Politics

முருகர் எங்களுக்கும் வேண்டியவர்தான் - மதக்கலவரத்திற்கு என்றும் இடமில்லை : அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றிப்பாதையில் மற்றொரு மைல்கல்லாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்து பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை முன்மொழிந்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்திய காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதுமையான திட்டங்களுக்கு கிடைத்த ஆதரவுதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி. யாரையும் நாங்கள் காப்பியும் அடிக்கவில்லை, ஸ்டிக்கரும் ஒட்டவில்லை. அனைத்தும் எங்களுக்கே உரித்தான திட்டங்கள்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முற்றுபெற்றிருக்கிறது. திறப்பு விழா மட்டும்தான் நடத்த வேண்டும். அதனை தொடர்ந்து விளக்கப்படுத்தி வருகிறோம்.

அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர பழனிசாமி படாதபாடு பட்டுகொண்டிருக்கிறார். அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பேச்சை கேட்பதாக இல்லை. இந்த விரக்தியில் திமுக ஆட்சியின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றபிறகு தொடர்ந்து 11 முறை தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். தொடர்ந்து இந்தனை முறை தோல்வி அடைந்த தலைவர் என்ற சாதனையை பழனிசாமி அடைந்திருக்கிறார். தலைவருக்கான எந்த தகுதியும் அவருக்கு இல்லை என்பது இந்த தோல்விகளின் மூலம் நிரூபணமாகி ஆகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்து - முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள். புதிதாக மதக்கலவரத்தை யார் உருவாக்க நினைத்தாலும் அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எல்லோரையும் நாங்கள் சமமாக எண்ணுகிறவர்கள். நாங்களும் முருகர் எங்களுக்கும் வேண்டியவர்தான்” என தெரிவித்தார்.

Also Read: சென்னையில் மேலும் ஒரு மதி அனுபவ அங்காடி - மகளிர் சுய உதவிக் குழுவினரின் பொருட்கள் விற்பனை!