Politics

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு : 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் !

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் மீது கடந்த 10 ஆம் தேதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது அதன் எழுத்து மூலமான உத்தரவு வெளியாகி உள்ளது.

அதில் உச்ச நீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அதற்கு ஒன்றிய அரசும், மனுதாரரான தமிழ்நாடு அரசும் எழுத்து மூலமான வாதங்களை ஒருவாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் விவரம் :

  • மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் அந்த மசோதாவை திருத்தங்கள் செய்தோ, அல்லது திருத்தங்கள் இல்லாமலோ நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு எடுக்க முடியுமா?

  • மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் முடிவெடுக்கும் போது, அது அனைத்து விதமான மசோதாக்களுக்கும் பொருந்துமா அல்லது மாநில அரசுக்கு அப்பாற்பட்ட விவகாரங்களாக கருதப்படும் குறிப்பிட்ட சில மசோதாக்களுக்கு மட்டும் பொருந்துமா?

  • மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் போது, அரசியல் சாசன பிரிவு 200 கீழ் ஆளுநர், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டுமா அல்லது தனிப்பட்ட முடிவை எடுக்க முடியுமா?

  • தனிப்பட்ட அதிகாரம் (Pocket Veto) என்பதன் கருப்பொருள் என்ன? அரசியல் சாசன பிரிவுகள் 111, 200 மற்றும் 201 ஆகியற்றால் அது உறுதி செய்யப்படுகிறதா?

  • அரசியல் சாசனப் பிரிவு 200 கீழ் மசோதா மீதான முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனக் கூற முடியுமா?

  • அரசியல் சாசன பிரிவு 200 கீழ் நான்கு முடிவுகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?

  • சட்டப்பேரவையில் இரண்டாவது முறை நிறைவேற்றப்படட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்படும் போது, மசோதா மீதான ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டுமா?

  • மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போது, குடியரசு தலைவர் அரசியல் சாசன பிரிவு 201 படி முடிவு எடுக்கிறார். ஒன்றிய அரசின் ஆலோசனை பெற்று செயல்படும் போது மசோதாவிற்கு எதிராக ஒன்றிய அரசு ஆலோசனை கூறி, மசோதா நிராகரிக்கப்படும் போது எழும் சூழல் அரசியல் சாசனத்தின் படி எவ்வாறு கையாளப்பட வேண்டும்?

போன்ற 12 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

Also Read: "பள்ளி மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் !