Politics

#LIVE : சட்டப்பேரவை 2025 - குற்றவாளிகள் மீது தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை - முதலமைச்சர் உறுதி !

சுரங்கம் ஏலம் விடும் சட்டத்திருத்தத்தை அதிமுக ஆதரித்து பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது !

அதிமுக ஆட்சியின் போது மாநிலங்களவையில் சுரங்கம் ஏலம் விடும் சட்டத்திருத்தத்தை அதிமுக எம்.பி தம்பிதுரை ஆதரித்து பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனை பேரவைத் தலைவரிடம் வழங்க நாங்கள் தயார். அதே போல சுரங்கம் ஏலம் விடும் சட்டத்திருத்தத்தை அதிமுக ஆதரித்து பேசவில்லை என்றால், அதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் வழங்க அதிமுக தயாரா ?

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

Updated at: January 08, 2025 at 1:55 PM

டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு அதிமுகதான் காரணம்!

டங்ஸ்டன் சுரங்கம் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு காரணமே அதிமுக ஆட்சிதான். மாநில அரசின் ஒப்புதல் பெற்று, குறிப்பிட்ட கனிம வளங்களை ஏலம் விடலாம் என்ற முறையை மாற்றி அமைத்து, ஒன்றிய அரசே ஏலம் விடலாம் எனக் கொண்டுவந்த சட்டத்தை அதிமுக தான் நாடாளுமன்றத்தில் ஆதாரித்துள்ளது. இதற்கு மூலக்காரணம் அதிமுகதான்.

- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.

Updated at: January 08, 2025 at 12:52 PM

டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம் !

“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, தமிழ்நாட்டில் ஒருபோது டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என நெஞ்சுரத்தோடு, உறுதிபட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கான தீர்மானமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பட்டுள்ளது” - சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.

Updated at: January 08, 2025 at 12:52 PM

மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விவகாரத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி இல்லை. பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டு உண்மை இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சுற்றுப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளன.

என் தலைமையிலான அரசை பொறுத்தவரை, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியமே தவிர வேறு ஏதும் இல்லை.

தி.மு.க அரசின் மீது களங்கம் ஏற்படுத்துகிறோம் என்ற முயற்சியில் உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள்.

முன்னாள் முதலமைச்சராகவும், இன்னாள் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்ககூடிய எடப்பாடி பழனிசாமி, மாணவி பாலியல் வன்கொடுமை விவாரத்தில் தாழ்ந்து போகும் அளவிற்கு அரசியல் செய்துவருகிறார்.

மகளிருக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் மீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி, களங்கம் ஏற்படுத்த சிலர் எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் எடுபடாது! எடுபடாது! எடுபடாது!

- சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Updated at: January 08, 2025 at 12:52 PM

அதிமுக ஆட்சியில் இதுபோன்ற 100 சார்கள் இருந்தார்கள் !

யார் அந்த சார் என்று பேட்ஜ் அணிந்து வந்திருக்கும் அதிமுகவினரை பார்த்து கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் இதுபோன்ற 100 சார்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே என்ற கேள்வியை எங்களாலும் கேட்க முடியும். யார் அந்த சார் என்று விமர்சிக்கும் அதிமுகவினர் முடிந்தால் ஒன்றிய அரசின் உதவியோடு யார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். இந்த வழக்கில் அரசியல் செய்யவேண்டாம் என்று நீதிமன்றமே சொல்லியபின்னரும் அரசியல் லாபம், வீண் விளம்பரத்துக்காக அதிமுகவினர் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர். 

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

Updated at: January 08, 2025 at 12:52 PM

குற்றவாளிகள் மீது தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் !

சென்னையில் மாணவி சம்மந்தப்பட்ட சென்சிடிவ்வான வழக்கில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கிறார்கள். அந்த பாலியல் வழக்கில் யார் சம்மந்தப்பட்ட இருந்தாலும் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் , குற்றவாளிகள் மீது தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

 - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

Updated at: January 08, 2025 at 12:52 PM

திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி!

கட்டணமில்லா விடியல் பயணத்தில் தொடங்கி, கோடிக்கணக்கான மகளிருக்கு உரிமைத் தொகையை உறுதி செய்து, கல்லூரிக்கு வரும் அரசுப்பள்ளி மாணவிகளை புதுமைப் பெண்களாக வளர்த்தெடுக்கும் மகளிருக்கான ஆட்சி, ‘திராவிட மாடல் ஆட்சி.’

- சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Updated at: January 08, 2025 at 12:52 PM

முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படும். அது ஆளும் கட்சிக்கும் பொருந்தும். போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் எவ்வித பாகுபாடும் இல்லை. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்குவார்கள்.

- சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

Updated at: January 08, 2025 at 12:52 PM

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தது கழக அரசுதான்!

அதிமுக உறுப்பினர் கேள்வியை தாண்டி, தனது தலைவர்களுக்கு வணக்கம் சொல்லுகின்ற வகையில் தவறான தகவலை சொல்லியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் அவசரக் கோலத்தில் ஆண்டின் இறுதியில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 12,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்தது திராவிட மாடல் அரசுதான். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.

- சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ சம்பத்குமாருக்கு, அமைச்சர் பெரியகருப்பன் பதில்!

Updated at: January 08, 2025 at 10:58 AM

விவசாயிகள் பயிர்க்கடன் ரூ.12,000 கோடியை தள்ளுபடி செய்து, அதனை விவசாயிகளுக்கு கொண்டு சென்ற பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உரியது. - சட்டப்பேரவையில், அமைச்சர் பெரியகருப்பன்!

Updated at: January 08, 2025 at 10:56 AM

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் 2025 : 

“ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.1,500 கோடி செலவில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, 4 மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் கூட, ரூ.547 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் கே.என்.நேரு!

“தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சி பகுதியில் சுமார் ரூ.1500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது” - சட்டப்பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

“தமிழ்நாடு முழுவதும் புதிதாக 67 பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை சரவணப்பட்டி பாலம் விரைவில் கட்டப்படும்.” - சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதில்.

“தமிழ்நாட்டில் 17 சட்டக்கல்லூரிகள் செயல்படுகிறது. கடந்த ஆட்சியில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விடுப்பட்ட சட்டக்கல்லூரிகளை திமுக ஆட்சியில்தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியிலும் புதிய சட்டக்கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ஒருபகுதியிலும், சிதம்பரத்திலும் புதிதாக சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” - சட்டப்பேரவையில், அமைச்சர் ரகுபதி தகவல்.

Updated at: January 08, 2025 at 10:55 AM