பாலூட்டினாள். ஆனால் இன்றைக்கோ தமிழ்நாட்டிலே பள்ளிகளுக்கு செல்லக்கூடிய எந்தக் குழந்தையும் பசியிலே அழவே கூடாது என்று தமிழ்நாட்டினுடைய தலைமகனாக, நம் உள்ளம் கவர் கள்வனாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை இன்றைக்கு நமக்கு அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’ என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய அறிவுரைக்கிணங்க, நாடே போற்றும் வகையில் நடந்ததுக்கொண்டது மட்டுமின்றி, நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லாததையும் நாங்கள் செய்வோம் என்று நாட்டுக்கே வழிகாட்டியாக மட்டுமின்றி உலக நாடுகளே இன்றைக்கு பின்பற்றும் வகையில் முதலமைச்சர் அவர்களுடைய காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். 1924 ஆம் ஆண்டு நீதிக் கட்சியினால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலே தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், இன்றைக்கு இலட்சக்கணக்கான குழந்தைகள் பயன்பெறத்தக்க அளவில், மதிய உணவுத் திட்டம், சத்துணவு அளிக்கும் திட்டங்களாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நான் எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்துக்கொண்டிருக்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த என்னுடைய அருமை நண்பர்களுக்கு நான் சொல்வேன், உங்கள் தேர்தல் அறிக்கையிலே இரண்டுமுறை இதே திட்டத்தை அறிவித்து, தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் இதை சொல்வோம், செய்வோம் என்று சொல்லி, ஒவ்வொரு முறையும் நீங்கள் இங்கே பேசுகிறபோது சொல்கிறீர்களே தேர்தல் வாக்குறுதி. நீங்கள் இரண்டுமுறை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து 10 ஆண்டு காலத்திலே உங்களால் நிறைவேற்ற முடியாத ஒன்றை தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பசிப்பிணி நீக்கும் மருத்துவராக, நம்முடைய தாயுமானவராக இருந்து, இந்தத் தமிழ்நாட்டினுடைய குழந்தைகளுக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி, ஒரு மாபெரும் சாதனையினை நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்பதை நான் இந்த அவையிலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, சமூகத்தில் மகளிருடைய பங்கையும் முறையாக அங்கீகரிக்கக்கூடிய வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
இந்தத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியபோது, ‘இந்தத் திட்டத்தை எப்படி இவர்கள் செயல்படுத்தப்போகிறார்கள்?’ என்று பலர் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலரோ, இவர்கள், எங்கே, எப்போது இடறி விழுவார்கள்; steady ஆக இருக்கிறார்களே! இந்தத் திட்டத்தை தைரியமாகக் கொண்டு வந்திருக்கிறாரே முதலமைச்சர்! இதை நிறைவேற்ற முடியுமா? எந்தச் சமயத்தில் இவர்கள் இடறி விழுவார்கள்? என்கின்ற நப்பாசையோடும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அவர்களுடைய இத்தகைய நயவஞ்சக எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கி, ஒரு கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து கிடைக்கும் வகையில் முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதை இந்த நாடே வியந்துப் பாராட்டுகிறது.
இன்னும் சொல்லவேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியன்று மகளிருக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கக்கூடிய அந்த நாள்தான், அந்தக் குடும்பத்திற்கே மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக ஆக்கியிருக்கிறது என்று லண்டன் King’s கல்லூரியினுடைய ஆய்வு பேராசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகையை எதற்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால், சேமிப்பாகவும், குழந்தைகளுடைய படிப்புச் செலவு, மருத்துவச் செலவு போன்ற அத்தியாவசியச் செலவினங்களுக்காகவும் இத்தொகையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். மகளிர் உதவி பெறும் வகையில், ஒரு மாபெரும் திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தி வருவது உலகளாவிய அளவிலே நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு மாபெரும் பாராட்டுதலைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பிக்க மகளிரை எங்கும் அலைந்துத் திரிய வைக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய இல்லங்களுக்கு அருகிலேயே அவர்களுடைய விண்ணப்பங்களைப் பெற்று, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அவற்றைச் சரிப்பார்த்து, அவர்களுடைய வங்கிக் கணக்கில் உரிமைத் தொகையானது வரவு வைக்கப்படுகிறது. இல்லம் தேடி வரும் மகளிர் உரிமைத் தொகை முதல்வரிடமிருந்து வரும் ஓர் அன்புப் பரிசாகவே ஒரு கோடிக்கும் மேலான மகளிர் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அதே வேளையில், நான் ஒன்றைச் சொல்வேன்; இதே போன்றதொரு திட்டத்தை இந்தியாவில் மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். அண்மையிலே சில நாளேடுகளில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் பார்ப்போம் என்று சொன்னால், மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தத் திட்டத்தில்--அவர்கள் எதற்காக அறிவித்தார்கள்? மகாராஷ்டிரா மாநிலத்திலே தேர்தல் வருகிறது என்று அறிவித்தார்கள். அந்தத் திட்டத்தை அறிவித்ததற்குப் பிறகு, தேர்தல் முடிந்தவுடன் ஜெயித்தக் கையோடு அம்மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய BJP அரசாங்கம் என்ன செய்தார்கள் தெரியுமா? சுமார் 15 இலட்சம் பயனாளிகளை அந்தத் திட்டப் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பதாக இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஓர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்; ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்ட காலத்தில் முதலிலே கையெழுத்து எதற்குப் போடவேண்டும்? விடியல் பயணத்திற்குக் கையெழுத்துப் போடலாம். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, சத்துணவிலே முட்டையை அளிப்பதற்காக கையெழுத்துப் போட்டார்கள். இப்படி நாட்டு மக்களுக்காக நன்மை செய்யக்கூடிய திட்டங்களுக்குக் கையெழுத்துப் போடலாம். ஆனால், BJP அரசாங்கம் 15 இலட்சம் பேரை ஒரே அடியாக, ஒரே கையெழுத்திலே அந்தப் பட்டியலிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள் என்பதை நான் சொல்லவில்லை நண்பர்களே, நாட்டிலே வரக்கூடிய நல்லேடுகள் பல இன்றைக்கு தெரிவித்திருக்கின்றன. அப்படி, அவர்களை வெளியேற்றுவதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தினுடைய வருவாய்ப் பற்றாகுறையை அவர்கள் ரூ.46,000 கோடியாக குறைத்திருக்கிறோம் என்று இதிலே பெருமை வேறு கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே மகளிர் உரிமைத் தொகை மட்டுமல்ல; கலைஞர் கனவு இல்லம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், விடியல் பயணம் என பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதற்குப் பிறகும்கூட, நாம் இன்றைக்கு வருவாய்ப் பற்றாக்குறையை ரூ.68,000 கோடியிலிருந்து ரூ.41,000 கோடியாகக் குறைத்திருக்கிறோம் என்று சொன்னால், அது நமது முதலமைச்சர் அவர்கள் நிதி மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்கு நல்ல சான்றாக இருக்கும். அதைப்போல மகளிருக்காகக் கட்டப்பட்டிருக்கக்கூடிய ‘தோழி’ மகளிர் விடுதிகள், தொழிற்சாலைகளில் கட்டப்படக்கூடிய தங்கும் விடுதிகள் ஆகியத் திட்டங்கள் இன்றைக்கு தேசிய அளவிலே கவனம் பெற்றது மட்டுமல்ல; ஒன்றிய அரசு சமீபத்திலே வெளியிட்டிருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கையிலும்கூட அவை இடம்பெற்று இந்தத் திட்டங்கள் பாராட்டப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
பேரவைத் தலைவர் அவர்களே, நாட்டில் தேசிய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், தமிழ்நாட்டில் 42 சதவிகித பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒரு செய்தி. 20-11-2021 வரையிலான பத்து ஆண்டுகளில் 29 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், ITI-க்கள் அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே நிறுவப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, அதிநவீன தொழில்நுட்ப 4.0 technology அடிப்படையில் தமிழ்நாடு எங்கும் உள்ள 71 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள்,
ITI-க்கள் இன்றைக்கு தரமுயர்த்தப்பட்டிருக்கிறது என்பதையும் நான் பெருமையோடு இங்கே சொல்வேன். ஒன்றிய அரசு NEET, CUET போன்றிருக்கக்கூடிய, பள்ளி மாணவர்களை தொடர்ந்து சிக்கல்களுக்கு உள்ளாக்கக்கூடிய, நவீன குலக் கல்வி திட்டத்தை இன்றைக்கு நம்மீது திணித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கிரமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் உயர் கல்வி கற்பது தடைபடும் என்று பல ஆண்டுகளாக தமிழ்நாடு குரல் கொடுத்து வருகிறது. இருந்தாலும்கூட ஒன்றிய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆனால், அதற்கு மாற்றாக இந்தியாவிலேயே அதிக அளவில் உயர் கல்வி சேர்க்கை மிகுந்த மாநிலமாக திகழ்ந்திடும் நம் தமிழ்நாட்டின் சாதனை திட்டங்களாக, நான்கு இலட்சம் பேர் பயன்பெறும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் 3.8 இலட்சம் பேர் பயன்பெறும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சீரிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். தமிழ்நாடு எங்கும் ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்லூரிகள், அனைத்து கல்லூரிகளிலும் Artificial Intelligence, Data Analysis போன்ற நவீன படிப்புகள், உயர் கல்வியை சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு இயங்கி வருகிறது. ஒன்றிய அரசினுடைய நவீன குலக் கல்வி திட்டத்தை, ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிற இந்த வேளையில், தமிழ்நாடு எல்லோருக்கும் எல்லாம் என்கிற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்நாட்டை வெற்றிப் பாதையிலே முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
நாளேடுகளில் நாம் பார்த்தோம், உத்தரபிரதேசத்திலே கும்பமேளா வந்தது. கும்பமேளாவிற்காக கோடிக்கணக்கான மக்கள் அங்கே வந்தார்கள், இலட்சக்கணக்கான மக்கள் அங்கே திரண்டிருக்கிறார்கள் என்று அங்கே இருக்கக்கூடியவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது வாடிக்கை. ஆனால், அறிவு சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கக்கூடிய மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரையில் 14 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருகைபுரிந்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய எங்களுக்குப் பெருமை. அதுமாத்திரம் அல்ல அதற்கு அருகே அமைந்திருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று நான் சொல்வேன். அது எங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் பெருமையாக நான் சொல்வேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தி மொழியையும், வட மொழியையும் வளர்த்திட பல நூறு கோடி ரூபாய்களை ஒன்றிய அரசு ஒதுக்கி வருகிறது. ஆனால், உயர்தனிச் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை பாதுகாத்து வளர்த்திட மிக மிக குறைவான ஒரு தொகையைத்தான் ஒன்றிய அரசு ஒதுக்கி வருகிறது. ஆனால், அது குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்படாமல், தமிழ் மொழியை வளர்த்திட மட்டுமன்றி, தமிழ்மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்ல எவ்வளவு நிதியையும் ஒதுக்கி, பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்பதை நான் இந்த மன்றத்திலே திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன்.
வான்புகழ் வள்ளுவத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்துடன் ஐ.நா. நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கக்கூடிய 193 நாடுகளிலுள்ள அனைத்து மொழிகளிலும் நம்முடைய குறள் மொழிபெயர்க்கப்படுவது மட்டுமன்றி, ஐந்தாண்டுகளில், அனைத்து தலைசிறந்த மொழிகளிலும், பல்வேறு உலக மொழிகளிலும் தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்லவும், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் முக்கிய நாடுகள் மட்டுமன்றி, பல உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சிகள் நடத்தவும் இந்த அரசு திட்டமிட்டிருக்கிறது.
பேரவைத் தலைவர் அவர்களே, இந்தியாவிலே புரையோடி சென்றிருக்கிற சாதி பாகுபாட்டை மென்மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு முற்றாக நிராகரிக்கும் என்கிற நிலையில், அதற்குமாறாக அவரவர் விருப்பப்பட்ட கைவினை பொருட்களை உருவாக்குவதற்காகவும், நவீன முறையில் செயலாற்றுவதற்காகவும் கலைஞர் கைவினைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரையில் 7,297 நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, 28 கோடி ரூபாய் மானியத்தோடு 138 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் விரைவில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான திருக்கோயில்களைக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதை நம்முடைய மாமன்ற உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 2,662 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஆன்மீக அன்பர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 7,327 ஏக்கர் நிலங்களும், 36.38 இலட்சம் சதுர அடி மனைகளும், 5.98 இலட்சம் சதுர அடி கட்டடங்களும் இந்த அரசு எடுத்திருக்கக்கூடிய பெரும் முயற்சியின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, திருக்கோயிலினுடைய வசமாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த முயற்சிகளின் காரணமாக பெறப்பட்டிருக்கக்கூடிய இத்தகைய சொத்துக்களுடைய மொத்த மதிப்பு 7,185 கோடி ரூபாயாகும் என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
அதேபோல, ஊரக வளர்ச்சித் துறையை எடுத்துக்கொண்டால், கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியிலே 10 ஆண்டு காலம் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை, கடந்த 5 ஆண்டுகளிலே, நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து அந்த 5 ஆண்டுகளிலே அடுத்த கட்டமாக இருக்கக்கூடிய அந்த 5 ஆண்டுகாலங்களில் நீங்கள் வீடு வழங்குவதற்கு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். அதாவது வருடத்திற்கு 20 ஆயிரம் வீதம் 1 இலட்சம் பசுமை வீடுகள் கட்டப்படும் என்று நீங்கள் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். ஆனால், அந்த ஒரு இலட்சம் வீடுகளில், திராவிட மாடல் ஆட்சியாக இருக்ககூடிய முதலமைச்சருடைய ஆட்சிப் பொறுப்பேற்கக்கூடிய அந்தக் காலத்தில் 24 ஆயிரம் வீடுகள் கட்டப்படாமலே இருந்தது. 25 சதவிகிதமான வீடுகள் அன்றைக்கு கட்டப்படவில்லை. வீடுகளினுடைய கட்டுமானப் பணிகளுக்கு அன்றைக்கு வெறும் 2.10 இலட்சம் ரூபாய் மட்டும்தான் அன்றைக்கு நீங்கள் கொடுத்தீர்கள். அது அந்த 5 ஆண்டுகளிலே ஒரு இலட்சம் வீடுகள் என்று நீங்கள் திட்டமிட்டு, ஆமை வேகத்திலே நடந்து கொண்டிருந்த அந்த முயற்சிகள், திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிறகு அது jet வேகத்திலே பயணிக்கத் துவங்கி, இன்றைக்கு ஒவ்வொரு வீடும், ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 360 சதுரடிப் பரப்பளவில், ஆண்டுக்கு 1 இலட்சம் வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் குடிசை வீடுகளை concrete வீடுகளாக்கும் நோக்கத்தோடு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக இதுவரை ஏறத்தாழ 2,150 கோடி ரூபாய் செலவுகள் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து வீடுகளும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்பதை நம்முடைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் இங்கே தெரிவித்திருக்கிறார்கள். எனவே, 5 ஆண்டுகளிலே 1 இலட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கக்கூடிய நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், ஆண்டுக்கு 1 இலட்சம் வீடுகள் கட்டக்கூடிய நாங்கள் எங்கே இருக்கிறோம் என்கின்ற ஒப்பீட்டை நான் உங்களுடைய மனச்சான்றுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல, குடிநீர் வடிகால் வாரியம். அதன்மூலமாக 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகளில் மொத்தம் 88 திட்டங்கள் 7,817 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு, மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். அதேவேளையில் 4 ஆண்டுகள் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு, 16 புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு மொத்தம் 178 குடிநீர் திட்டங்களுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 3 கோடியே 23 இலட்சம் மக்கள் பயன்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, அதைபோல, இளைஞர் நலன். தமிழ்நாட்டினுடைய அரசின் துறைகளிலேயே மிக சமீபக் காலத்தில், இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் இந்தத் துறைக்கு பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிறகு மிக அதிகமான கவனம் தமிழ்நட்டிலே மட்டுமின்றி, இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனம் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய ஒரு துறையாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைந்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் நம்முடைய துணை முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் இந்தத் துறைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தியிருக்கக்கூடிய சாதனைகளைப் பார்த்து, உலகெங்கும் இருக்கக்கூடிய விளையாட்டு அமைப்புகள் தங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளை தினமும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். 2011 முதல் 2021 ஆம் ஆண்டுவரை, சராசரியாக 1 ஆண்டுக்கு 188 கோடி ரூபாய் அளவில் சுமார் 2 ஆயிரத்து 77 கோடி ரூபாய் கடந்த 10 ஆண்டுகளிலே அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கழகம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 386 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரையில் 1,933 கோடி ரூபாய் 5 ஆண்டுகளிலே அதிக அளவிலே நிதி ஒதுக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை அந்த 10 ஆண்டு காலங்களில், நீங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறபோது பெரிய அளவிலே சாதனைப் படைத்திருக்கக்கூடிய 3 நபர்களுக்கு மட்டுமே, பொதுத் துறை நிறுவனங்களிலே வேலைவாய்ப்புகளை நீங்கள் பெற்றுத் தந்தீர்கள்.
ஆனால், கழகம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டுகளில், 93 விளையாட்டு வீரர்களுக்கு, வீராங்கனைகளுக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை நாம் வழங்கியிருக்கிறோம் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
அதைப்போல, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற முழக்கம் மனித இனத்தில் மட்டுமல்ல, புவியில் வாழும் அனைத்து இனங்களுக்கும் அது உள்ளடக்கியது என்கின்ற புரிதலோடு நம்முடைய அரசு செயலாற்றி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 19 ஈர நிலங்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்களுக்கான Ramsar சாசனத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக்காலங்களில் பெரியளவில் எதுவும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதையும் நான் சொல்லாமலேயே நம்முடைய உறுப்பினர்கள் நன்றாக அறிவீர்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த நான்கு நாட்களாக, 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தில் பேசியிருக்கக்கூடிய நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பல நல்ல கருத்துகளை இங்கே வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியினை நான் உரித்தாக்குகிறேன். குறிப்பாக, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மருத்துவ சுற்றுலா-medical tourism குறித்து, அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். அவருக்கு நான் சொல்வதெல்லாம், தமிழ்நாடு, இந்தியாவிலேயே மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு மாநிலமாக இன்றைக்கு உருவெடுத்து வந்திருக்கிறது. மருத்துவத்தின் பொருட்டு, பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தங்களுடைய சிகிச்சைக்காக, சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய பகுதிகளுக்கு நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அதைக் கருத்தில்கொண்டு, மருத்துவத் துறையிலே பல நல்ல திட்டங்களை தீட்டுவதற்காக, முதலமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு, உறுப்பினர்கள் அவர்கள் கோரியவாறு medical tourism வரவேண்டும் என்கிற அறிவிப்பை சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையின்மீது, நம்முடைய சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் உரையாற்றுகிறபோது, அவர்கள் உங்களுக்கு நல்ல செய்தியினை தருவார்கள் என்பதை நான் உங்களிடத்திலே தெரிவிக்க விரும்புகிறேன்.
அதேபோல, இங்கே பேசிய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பலவகை தொழில்நுட்பக் கல்லூரி-polytechnic-களில் 4.0 தரத்தில் எப்போது நீங்கள் தரமுயர்த்தி தருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கான கட்டுமான பணிகள் விரைவிலே தொடங்கி, இந்த கல்வியாண்டிலேயே அவை நிறைவேற்றப்படும் என்பதை அவர் இந்த அவைக்கு வராவிட்டாலும்கூட இந்த அவையின் மூலமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்கள் தமிழ்நாட்டிலே செழித்திருந்த, சமண, பௌத்த பண்பாட்டு சிறப்புகளை தெளிவுபடுத்தும்விதமாக, காஞ்சிபுரத்திலோ அல்லது நாகப்பட்டினத்திலோ ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று இங்கே பேசினார். பலமுறை எங்களிடத்திலும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். நாளந்தாவிற்கு இணையான காஞ்சி மாநகர் பகுதிகளில் கல்வியில் சிறந்து, உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல சிந்தனையாளர்களும், அறிஞர்களும் ஈர்த்த பெருமையை உடையது. ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை கவனமாக பரிசிலித்து, சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் அனுமதியோடு, அதற்குரிய அறிவிப்பினை நம்முடைய அரசு வெளியிடும் என்பதை நான் இங்கே உங்களிடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
அதைப்போல, இந்த விவாதத்தில் பங்கேற்று நேற்று இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அவர்கள் GST வரி விதிப்பிலே வரக்கூடிய சிக்கல்கள் மற்றும் பாதகங்களையெல்லாம் இங்கே சொன்னார்கள். அவற்றையெல்லாம், ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருக்கக்கூடிய GST Council meeting-ல் உரிய முறையில் எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வுகளை நாங்கள் காண்போம் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். நேற்று பேசும்போது அவர் இன்னொன்றையும் சொன்னார். பேசி முடிக்கும்போது கடைசியாக சொல்லிவிட்டு சென்றீர்கள். திட்டத்தை அறிவித்திருக்கிறீர்கள். அடுத்த 2 ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டிலே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து ஒரு கூட்டல் கணக்கு போட்டுப் பார்த்தால் ஒரு laptop-ற்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. 10 ஆயிரம் ரூபாயில் எத்தகையதொரு தரமான கணினியை வழங்க முடியும் என்று அவர்கள் ஒரு மனக்கணக்கைப் போட்டு இங்கே பேசினார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், இந்தத் திட்டம் அறிவிக்கின்றபோது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் மாணவர்கள் என்று சொன்னால், அதற்கு முதற்கட்டமாக இந்த ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம்.
அப்படியென்றால், அடுத்த ஆண்டு வருகிறபோது மேலும் அதற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறபோது, இப்போது நீங்கள் அந்தக் கணக்கை கூட்டி, கழித்து பார்ப்பீர்கள் என்று சொன்னால் அந்த கணக்கிலே உங்களுக்கு வரும். எனவே, மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியை பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு தரமான மடிக்கணினியை வழங்கிட இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது. எனவே, தரம் குறித்த கவலை உங்களுக்கு நிச்சயமாக தேவையில்லை என்பதையும் நான் சொல்வேன். எனவே, சராசரியாக எடுத்துக்கொண்டால் ஒரு மடிக்கணினி 20 ஆயிரம் ரூபாய் அளவிலே இருக்கும் என்கின்ற வகையிலே எதிர்பார்த்து, இந்த வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாய் அதற்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. திறந்தவெளி ஒப்பந்தங்கள் அதற்கு கோரப்பட்டு, முடிவு செய்த பிறகு, அதற்கு பிறகு தெரியவரக்கூடிய விலைக்கு ஏற்ப, இதற்கான நிதி ஒதுக்கங்கள் மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, உறுப்பினர் அண்ணன் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புவதெல்லாம் நம்முடைய கல்லூரி மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பி பயன்படுத்தும்வகையில், ஏன் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே கொஞ்சம் பொறாமைப்படக்கூடியவகையில் தரமான மடிக்கணினிகள் அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உள்ளடக்கங்களுடன் வழங்கப்படும் என்பதை நான் தெரிவிப்பேன்.
இன்னொன்றுகூட நான் உங்களிடத்தில் சொல்கிறேன். தவறாக இல்லை. எல்லோரும் இருக்கிறீர்கள். நான் இந்த நிதி ஒதுக்கம் குறித்து மனக்கணக்கு என்று சொன்னேன். அந்த மனக்கணக்கின் அடிப்படையில், சற்று கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டுவிட்ட என்னுடைய அருமை அண்ணன் அவர்களுக்கும், உட்கார்ந்திருக்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஓர் அன்பான வேண்டுகோளையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கழகத்திலே இருந்தபோதும் சரி, அவர் கழகத்திலிருந்து வெளியேறி அவர் இயக்கம் கண்டபோதும் சரி, அவர்மீது பெரும் மதிப்பினை கொண்டவர்கள் நாங்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், உட்கார்ந்திருக்கிறாரே நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அவரிடத்திலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகுந்த அன்பினை நேரடியாக கொண்டவர்கள். அவருடைய படம் ஒன்று வெளிவருகிறது என்றால், அந்த படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்து என்ன என்று அவரிடத்திலே கேட்கக்கூடிய அளவிற்குகூட உரிமையும், அன்பும் பாராட்டக்கூடிய அளவில் இருந்தவர்கள் நாங்கள்.
அதேபோல, எங்களோடு நீங்கள் அரசியல் களத்திலே நீண்டகாலமாக களமாடிக் கொண்டிருக்கக் கூடியவர்களும் நீங்களாக இருக்கிறீர்கள். தங்களோடு இருக்கக்கூடிய தொண்டர்களும், அதேபோல கொள்கையிலே மாறுபட்டிருந்தாலும், இயக்கப் பற்றின் காரணமாக அவர்களும் அரசியல் களத்திலே களமாடக்கூடிய தொண்டர்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அந்தத் தொண்டர்களோடு ஓர் அரசியல் பயணத்திலே உங்களோடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் இங்கே இணைந்து பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய வேளையில், நீங்கள் கூட்டல், கழித்தல் கணக்கை அண்ணன் தங்கமணி அவர்கள் இங்கே போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுடைய கூட்டல், கழித்தல் கணக்கை எல்லாம் வேறோர் இடத்திலே உட்கார்ந்து, இன்னொருவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து, உங்களுடைய தொண்டர்களுடைய எதிர்காலம், உங்களுடைய அனுதாபிகளுடைய எதிர்காலத்தை எல்லாம் காலத்திலே நீர்த்துப் போகச் செய்யக்கூடிய அளவிற்கு சாணக்கிய தந்திரத்தோடு, இந்த கணக்குகளை சிலர் எங்கோ உட்கார்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அண்ணன் அவர்களிடம் கேட்டுக்கொள்வேன். இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக நீங்கள் இருந்துவிட்டதைப்போல, உங்கள் மடியிலே இருக்கக்கூடிய கணத்தை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்தும், நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்கள்மீது இருக்கக்கூடிய உரிமை, அன்பின் காரணமாக இங்கே கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார்கள். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, அதேபோல இந்த அவையிலே, தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும் என்கின்ற ஒரு புத்தகம் இங்கே உங்களிடத்திலே வைக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக The Economic Survey of Tamil Nadu 2024-2025 கொடுத்திருக்கக்கூடிய அந்த report-ஐ நாம் வெளியிட்டிருக்கிறோம். பொதுவாக இந்த இரண்டு ஆவணங்களும் இன்றைக்கு பரவலான வரவேற்பை எல்லா தரப்பிடத்திலிருந்தும் பெற்றிருக்கிறது. இந்த ஆவணங்கள் மிகுந்த முயற்சிக்குப் பிறகு, ஏறத்தாழ நான்கு மாத கால உழைப்பிற்கு பிறகு, இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதை வழிகாட்டிய பெருமை நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கிறது. இந்த இரண்டு ஆவணங்களும் மிகப்பெரிய அளவிலே உருவாக்கப்படுவதற்கு, உள்ளபடியே சொல்ல வேண்டுமென்று சொன்னால் தன்னுடைய இயல்பினால், தன்னுடைய முகம்காட்ட மறுக்கக்கூடிய நம்முடைய மதிப்பிற்குரிய நிதித் துறையினுடைய செயலாளர் அவர்கள், அவர்களே அவருக்கு ஆசிரியர் பொறுப்பாகவும் இருந்து, இந்த இரண்டு ஆவணங்களையும் மிகச் சிறப்பாக அவர் உருவாக்கியிருக்கிறார்கள்.
நான் இந்தநேரத்தில் உங்கள் அனைவரின் சார்பில் நிதித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன், IAS, அவர்களுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றி இருக்கக்கூடிய குழுவினருக்கும் நான் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய உரையினை நான் நிறைவு செய்யக்கூடிய கட்டத்திற்கு முன் சில செய்திகளை நான் உங்களிடத்திலே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்கென சில தனித்துவமான கதைகளும், வரலாறுகளும் கால வெளியிலே நிரம்ப இருக்கிறது. அதில் ஒன்றை நான் இந்த அவைக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். திருவீழிமிழலை என்கிற ஒரு ஊர் தமிழ்நாட்டிலே திருவாரூர் மாவட்டத்திலே இருக்கிற ஒரு ஊர். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும், இன்றைய திருவாரூர் மாவட்டத்திலும் இருக்கக்கூடிய ஊர். இசை வல்லுநர்களாலே இன்றைக்கும் மிகப்பெரிய அளவிலே புகழ் அடைந்திருக்கக்கூடிய அந்த ஊர் திருவீழிமிழலை. சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக வௌவால்நத்தி மண்டபம் என்றுகூட ஒரு மண்டபம் உண்டு. தமிழ்நாட்டிலே சிற்பக் கலையைக் கோயில்களிலே செய்யக்கூடியவர்கள் சில ஊர்களை விலக்கிவிட்டு அதற்கு புறனடை செய்வார்கள். அதிலே இருக்கக்கூடிய அந்த வௌவால்நத்தி மண்டபமும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர் அந்த ஊர்.
அந்த ஊருக்கு மேலும் ஒரு சிறப்புண்டு. அந்த ஊருக்கு நான் தொடக்கத்திலே சொன்னதைப்போல 7 ஆம் நூற்றாண்டிலே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் அந்த ஊருக்கு வந்து தங்கி இருந்தார்கள் என்பது வரலாறு. அப்படி அவர்கள் தங்கி இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் அந்தப் பகுதியிலே மிகப்பெரிய ஒரு பஞ்சம் ஏற்படுகிறது. நம்முடைய தமிழ்நாட்டில் பழைய பெரியவர்களை எல்லாம் நீங்கள் கேட்டுப் பார்த்தீர்களென்றால் தாது வருச பஞ்சம் என்று ஒரு பஞ்சத்தை பற்றி சொல்வார்கள். அந்தப் பஞ்சத்தில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியிலே இருக்கிறபோது தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர்கள் கொத்துக்கொத்தாக மடிந்தார்கள் என்று சொல்வார்கள். அதேபோன்று ஒரு பெரிய பஞ்சம் அந்த காலத்திலேயே உருவாகி இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி மக்கள் பசியால், பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் அங்கிருக்கக்கூடிய அந்த மக்களுடைய துயரினை அவர்கள் படக்கூடிய கஷ்டத்தைப் பார்த்து பொறுக்க முடியாமல் ஞானசம்பந்தர் அங்கே இருக்கக்கூடிய மிழலைநாதராக இருக்கக்கூடிய அந்த ஊர் இறைவனைப் பற்றி, பார்த்து ஒரு பாடல் பாடினார்.
‘வாசி தீரவே, காசு நல்குவீர்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.’
என்று கேட்டார். நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள், மிழலையில் இருக்கக்கூடிய சிவபெருமானே எங்கள் மக்களுடைய கஷ்டங்களை போக்குவதற்காக நீங்கள் காசு தந்து அருள வேண்டுமென்று மனமுருகி ஞானசம்பந்தர் பெருமான் அங்கே இருக்கக்கூடிய சிவபெருமானிடத்திலே கேட்டதாகவும், உடனடியாக, அங்கே இருக்கக்கூடிய இறைவன் மக்களுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதற்காக ஞானசம்பந்தருக்கு அந்த இறைவனே நேரிலே வந்து பொற்காசுகளை வழங்கி அந்த பொற்காசுகளின் வாயிலாக அவர் அந்த நாட்டு மக்களுடைய கஷ்டங்களை, பசி, பட்டியினிலிருந்து போக்கினார் என்பது தமிழ்நாட்டிலே கர்ண பரம்பரையாக விளங்கப்படக்கூடிய ஒரு கதை.
அந்தக் கதையிலே சொல்லும்போதுகூட ஞானசம்பந்தருடைய காலத்திற்கு பிற்காலத்தில் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்,
“மிழலை இருந்தும் நீர் தமிழோடு இசை கேட்கும்
இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”
என்று பாடினார். மக்கள் படும்பாட்டிற்காக நீவிர் காசு கொடுத்தாய் என்பதைத் தாண்டி ஞானசம்பந்தர் பாடும் தமிழ் பாட்டிற்காகவும் சேர்த்துத்தான் நீ காசு கொடுத்தாய் என்று கவிதை நயத்தோடு சுந்தரமூர்த்தி நாயனார், poetic expression என்று சொல்வார்களே அதேபோன்று அவர் சொன்னார்.
நீங்கள் சிவபெருமானை பற்றி சொல்கிறபோது எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று அழைத்தாலும், அவர் தென்னாட்டினுடைய சிவனே என்கிற காரணத்தால் தென்னாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்பட போகின்ற ஒரு காலக்கட்டத்தில் தான் இறைவனாக இருந்தாலும் ஓடி வந்து தமிழ்நாட்டு மக்களுடைய கஷ்டத்திற்கு, துயர் துடைப்பதற்கு கடவுள் வந்து காசு கொடுத்த நிலை அன்றைக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலை என்ன? தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, பசி வந்தாலும் சரி, பட்டினி வந்தாலும் சரி அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சரி, கடவுளே வந்து காசு கொடுத்திருந்தாலும் தமிழ்நாட்டிற்கு காலணா காசு, தம்பிடி காசு நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு இன்றைக்கு விடாப்பிடியாக இருக்கிறது.
கடும் மழையிலும், வெயிலிலும் ஓடாய் உழைத்து இன்றைக்கு நம்முடைய தாய்மார்கள் உருகி இருக்கிறார்கள். 100 நாள் வேலையைப் பார்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும். அவர்களுக்குரிய நிதியைக் கொடுங்கள் என்று கேட்கிறோம். ‘காசு தீரவே காசு நல்குவீர்’ என்று கேட்டார்.
நிதி வந்தது. ஒரு இடத்திலே கேட்கிறோம். மத்தியிலே இருக்கக்கூடிய ஒன்றிய அரசிடம் கேட்கிறோம். ஓயாது உழைத்திருக்கக்கூடிய இந்த உழைப்பிற்கு நீங்கள் காசு கொடுங்கள் என்று கேட்டால், உழைத்த உழைப்பிற்கு இன்றுவரை ஊதியம் தராமல் மறுக்கிறார்கள். நம்முடைய குழந்தைகளின் கல்விக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். நீட்டிய இடத்திலே கையெழுத்தைப் போட்டுக்கொண்டு, நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு போ என்று சொல்லக்கூடிய அந்த வல்லாதிக்க மனோபாவம் அதன் காரணமாக தமிழ்நாடு இன்றைக்கு வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி நீங்கள் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனால்தான் நாங்கள் உரிய நிதியை விடுவிப்போம் என்று நீங்கள் சொன்னால், ‘எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன்’ என்கின்ற அந்தத் தன்மான உணர்வோடு 2 ஆயிரம் கோடி அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாயை நாங்கள் இழந்தாலும் எங்கள் கொள்கையை நாங்கள் இழக்கமாட்டோம் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பிரகடனம் இன்றைக்கு செய்திருக்கிறார்.
பேரவைத் தலைவர் அவர்களே, வரலாற்றிலே இன்னுமொரு முக்கியமான செய்தியை நான் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கென்று சில தனித்துவமான குணங்கள் உள்ளதாக நான் சொன்னேன். உப்பு மீதான தீர்வை. இது ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிலே நடந்த சம்பவம். உப்பு மீதான தீர்வையை ஒரு மணங்கிற்கு 8 அனாக்களாக உயர்த்துமாறு சென்னை மாநகர அரசுக்கு அன்றைய இந்திய அரசு உத்தரவிட்டது. இதை சென்னை மாகாண அரசு அன்றைக்கு எதிர்த்தது. உப்பு மீதான வரி என்பது மக்களுடைய ஆதரவை இழக்கக்கூடிய வரி. உப்பின்மீது ஏற்கெனவே நாம் விதித்துள்ள வரிச் சுமை அதிகமானது. உழைக்கும் மக்கள் தான் இந்த உப்பை அதிகம் வாங்கி சாப்பிடக்கூடியவர்கள். விலை அதிகரிப்பின் காரணமாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவைப்படும் அளவிற்கு உப்பு வாங்க காசில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்று சென்னை மாகாணத்தினுடைய அன்றைய Governor-ஆக இருந்த Trevelyan (Sir Charles Edward Trevelyan) இதைக் கடுமையாக எதிர்த்தார். Trevelyan அவர்களுடைய கருத்தை நிர்வாகக் குழுவிலிருந்த பிரதிநிதிகள் 2 பேர் அன்றைக்கு ஆதரித்தார்கள். வரியை உயர்த்துவதற்குப் பதிலாக வரியைக் குறைத்தால், உப்பு அதிகமாக வாங்கப்படும் என்றும் அதன் வாயிலாக வருவாய் உயரும் என்றும் அவர்கள் யோசனையினைத் தெரிவித்தார்கள். உப்பு விற்பனைக் கூடங்களைப் புதிதாகத் திறந்தும், வரி ஏய்ப்புக்கு இடமில்லாமல் உப்பு தயாரித்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கடுமையாகக் கண்காணித்தும் வரி வருவாயை நாம் அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்ற யோசனையையும் அன்றைக்குத் தெரிவித்தார்கள். இந்திய அரசுக்கே சென்னை மாநகரத்தினுடைய Governor அவர்கள் அன்றைக்கு அந்த ஆலோசனையை வழங்கினார்கள். ஒரு காலத்திலே சென்னையிலிருந்த Governor-கள் எல்லாம் டெல்லியிலே இருக்கக்கூடிய அரசாங்காத்திற்கு நல்ல ஆலோசனைகளை எல்லாம் அப்போது வழங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தேயிலை சாகுபடி மீதான அந்த வரியையும் கைவிட வேண்டுமென்று அன்றைக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், உப்பு மீதான உற்பத்தி வரி மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு விகிதங்களில் 1869-களில் அதிகரிக்கப்பட்டது. சென்னை மாநகரத்தின் Governor-க்கு செவி சாய்க்காமல் அன்றைக்கு மத்தியிலிருந்த இந்திய அரசு உப்புக்கு வரி விதித்ததுதான் பிற்காலத்தில் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அதை முன்னெடுத்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே அன்றைக்கு நிலைகுலைய வைத்தது என்பதை நான் உங்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். நான் இதன் மூலமாக இந்த அவைக்கு தெரிவிப்பது என்னவென்றால், மக்கள் நலனுக்கு எதிராக தலைநகரிலிருந்து எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிரான குரல் கொடுப்பதற்கு சென்னை மாகாணம் வழி வழியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மக்கள் பக்கத்தில்தான் என்றைக்கும் இருப்போம் என்பது இந்த மண்ணின் குணம் என்பதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, வடக்கே இருந்து வரக்கூடிய எந்தவொரு ஆதிக்கத்திற்கும் தமிழ்நாடு வரலாற்றில் எந்த காலக் கட்டத்திலும் தலை வணங்கியதில்லை என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தார். மகா அலெக்சாண்டருடைய வெற்றிப் பாதையில் தமிழ்நாடு ஒருபோதும் இருந்ததில்லை. மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரால் தமிழ்நாட்டு எல்லையைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை. அசோக சக்கரவர்த்தியினுடைய ஆட்சிச் சக்கரம் தமிழ் நிலப்பரப்பில் சுழலவில்லை. குப்தர்களின் காலம் ‘பொற்காலம்’ என்று அழைக்கப்பட்டாலும் சமுத்திரகுப்தனுடைய காலடி இந்த தமிழ் மண்ணில் கடைசி வரை படியவில்லை. கனிஷ்கருடைய ஆட்சி எல்லைகள் என்பது விந்தியத்திற்கு தெற்கே ஒருபோதும் தாண்டியதில்லை. அக்பர் பாதுஷாவின் ராஜ்ஜியம் தமிழ்நாட்டை எட்ட முடியவில்லை. இந்துஸ்தானின் பாதுஷா என்று மட்டுமில்லாமல் நான் இந்த Universe-க்கே நான் தான் ராஜா ‘Emperor of the Universe’ என்று தன்னை Alamgir என்று அழைத்துக்கொண்டாரே ஓளரங்கசீப், அந்த ஓளரங்கசீப்பினால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. அந்த ஓளரங்கசீப்பினாலேயே ‘மலை எலி’ என்று அழைக்கப்பட்டாரே மராட்டிய மண்ணின் சத்ரபதி சிவாஜி அவர்கள், அவரால்கூட தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை.
பேரவைத் தலைவர் அவர்களே, இந்த வரலாறு தமிழ் மண்ணிற்கு மட்டுமே உரித்தான வரலாறு என்பதை நான் இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, நான் முன்னரே சொன்னதுபோன்று, முதல்வர் அவர்கள் ஊட்டிய அந்த தன்மான உணர்வின் வழியில் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும், மானம் காக்கும் நாடு, எங்கள் தமிழ்நாடு என்கின்ற அந்த உறுதியோடு, நம்முடைய முதல்வர் அவர்கள் பெருமையோடு சுட்டிக்காட்டினாரே, அதுபோல பாடமாக நின்றுகொண்டிருக்கும் எங்களுடைய அருமைத் தலைவர் கலைஞர் அவர்களின் அழியாத காவிய வரிகளை, நான் நினைவுகூர்ந்து, என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
“புலியின் குகையினிலே அழகில்லை-புதுமையல்ல
கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம்” - எங்கள் தமிழ்நாடு.
“இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்
அதுவும் மானம், மானம் என்றே முழங்கும்”
என்றே சொல்லி, என் உரையை நான் நிறைவு செய்கிறேன், நன்றி. வணக்கம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!