Politics

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம், அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா : கண்டித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் !

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதுபோது அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் :-

அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து - அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம்.

அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் - அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து- இரவு பகலாக பாடுபட்டு - உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில் - வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத - எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதை விட கேலிக்கூத்தானது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

ஜனநாயகத்தையும் - “நேர்மையான, சுதந்திரமான” தேர்தலையும் தகர்க்க நினைக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிடுக!

கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் - ஜனநாயகத்தின் வேர்களுக்கும் எதிரான மாநில உரிமைகளைப் பறிக்கும் நடைமுறை சாத்தியமற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை - ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து “நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு” அதிகாரத்தின் துணை கொண்டு, அழிக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக சட்ட ஆணையத்தின் முன்பும், இது குறித்து அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர்நிலைக்குழு முன்பும் “அரசியல் சட்டத்திற்கு எதிரான” முயற்சி என்று தொடர்ந்து எதிர்த்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம்- அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் இருந்து பிரிக்க முடியாத ஜனநாயகத்தினை- அந்த ஜனநாயகத்தின் உயிர் மூச்சான நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்குச் சவால் விடும் வகையில் கொண்டு வரப்படும் “ஒரே நாடு - ஒரே தேர்தல்” மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு பதிவு செய்து - அதற்கு பணிந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு இந்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுப்பியிருந்தாலும் - ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திணிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசாதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

Also Read: கட்டணமின்றி நாட்டுடைமையாக்கப்பட்ட கலைஞரின் நூல்கள்... அரசாணையை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன் !