Politics

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை !

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பதவிக்காலம் பிப்ரவரி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம் 2023 க்கு எதிரான வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனுக்களை தேர்தல் சீர்திருத்த சங்கம், காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களான பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றி உள்ளதாக தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், புதிய சட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றிய அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள் இது நீதிமன்றத்தின் கருத்துக்கும், சட்ட அதிகாரத்துக்கும் இடையேயான பிரச்னையாக உள்ளது என்று கூறினர். பின்னர் வழக்கை பிப்ரவரி 4 ஆம் தேதி விரிவான விசாரணைக்கு எடுப்பதாக கூறி ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பெரியாரைப் பற்றிப் பேச இந்தக் கழிசடைக்கு அருகதை இருக்கிறதா? - கடுமையாக விமர்சித்த முரசொலி !