Politics

கல்வி திட்டத்துக்கு தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட வழங்காத ஒன்றிய பாஜக அரசு : நாடாளுமன்றத்தில் அம்பலம் !

ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி கல்வி நிதியை, தமிழ்நாட்டிற்கு தராமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதற்கு தமிழ்நாடு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மும்மொழி கொள்கை, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பொதுத்தேர்வு போன்ற மாணவர்களின் வஞ்சிப்பு நடவடிக்கைகளை, மாணவர்கள் மீதான திணிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் மறுப்பு தான், நிதி ஒதுக்காததற்கு காரணமாக அமைந்துள்ளது என்று பாஜக தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 'சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற பெயர் கொண்ட கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் வழங்கிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவை கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இத்தனைக்கும் மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட நிலையிலும் நிதி ஒதுக்கப்படாததன் மூலம் பாஜக தங்களை எதிர்க்கும் மாநிலங்களுக்கு வேண்டும் என்றே நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருவது அம்பலமாகியுள்ளது.

Also Read: “ஒன்றிய அரசால் உலகளவில் இந்தியர்கள் அவதிப்படுகிறார்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!