Politics

இந்தி திணிப்புக்கு எதிராக போர்க் களத்தை அமைத்து விட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - முரசொலி !

முரசொலி தலையங்கம் (22.02.2025)

இளைஞரணியின் மொழிப்போர்க் களம்!

மாண்புமிகு துணை முதலமைச்சர் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான போர்ப் பிரகடனத்தைச் செய்துள்ளார்கள்.

திமுக இளைஞரணி மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றுள்ளது. இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மூலம், மொழிப்போர்க் களத்தை உருவாக்கி உள்ளார்கள்.

‘’முதல் மொழிப் போரை முன்னின்று நடத்திய தந்தை பெரியார், இருமொழிக் கொள்கையைக் காத்த பேரறிஞர் அண்ணா, ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே, நீ நாடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே’ என்று 13 வயதில் தமிழ்க்கொடி ஏந்திய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில், கழகத் தலைவர் தலைமையில், இளைஞர் அணிச் செயலாளர் வழிகாட்டுதலில், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்து, மொழியுரிமையை நிலைநாட்டுவோம்” என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கையைத் திணிக்கப் பார்க்கும், நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் இளைஞர் அணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காலம்தோறும் அவர்கள் இந்தியைத் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ‘திணிப்பது உன் வழக்கம் – எதிர்ப்பது எமது கடமை’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளைச் சொல்லி எழுச்சி ஊட்டி இருக்கிறார் திராவிட நாயகன் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஓர் இனத்தை அடிமைப்படுத்த வேண்டுமானால், அந்த இனத்தவர் பேசும் மொழியை முதலில் அழித்துவிடு – என்பது ஆதிக்க வர்க்கத்தின் வழிமுறை ஆகும். அத்தகைய ஆதிக்கச் சிந்தனையின் அடிப்படையில்தான் இந்தி திணிக்கப்படுகிறது. ‘’உங்களுக்கு நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்வேன், இது மொழிப்பிரச்சினை அல்ல. இது ஆதிக்கப் பிரச்சினையே தவிர மொழிப்பிரச்சினை அல்ல” என்று பேரறிஞர் அண்ணா தெளிவாகச் சொன்னார். அந்த ஆதிக்கத்தை ஏற்கமாட்டோம் என்பதன் அடையாளமாக அதனை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு என்பது 1938 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி என இயங்கிய காலம் அது. தமிழறிஞர்களும், இறையியலாளர்களும், அரசியல் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து நடத்திய போராட்டம் அது. 1940 வரையில் இரண்டாண்டு காலம் தொடர்ச்சியாக நடந்தது. ‘தமிழ்நாட்டில் சுத்த தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுப்பதற்கான போர்’ என்று இதனை தந்தை பெரியார் சொன்னார். ஆரியச் சூழ்ச்சிக்கும் திராவிட வீரத்துக்குமான போர் என்று சொன்னார். இந்தி கட்டாயப் பாடம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

மீண்டும் 1948 ஆம் ஆண்டும் இந்தி எதிர்ப்புக் களம் தமிழகத்தில் அமைந்தது. அப்போது திராவிடர் கழகமாகச் செயல்பட்ட காலம். தமிழறிஞர்களும், இறையியலாளர்களும், அரசியல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம் அது. ‘இந்தப் போராட்டக் களத்தில் முதல் சர்வாதிகாரி’, என அறிவிக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் தலைமையில் முதல் மறியல் நடந்தது. 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தி எதிர்ப்புக் களத்தில் முன்னணியில் இருந்தது.1950 ஆம் ஆண்டு கட்டாய இந்தி கைவிடப்பட்டது.

1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திக்குச் சார்பானது. அதன் 17 ஆவது பாகத்தில் 343 முதல் 351 வரையிலான பிரிவுகள் அலுவல் மொழிகள் பற்றிச் சொல்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்குள் -– அதாவது 1965 ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியை கோலோச்சச் செய்ய வேண்டும் என்கிறது இது.

1965 ஆம் ஆண்டு இந்தியை ஆட்சி மொழியாக உட்கார வைப்பதற்கான வேலைகள் 1950 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டதை உணர்ந்த பெரியாரும் அண்ணாவும், தங்கள் இயக்கங்களை இந்தி எதிர்ப்பை நோக்கியதாக வடிவமைத்தார்கள். தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.

1963 மொழிப் போர்க்களத்துக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பைப் பெற்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஒன்றரை ஆண்டு காலம் நடைபெற்றது அந்தப் போராட்டம். அதுதான் இறுதியில் 1965 மொழிப் போராக வெடித்தது. மாணவர்கள், அப்போர்க்களத்தில் மாவீரர்களாக வலம் வந்தார்கள். அந்தப் போராட்டத்தைத் தூண்டியதாக தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி பாளைச் சிறையில் அடைக்கப்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதன் தொடர்ச்சியாக இந்தித் திணிப்பை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்தே வந்தார்கள்.

2012 ஆம் ஆண்டு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடப்புத்தகத்தில் 1965 மொழிப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துப்படம் இடம்பெற்றிருந்தது. அதனை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதன்பிறகு அந்தக் கருத்துப்படம் நீக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திக்கு ஆதரவாகப் பேசி வந்தார். “அவர் தனது கருத்தை திரும்பப் பெறாவிட்டால் 1965 மீண்டும் திரும்பும்” என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் சொல்லி விட்டு வந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்வாங்கினார்.

இப்போது புதிய தேசியக் கொள்கை என்ற கொல்லைப் புற வழியாக இந்தி திணிக்கப்படுகிறது. இதற்கு எதிராக போர்க் களத்தை அமைத்து விட்டார், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.

இது இந்தித் திணிப்புப் போராட்டக் களம் மட்டுமல்ல, தமிழினத்தைக் காக்கும் போராட்டக் களம். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கலைஞர் – திராவிட நாயகன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் கொள்கைகளை வென்றெடுக்கும் களம். மாண்புமிகு உதயநிதி அவர்கள் உருவாக்கும் களம், ஆதிக்க வர்க்கத்துக்கு நிரந்தரப் பாடம் புகட்டும் களமாக அமையட்டும்.

Also Read: ”தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்” : ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!