Politics

இந்தியர்களை அவமதித்த மோடி அரசு! : விலங்குகளோடு வந்தவர்களை காவல் வாகனத்தில் ஏற்றிய கொடுமை!

இந்தியர்களை இந்துத்துவவாதிகளாக பெருமைப்படுங்கள் என வலியுறுத்தும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ், சுயமரியாதையைக் கைவிடுங்கள் என்றும் சொல்லாமல் சொல்லி வருகிறது.

சீனா, இந்திய எல்லையைக் கைப்பற்றுகிறதா? “அது நம் நாட்டை விட பெரிய நாடு எனவே பொருட்படுத்த வேண்டாம்”, இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை வஞ்சிக்கிறதா? “பெரும் சிக்கல் இல்லை”, அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் விலங்குகளுடன் அழைத்து வரப்படுகிறார்களா? “கவலையில்லை” என்பது போலதான், இந்திய ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

ஒன்றியத்தில் மட்டும்தான் வஞ்சிப்பா? என்றால், பா.ஜ.க ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும் வஞ்சிப்பு மட்டுமே என்பது ஒவ்வொரு நாளும் பல வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது.

போராடும் விவசாயிகள் மீது தடியடி நடத்துவது, வன்முறையை கட்டுப்படுத்தாமல் வன்முறைக்கு வழிவகுப்பது, மத பிரிவினையை வளர்ப்பது போன்ற கண்டனத்திற்குரிய நடவடிக்கைகளை பா.ஜ.க அரசுகளே முன்னெடுத்து வருகின்றன.

இது போன்ற கண்டிக்கத்தக்க செயல்களில் புதிதாக இணைந்துள்ளது, அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு நேர்ந்த அவமதிப்பு.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்களை திரும்பி அனுப்புகிறோம் என்ற பெயரில் கை, கால்களில் விலங்குகளைப் போட்டு இந்தியா அழைத்து வருவது டிரம்ப் ஆட்சிக்கு பிறகு வன்மையான முறையில் கையாளப்படுகிறது.

இதுவரை மூன்று விமானங்களில் இவ்வாறு, இந்தியர்கள் இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது முறை இந்தியர்களுக்கு விலங்கிட்டபோது அமெரிக்காவில் தான் இந்திய பிரதமர் உறவாடிக்கொண்டிருந்தார் என்பது மேலும் மக்களை அதிருப்தியடைய செய்வதாய் அமைந்துள்ளது.

அவ்வாறு நேற்று (பிப்.16) அழைத்துவரப்பட்ட இந்தியர்களை அமெரிக்காதான் அவமதித்தது என்றால், கூடிதலாக அரியானா பா.ஜ.க அரசுன் கைதிகள் ஏற்றும் வாகனத்தில் ஏற்றி அவமதித்துள்ளது. இதற்கு, பஞ்சாப் மாநில அரசு கடுமையான விமர்சனத்தை முன்வைத்த பிறகு, மூன்றாவது சுற்று முதல் இந்தியர்களை வேறு வாகனத்தில் அழைத்து சென்றது அரியானா அரசு.

இதுபோன்று, இந்தியர்களை தொடர்ந்து கைவிடும், ஏளனப்படுத்தும் ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க அரசுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எனினும், விமர்சனங்களுக்கு செவிகொடுக்காமல், தனது கண்டித்தக்க போக்கையே தொடர்ந்து வருகிறது பா.ஜ.க அரசு.

Also Read: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.121 கோடி... புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!