Politics

அண்ணா பல்கலை. விவகாரம் : காவல்துறை ஆணையருக்கு எதிரான உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் !

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மர்ம நபர் ஒருவரால் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும் முன்னரே சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு சென்னை காவல்துறை ஆணையருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட மாணவி தரப்புக்கு ஆதரவாக உள்ளோம். அவருக்கான அனைத்து உதவியையும் அரசு செய்து வருகிறது.இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் காவல் ஆணையருக்கு எதிராக தெரிவித்த கருத்தை மட்டுமே நீக்க கோருகிறோம்" என்று வாதிட்டார்.

மேலும், "ஒன்றிய அரசின் தொழில்நுட்ப தவறுகளுக்கு காவல்துறை ஆணையர் என்ன செய்வார்? தொழில்நுட்ப தகவல்கள் காரணமாகவே முதல் தகவல் அறிக்கை கசிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை ஒன்றிய அரசு ஒத்துக்கொண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் "சிறப்பு புலனாய்வு குழு விசாரணைககும், நிவாரணம் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டது . தமிழ்நாடு அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் காவல்துறை ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Also Read: அரசுப் பள்ளிகளில் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள்... பள்ளிக்கல்வித்துறை புதிய சாதனை!